வியாழன், 12 ஜனவரி, 2017

ஜெயாவின் மரணம் .... சசி புஷ்பாவின் புகார் கடிதம் சிபிஅய் நடவடிக்கை வரை ...

 மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, கடந்த டிசம்பர் 19-ந் தேதி சந்தித்து, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க மனு கொடுத்தார். அவரது புகார் கடிதத்தைத் தற்போது சி.பி.ஐ.யின் நிர்வாக அமைப்பான பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பிவைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுக்கப்படும் புகார்களில் உண்மைத்தன்மை இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மற்றவை குப்பைக்கூடைக்குப் போவதும் உண்டு. சசிகலா புஷ்பாவின் மனு, இருபதே நாட்களில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றால், புகாரில் மத்திய அரசுக்கு ஆர்வம் இருப்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
புகார் அளித்த சசிகலாபுஷ்பாவிடம் பேசியபோது, "சசிகலா கும்பலின் சதியால்தான் ஜெயலலிதா மரணமடைந் திருக்கிறார். செப்டம்பர் 22-ந் தேதி எந்த சூழலில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்பதில் தொடங்கி அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள், செலுத்தப்பட்ட மருந்துகள், இதய துடிப்பு நின்றதாகச் சொல்லப்பட்டது வரையிலும் மர்மங்கள்தான். 75 நாட்களில் நடந்த சதியை வெளிக்கொணரத்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருக்கிறேன். என்னை விசாரிக்கும்போது பல உண்மைகளைச் சொல்வேன். சி.பி.ஐ. விசாரணையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நான் ஓயமாட்டேன்” என்றார் சசிகலாபுஷ்பா.நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக