புதன், 18 ஜனவரி, 2017

மெரினா: டார்ச் லைட் ஒளியில் தொடர்ந்த போராட்டம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தமிழகம் முழுக்க கைதானவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது மொபைல் மூலம் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாடுபிடி வீரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றுக் காலை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏராளமான இளைஞர்கள், பொதுமக்களை போலிசார் கைது செய்தனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோரை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் போலிசார் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சேலம், கோவை, விருதுநகர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டோரை விடுவிக்ககோரி மாணவர்கள், இளைஞர்கள் நேற்று காலை முதலே போராடி வந்தனர். சமூக வலைதளங்களின் மூலம் ஒருங்கிணைந்த இவர்களின் போராட்டம் பல மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் முதல்வர் பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இந்நிலையில் நேற்று மெரீனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போதும் கலைந்து செல்லாத இளைஞர்கள் தங்களது மொபைலில் டார்ச் லைட்டை அடித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பெரும்பாலனவர்களில் மொபைல் பேட்டரிகள் அணைந்து விட்ட நிலையில் அப்பகுதி இருளில் இருந்த போதிலும் நள்ளிரவு 12 மணியையும் கடந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக சுமார் 8,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர், மருந்துகள் போன்றவைகளைக் கேட்டு முகநூல் வழியே கோரிக்கைகள் விடுத்தனர். நள்ளிரவுக்கு மேல் அதிகாலை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விடுவார்கள் என்ற செய்தி பரவி வருவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக