புதன், 11 ஜனவரி, 2017

வருமான வரித்துறை + சிபிஅய் கிடுக்கி பிடி .. அனேகமாக எல்லா அமைச்சர்களும் கிலியில் ?

"வருமானவரித்துறையும் சி.பி.ஐ.யும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக கலக்கிக் கொண்டிருப்பதால் அ.தி.மு.க. மந்திரிகள் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது' என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.சேகர்ரெட்டி விவகாரத்தில் மிக முக்கியமான குற்றவாளியாக சிக்கியிருப்பவர் பரஸ்மால் லோதா ஜெயின். அவரை டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, கஸ்டடியில் எடுத்து விசாரித்துக்கொண்டிருக்கிறது சி.பி.ஐ.
சாதாரண தோற்றத்தில் இருக்கும் பரஸ்மால் லோதா ஜெயின் ஒரு சர்வதேச பயங்கரவாதி. தாய்லாந்து, துபாய், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் லோதாவுக்கு ராஜமரியாதை என அவரைப் பற்றி பல தகவல்களை சேகர்ரெட்டி கக்கியிருக்கிறார். பரஸ்மால் லோதாவைப் பற்றி... கரூர் அன்புநாதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கியபோதே அவரது இ-மெயில் மற்றும் வங்கிக் கணக்கு பரிமாற்றங்கள் மூலம் ஏகப்பட்ட விஷயங்களை வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு தோண்டி எடுத்துள்ளது.


அமைச்சர்கள் ஒ.பி., நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், செந்தில்பாலாஜி ஆகியோரது பணம் பரஸ்மால் லோதா ஜெயின் மூலம் பல வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து வைத்திருந்தது.

சேகர்ரெட்டி, பரஸ்மால் லோதா ஜெயின் மூலம் பணம் மாற்றிய விவகாரத்தில் சிக்கிய பரஸ்மால் லோதா ஜெயினின் பழைய விவகாரங்களைத் தோண்டித் துருவ ஆரம்பித்த சி.பி.ஐ.யிடம் வாய் திறந்துள்ளார்.
ஒ.பி.மகன் இரவீந்திரநாத், நத்தம் மகன் அமர், சைதை துரைசாமி மகன் வெற்றி மற்றும் அன்புநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் எத்தனை முறை தன்னிடம் வந்திருக்கிறார்கள், எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என பரஸ்மால் லோதா ஜெயின் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்ல... அதை வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு பரஸ்மால்லோதா ஜெயினைப் பற்றி கண்டெடுத்த ஆவணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சி.பி.ஐ. அன்புநாதன் விவகாரத்தை தாண்டி தற்பொழுது சேகர்ரெட்டியிடம் நோட்டு மாற்றிய விவகாரத்தில் பரஸ்மால் லோதா ஜெயின், சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளரான ராமமோகனராவின் மகன் விவேக் பாப்பிசெட்டி பற்றியும் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.

அத்துடன் ""பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எனக்கு ஒப்பந்தங்கள் கொடுத்து வேலை செய்யச் சொன்னார். நோட்டுமாற்று விவகாரம் வந்தபோது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்கள் அனைவரையும்  அழைத்த எடப்பாடி தரப்பு, ஒவ்வொருவர் கையிலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, "இதை மாற்றிக் கொடுங்கள்... இல்லாவிட்டால் நீங்கள் எடுத்த ஒப்பந்த வேலையையும் இனிமேல் செய்ய முடியாது'என சொல்லியிருக்குது. அதனால்தான் நான் திருப்பதி உண்டியலிலும் பரஸ்மால்லோதா ஜெயினிடமும் பணத்தை மாற்றினேன்'' என சேகர்ரெட்டி சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இப்படி சேகர்ரெட்டியும் பரஸ்மால் லோதா ஜெயினும் அளிக்கும் பரபரப்பு வாக்குமூலங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாமா? என சி.பி.ஐ. மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அனுமதியளித்தால், அ.தி.மு.க. வி.ஐ.பி.கள், மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிக்குவது உறுதி என்கிறார்கள் சி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள்.

. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அமல்படுத்திய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை மேற்கொண்ட இ.டி.ஏ. ஆகியவை புகாரி குழுமத்தைச் சேர்ந்தவை. புகாரி தரப்பிடம் வருமானவரித்துறையினர் நடத்தத் தொடங்கிய ரெய்டுகள் திங்கள்வரை தொடர்ந்தன.

ஜெ. நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், தூத்துக்குடியில் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல்மின்நிலையம் கட்ட அனுமதி பெற்ற புகாரியின் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கண்டுபிடித்ததாம் வருமானவரித்துறை.

இதற்கான கணக்குகளை ஆராய்ந்தபோது துபாய் நாட்டின் மன்னர் குடும்பத்தினரின் பேரை தவறாகப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான கோடிகளை அந்த நாட்டு வங்கியில் வாங்கி ஏமாற்றியதால் துபாய் அரசாங்கத்தால் அந்நாட்டுக்குள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டது புகாரி நிறுவனம் என தகவல் கிடைத்ததாம்.

"இந்தியா, கனடா ஆகிய இருநாட்டு குடியுரிமை பெற்றுள்ள புகாரி தரப்பிடம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு அரசுகளும் எப்படி முக்கியமான திட்டங்களை ஒப்படைத்தன என விசாரித்ததில் கடந்த தி.மு.க. ஆட்சியில் உளவுப் பிரிவில் பவர்ஃபுல்லாக விளங்கிய போலீஸ் அதிகாரியும், அ.தி.மு.க. ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த ரெய்டுக்குள்ளான தலைமைச் செயலாளரும் சிக்குகிறார்கள்'' என்கிறது வருமானவரித்துறை. -தாமோதரன் பிரகாஷ் படங்கள்: செண்பக பாண்டியன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக