திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டத்தை முறியடிக்க பலமான சதிவலை... பன்னாட்டு வணிகம் .. இந்துத்வா பயங்கரவாதம் அதிமுகவின் ஊழல் ...


ஜனவரி 8-ஆம் தேதி உழைப்பாளர் சிலைக்கு முன்னால் 50 பேர் துவங்கிய போராட்டம் 50 லட்சம் பேர் பங்குபெறும் அளவுக்கு மாறும் என்பதும். அந்த போராட்டத்தின் உணர்ச்சி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் திரும்பும் என்பதையும் இரு அரசுகளுமே புரிந்து கொள்ளவில்லை. உளவுத்துறையும் கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களில் முடிவை ஆய்வு செய்து, அதன் வழியில் இதுவும் முடிந்து விடும். மக்கள் கூடி கலைந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டது.
சுமார் 9 நாட்கள் வரை இரு அரசுகளுமே இந்த போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை . பொங்கல் விழாவின் இறுதி நாளன்று அலங்காநல்லூரில் காளைகள் விட முடியாமல் போக லட்சோப லட்சம் மக்கள் தமிழகமெங்கும் திரண்டு போராட அரசு விழித்துக் கொண்டது. காவல்துறையை , ராணுவத்தை வைத்துக்கூட இக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது எனும் நிலையில், டெல்லி சென்ற பன்னீர் செல்வம் மோடியிடம் கோரிக்கை வைக்க அவர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவசர திருத்தச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இதை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போராடும் குழுக்களில் பல குழுக்கள் இருக்க “சட்டம் என்பது ஒன்றுதான் அதில் நிரந்தரச் சட்டம் என்று எதுவும் இல்லை. இந்திய அரசால் நிறைவேற்றப்படும் சட்டம் எதுவும் நிரந்தரமானது அல்ல, அது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டிருக்கும்” என்கிற நிலையில் நிரந்தரச் சட்டம் வேண்டும் எனக் கோருகிறார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
அரசியல் அழுத்தம்
தமிழக வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றில் தன்னெழுச்சியாக இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள். மக்கள் மீது சுமத்தப்படும் அழுத்தங்களே இத்தகைய எழுச்சிகளுக்கு காரணம். பல போராட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு, அரசின் திட்டங்கள் மக்களை பாதிக்கும் விதம் என பல அழுத்தங்களுக்கு ஆட்பட்ட மக்கள் உச்சக்கட்டமாக மோடியின் பண மதிப்பிழப்பால் நொய்ந்து போனார்கள். வெளிப்படையாக இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமாக இருக்கலாம். ஆனால் மெரினாவில் திரண்டிருக்கும் ஒவ்வொருவரின் மனதில் பெருங்கோபம் உருவாக ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் உள்ளது. அதன் சிறு அடையாளம்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோஷம்.
ஆதரித்தவர்களின் குழப்பம்
இந்த போராட்டக் குழுவைப் பொறுத்தவரை போராட்டக் குழு என்ற ஒன்று இல்லை. பலரும் குழுக்களாக போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் பல தரப்பு பிரமுகர்கள் உள் நுழைய முடியாத போதும் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே பாலாஜி போன்றவர்கள் ஆதரித்து போராட்டக் களத்தில் இருந்தார்கள். போராட்டத்தை ஆதரித்து ஆதி சில பாடல்களையும் வெளியிட்டார். அது பெருமளவு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரவும் காரணமாகியது.
ஆனால் இப்போது ஆதி போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதே போல சிவ சேனாதிபதியும் அறிவித்திருக்கிறார். ஆனால் இருவரின் அறிவிப்பிலும் நேரெதிர் வித்தியாசம் உள்ளது.
சேனாதிபதி “போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று காரணங்களைச் சொல்கிறார்” அக்கருத்தை நாம் ஏற்கவும், நிராகரிக்கவும் உரிமை உண்டு.
ஆனால் ஆதி விலகுவதாக மட்டும் சொல்லவில்லை அவரது விஷத்தை போராடும் மக்கள் மீது கொட்டுகிறார். “தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டது போல இருக்கிறது. கொலை செய்யச் சொல்லி தூண்டுகிறார்கள். நம் தலைவர்களை அசிங்கமாகப் பேசுகிறார்கள்” என்கிறார். இப்போராட்டம் துவங்கிய நாளில் இருந்தே அங்கு இருக்கும் ஆதிக்கு இதெல்லாம் முதலில் தெரியாமல் போனது ஏன்? அது மட்டுமல்ல லட்சக்கணக்கான மக்கள் திரள் போராட்டங்களில் தலைவர்களை அனைவரும் மரியாதையாக அழைத்து கோஷம் எழுப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அது அவரவர் வர்க்க வாழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியது. இதெல்லாம் ஆதிக்கு முதலில் தெரியாமல் போனது ஏன் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் மெரினாவில் போராடிக் கொண்டிருக்கும் போது துவேஷத்தை தூண்டுவது போல பேசும் ஆதிக்கு இப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஒரு போராட்டத்தை துவங்குவது எளிது. ஆனால் அதை எங்கு எப்படி முடிக்க வேண்டும் என்பதும் தெரிய வேண்டும். அப்படி முடித்துக்கொள்ள தெரியாமல் சீரழிந்த பல போராட்டங்கள் உண்டு. அதிலொன்றாக மெரினா போராட்டமும் முடிந்து விடக்கூடாது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக