புதன், 18 ஜனவரி, 2017

தமிழகமெங்கும் திரண்டது பார் மாணவர் சேனை!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக எஸ்.எஸ்.எம். மற்றும் ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர் அமைப்பினருக்கு தகவலை அனுப்பினர். இதனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நள்ளிரவை தொடர்ந்தும் நடந்த இந்த போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்களும் பங்கேற்றனர்.
போராட்டம் நடத்தியவர்களுடன் நேற்று இரவு 11.30 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அலங்காநல்லூரில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு காளைகள் வரும் வரை போராட்டம் நடைபெறும். அறவழியில் நடைபெறும் போராட்டத்தை தடுக்க வேண்டாம் என்று கூறினர். அதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு இரவு மின் தடை ஏற்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. செல்போன் டார்ச் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தினர். அதன்பிறகு மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டது. கொடைரோடு அருகில் உள்ள பள்ளப்பட்டியில் பீட்டா அமைப்பை கண்டித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி உள்பட பல கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் இணையதளம் மூலம் இணைந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தேனி கம்மவார் பொறியியல் கல்லூரி, நாடார் பொறியியல் கல்லூரி, வி.பி.வி., கோட்டூர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தேனி புது பஸ்நிலையம் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதிலும் திரளான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லையில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நள்ளிரவு வரை இந்த போராட்டம் தொடர்ந்தது. அதன் பிறகும் சுமார் 100 இளைஞர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர். இன்று 2-வது நாளாக நெல்லையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் செய்து வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோல், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளிலும் இன்று இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் திருவண்ணாமலை காமராஜர்சிலை அருகே இளைஞர்கள், மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி கோட்டை மைதானத்தில் மாணவர்கள் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.சி.எஸ். கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கோட்டை முன்பு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். மேல்விஷாரம் அப்துல் ஹக்கிம் கல்லூரி, குளோபல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் 1000-த்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்ஜினீயரிங் மற்றும் பல கலை கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் இன்று காலையில் சேதராப்பட்டில் திரண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அங்கிருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
புதுவையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாக அந்தந்த கல்லூரி பேனர்களுடன் ரோடியர் மில் திடலுக்கு வந்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி பொறியியல் கல் லூரி, டி.ஆர்.பி. என்ஜினீய ரிங் கல்லூரி உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மாணவர்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து அவர்கள் ஊர்வ லமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் செய்தனர்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நேற்று இரவு 9.30 மணி வரை இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி சந்திப்பு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். மன்னார்குடி தேரடியில் தொடங்கிய பேரணி, பந்தலடி வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ஒன்றாக சேர்ந்தனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம்பெண்கள் என பலர் ஓன்று திரண்டு
சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் இன்று காலை 8 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் 5-ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் திரண்டனர். பின்னர் இவர்கள் நடத்து நடத்து ஜல்லிக்கட்டை நடத்து என்பன போன்ற பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து பேர்லேண்ட்ஸ் போலீசார் அங்கு வந்து மாணவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் மாணவர்கள் சமாதானம் அடையவில்லை. அதைத் தொடர்ந்து மாணவர்கள் 5 ரோட்டில் இருந்து ஊர்வலமாக சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர். போராட்டம் குறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில்-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு நடத்த தடை விதித்திருப்பது கண்டிக்க தக்கது. ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
மேலும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி சேலம் சீலநாயக்கன் பட்டி பை-பாஸ் சாலை ரவுண்டான அருகே 300-க்கும் மேற்பட்ட சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, ராமையன்காடு, சண்முகா நகர், பெருமாள்கோவில் மேடு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது. உரிய அரசு அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டும். எனவே மாணவர்கள் அனைவரும் இங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி கோ‌ஷமிட்டனர். தடையை நீக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் எச்சரித்தனர்.
சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கலைக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2000 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஊர்வலமாக சென்றபோது திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக