வியாழன், 19 ஜனவரி, 2017

போராட்டத்தின் பின்னணியில் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல .. எத்தனையோ நியாயங்கள் உள்ளன


Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: bus and outdoorதமிழகம் எங்கும் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் பல வகைகளில் 'வால்ஸ்ட்ரீட்' போராட்டத்தை நினைவூட்டுகிறது. உள்ளே புகுந்து ஆதாயம் தேட முனையும் அரசியலாளர்களின் கை மீறிப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பின்னணியில் உளவுத்துறை, மத்திய அரசு என்றெல்லாம் கூறி இளைஞர்களின் இந்தத் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில் இது ஏதோ ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கான போராட்டம் மட்டும் என்றும் வெகுவாகச் சுருக்கிப் பார்க்க வேண்டியதுமில்லை. பல்வேறு காரணங்களால் அரசுகள் மீதுள்ள வெறுப்பு இப்படி வெடித்திருக்கிறது. இதை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வால்ஸ்ட்ரீட் போராட்டம், அரபு வசந்தம், துருக்கி எர்டோகான் அரசுகு எதிரான கெய்சி பூங்கா எழுச்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டனவே என மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றலாம். ஆனால், குறிப்பாக வால்ஸ்ட்ரீட் போராட்டத்தைப் பொருத்த மட்டில் அதன் நோக்கம் ஆட்சி மாற்றம் என்பதல்ல. மாறாக அது உலகமயம், சந்தைப் பொருளாதாரம் முதலியவற்றின் மீதான ஒரு கூர்மையான விமர்சனமாகத்தான் அமைந்தது. அந்த வகையில் அதற்கொரு வெற்றி இருக்கத்தான் செய்தது. அதேபோல நெடுநாள் ஊழல் சர்வாதிகாரிகளுகு எதிரான பெரும் மக்கள்திரள் எழுச்சியாக அமைந்த அரபு வசந்தம் முதலியன ஆட்சியாளர்கள் முன்பு வைத்த எச்சரிக்கையை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட இயலாது.
மெரினாவிலும் மற்ற இடங்களிலும் குவிந்துள்ள இளைஞர்களிடம் ஊடகக்காரர்கள் கேட்கும்போது அவர்களால் இந்தப் போராட்டத்தின் (ஜல்லிகட்டு) நியாயங்களைச் சரியாக விளக்க முடியவில்லை என்பதை நண்பர் ஷாஜஹான் ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார். அதை நாம் இப்படித்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் ஆத்திரத்தின் பின்னணியில் ஜல்லிக்கட்டு உட்பட எத்தனையோ நியாயங்கள் உள்ளன என்பதுதான் அது.  முகநூல் பதிவு

1 கருத்து: