திங்கள், 23 ஜனவரி, 2017

ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் தீ வைப்பு!



சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் நிறைவேற்றக்கோரி இளைஞர்கள் போராடி வருகின்றனர். ஏழு நாட்களாக போராட்டம் நீடித்துவரும் நிலையில், இன்று காலையில் காவல் துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து போராட்டம் செய்துவருவதால், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், சென்னை கடற்கரைக்கு அருகிலுள்ள ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். தீ வேகமாகப் பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகையாகக் காணப்படுகிறது. காவல் நிலையத்துக்குள் இருந்த அதிகாரிகள் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். காவல் நிலையத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஏராளமான பைக்குகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகன உதவியுடன் காவல் நிலையத்தில் பரவிய தீ விரைந்து அணைக்கப்பட்டது. ஐஸ்ஹவுஸ் பகுதியே புகைமூட்டமாகக் காணப்படுகிறது.
மெரினாவில் போராடிவரும் இளைஞர்கள் வெளியேற்றப்பட்டு வருவதோடு, போராட்டத்துக்காக மெரினாவை நோக்கிச் செல்ல முயற்சிசெய்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதோடு, மெரினாவுக்குச் செல்லும் சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இளைஞர்கள் தடுப்புகளை உடைத்து நுழைய முயற்சித்தபோது போலீசார் தடியடி நடத்தினர். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் போலீசார்மீது கையில் கிடைத்த பொருட்களை வீசினார்கள். போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிவருகின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக