ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அமெரிக்காவில் பீட்டா தலைமை செயலகத்துக்கு முன்பாக ஜல்லிகட்டு போராட்டம் நாளை..


எதிர்ப்பு வலுக்கிறது; அமெரிக்காவில் ‘பீட்டா’ தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டம்" ; ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தினை கொண்டுவரும் பணியில் மத்திய, மாநில அரசுக்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. விரைவில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துவிட்டனர்.& போராட்டத்தின் போது மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று ஒருபுறம் கோஷம் எழுப்பினாலும், மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்புகிறார்கள். தமிழகம் முழுவதும் இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் பீட்டா பக்கம் பாய்ந்துள்ளது.
பீட்டாவுக்கு எதிராக அனல்பறக்கும் வகையில், ‘மீசையை முறுக்கு, பீட்டாவை நொறுக்கு’, ‘பீட்டாவுக்கு நோட்டா’, ‘நாட்டைவிட்டு விரட்டு’ போன்ற வாசகங்களும், கோஷங்களும் விண் அதிர ஒலிக்கின்றன. பீட்டாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை, பீட்டா அமைப்பு சின்னத்தை பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், பீட்டா என்று உருவபொம்மையில் எழுதி, அதை தூக்கில் தொங்கவிட்டும், செருப்பால் அடித்தும் பதிவு செய்தனர். தொடர்ந்து பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதேபோன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டாவிற்கு எதிராகவும் போராட்டம் நடத்திவருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் போராட்டம்
 பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுத்து உள்ளநிலையில் அமெரிக்காவில் அதன் தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள நார்போல்க் என்ற இடத்தில் ‘பீட்டா’ அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாடடம் நடத்துகிறார்கள். பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக