சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் ABVP? : விவசாய கோரிக்கைகள் பீட்டாவாக மட்டும் சுருங்கியது ஏன்…

abvpthetimestamil : ராஜசங்கீதன் ஜான்<> போராட்ட களத்தில் இருக்கும் சில உண்மை விவரங்களை பகிர விரும்புகிறேன். இந்த சிக்கல்கள் எல்லா பெருந்திரள் போராட்டங்களிலும் உள்ளவைதான். எனினும் இந்த சிக்கல்களுக்குள் மற்ற சில விஷயங்களும் புதைந்திருப்பதால் சற்றே விரிவாக கூற விரும்புகிறேன். ‍
Disclaimer: இளைஞர் போராட்டத்தில் பெருமதிப்பு கொண்டிருப்பவன்தான் நான். இன்னும்! ‘இதைத்தான் நாங்கள் முன்னாடியே சொன்னோமே’ கோஷ்டிகள் தயவுசெய்து வேறு பதிவுகளுக்கு சென்று விடவும். சில தெளிவுகளை ஏற்படுத்தி கொள்ளத்தான் இந்த முனைப்பு, இருப்பதை குலைப்பதற்கு அல்ல. ‍‍
மெரீனாவில் போராட்ட குழுக்கள் நான்காக இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோரிக்கை பட்டியல். ஆனால், தொடங்கப்பட்ட போது ஒரு குழுதான் இருந்தது. அந்த குழுவும் விவேகானந்தர் இல்லத்தின் எதிர்புறத்தில் முதல் நாள் நின்று போராடியது. அதன் பின் கூடிய கூட்டத்தில், பலதரப்பட்ட கருத்துகள் அலையாடி ஏற்பட்ட முரண்களால், முதற்குழு கலங்கரை விளக்கத்தை நோக்கி சற்று நகர்ந்து தன் போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. ‍‍

முதற்குழுவின் கோரிக்கைகள் விவசாய தற்கொலை தடுப்பு, பீட்டா தடை, அரசியல் கட்சிகள் தலையீட்டுக்கு எதிர்ப்பு, PCA திருத்தம், காவிரி ஆணையம் அமைப்பு போன்றவை. இரண்டாம் குழு ஒருநாள் கழித்து கோரிக்கை பட்டியல் உருவாக்குகிறது. பட்டியல் இல்லை. ஒரே ஒரு கோரிக்கைதான். வாடிவாசல் திறக்கப்பட வேண்டும். வேறு எதுவும் அல்ல. இந்த கோரிக்கையில் ஏற்பட்ட முரணில் மேலும் இரண்டு குழுக்கள் அடுத்த நாள் உருவாகின்றன. அவை விவேகானந்தர் இல்லத்துக்கு அப்புறம் செயல்படுகினறன. அவர்கள் கோரிக்கை பீட்டா தடை, ஜல்லிக்கட்டு தடை நீக்கம் போன்றவை. அரசியல் கட்சிகளை அனுமதிக்காதவை.‍‍‍‍‍‍ ‍‍
சிக்கல் அந்த இரண்டாவது குழுதான். நேற்றைக்கு முந்தைய தினம் டிஆர் வந்தார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. நேற்று, இரண்டாம் குழு உடைந்து மூன்றாம் குழு, நான்காம் குழு என்றானது. இன்று இரண்டாம் குழுவின் தலைமை குழுவோடு இணைந்து மக்களிடம் பேசி கொண்டிருப்பது நடிகர்கள் ஆரியும் லாரன்சும் சவுந்தரராஜாவும். இந்த நடிகர் சவுந்தரராஜா யாரென்றால் நடிகர் விஷாலுக்கு நண்பர். இப்போது பேசுகையில் அவ்வப்போது விஷாலை திட்டுவது போல் திட்டி கொள்வார்.‍‍‍‍‍‍ ‍‍
நேற்றைய முன் தினமே இரண்டாம் குழுவுடன் எங்களை போல பலருக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது. அவர்கள் பீட்டாவை தாண்டி எதையும் பேச அனுமதிப்பதில்லை. குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் வார்த்தையை கூட அனுமதிப்பதில்லை. மீறினால் மைக் பிடுங்கப்படும். மீடியாக்களில் அதிகம் வருபவர்களும் இந்த குழுவினர்தான். விவேகானந்தர் இல்லத்தில் தொடங்கிய போராட்டம் என்றே அறிந்திருப்பதால், மீடியாக்களும் அந்த இடத்தில் குழுமியிருக்கும் இந்த குழுவை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள்.‍‍‍‍‍‍ ‍‍
இதர குழுக்கள் அனைத்திலும் மத்திய மாநில அரசுகளின் மீது காத்திரமான கேள்விகள் வீசப்படுகின்றன. அவை ஜனநாயக முறைப்படியும் அணுகப்படுகின்றன. இரண்டாம் குழுவிடம் இது கிடையாது. முகநூல் பக்கம் ஒன்றை தொடங்கியிருப்பதாகவும், போராட்டம் பற்றிய எல்லா தகவலையும் அதில் மட்டும் பகிருமாறு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மறக்காமல் சொல்லி விடுகிறார்கள். போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரின் செல்பேசி எண்களையும் வாங்கி கொள்கிறார்கள்.‍‍‍‍‍‍ ‍‍
சில உபரி தகவல்கள்:
ABVP அமைப்பினர் போராட்டத்தில் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. கமலாலயம் சென்று பொன்னாரை ஒரு குழு சந்தித்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது. மட்டுமல்லாமல், சென்னையிலிருந்து ஒரு பத்து பேர் மதுரை தமுக்கம் மைதானம் சென்று, பீட்டாவை மட்டும் முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்ப சொல்வதாக மதுரை தோழர் ஒருவர் கூறினார். இதுபோல், கோவை, திருச்சி என இன்னும் பல இடங்களில்கூட நடந்து கொண்டிருக்கலாம்.‍‍‍‍‍‍ ‍‍
உண்மையில் இந்த மெரீனா போராட்டம் தொடங்கியது, அனைவரும் நினைப்பதை போல, ஒற்றை கோரிக்கை கொண்டு அல்ல. அலங்காநல்லூரில் தோழர்கள் முடக்கப்பட்ட பிறகு தொடங்கப்பட்ட போராட்டம்தான் இது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என ஒற்றை கோரிக்கையோடு போராடப்பட்டது அலங்காநல்லூரில்தான். மெரினாவில் தொடங்கப்பட்ட போராட்டம், அலங்காநல்லூரில் போலீஸால் கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட வேண்டும், பீட்டா தடை செய்யப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே.‍‍‍‍‍‍ ‍‍
இப்போது அந்த கோரிக்கைகள் அனைத்தும் வெறும் பீட்டா தடையாக சுருங்கியதற்கான காரணமும் மெரீனா போராட்டம் ஒரு குழுவில் இருந்து இன்று நான்கு குழுக்களுக்கு உடைந்திருக்கும் காரணமும் ஒன்றுதான். முதல்வரும் தில்லிவரை சென்று வந்துவிட்டார். விவசாயிகள் பிரச்சினை? காவிரி? காணாமல் போய்விட்டது. இதற்கு பின்னணி என்ன, என்ன தீர்வு? தெரியாது. ஆனால் தங்களின் கோரிக்கைக்கு அரசை நிர்ப்பந்திக்க விரும்பி, அரசியல் கட்சிகள் புகுந்துவிட கூடாது என சொல்லியும், போராட்டத்துக்கு உள்ளுக்குள்ளேயே உள்ளடி அரசியல் நடந்தேறிவிட்டது. ஆதலால்தான் சொல்லுகிறேன். அரசியல் இல்லாமல் எவனும் இல்லை. இரண்டு பேர் சந்தித்தாலே அரசியல் உருவாகி விடும். இது சமூக அடிப்படை.
‍‍‍‍‍‍ ‍‍
அரசின் அவசர சட்ட முடிவை போலீஸ் அதிகாரி இப்போது படித்து கொண்டிருப்பதும் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரில் உள்ள இரண்டாவது குழுவினரின் இடத்தில்தான். இப்போதும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இழந்தவரைக்கும் போகட்டும். இனியாவது மெரீனாவுக்கு வருபவர்கள் இந்த இரண்டாம் குழுவை புறக்கணியுங்கள். மீடியாக்களும் இவர்களை புறக்கணியுங்கள். இவர்களை விட நேர்மையானவர்கள், உண்மையான கோரிக்கைகளுடன் மற்ற குழுக்களில் இருக்கின்றனர். அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
முக்கியமாக மீடியாக்களுக்கு இன்னொரு விஷயம். மெரீனாவில் மட்டும் போராட்டம் நடக்கவில்லை. மற்ற மாவட்டங்களிலும் நடக்கின்றன. அங்கும் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கோரிக்கைகள் இருக்கின்றன. அவர்களையும் கேளுங்கள். ஜனநாயகம் இல்லை என நடக்கும் போராட்டத்தில் ஜனநாயகம் இல்லாமல் போனதுதான் வேதனை. போராட்ட பரிச்சயம் இல்லாததால் இப்படியான வழுவல்கள் நமக்கு ஏற்படலாம். ஆனால் இனியும் ஏற்பட்டுவிட கூடாது.
‍‍‍‍‍‍ ‍‍
மத்திய அரசு விமர்சிக்கப்படாமல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் போராட்டம் யாருக்கு லாபம் அளித்திருக்கும் என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், இளைஞன் என் பிரச்சினையை கையில் எடுத்துவிட்டான் என நம்பி நல்ல முடிவுக்கு காத்திருந்த விவசாயிக்கு, அரசுகள் இதுவரை கொடுத்து வந்த ஏமாற்றத்தைத்தான் நாமும் இப்போது கொடுத்திருக்கிறோம்.
‍‍‍‍‍‍ ‍‍
கற்று கொள்வோம். பாடங்கள்தான் எல்லாம்.
‍‍‍‍‍‍ ‍‍
(ஆரி, லாரன்ஸை உள்ளடக்கிய இரண்டாம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு இளைஞன் முன் வைக்கும் யோசனையை எப்படி அமுக்கிறார்கள் என இணைக்கப்பட்டுள்ள காணோளியில் பார்க்கவும். அந்த இளைஞன் சொல்லும் யோசனை சாத்தியம் அற்றதாக(!)கூட இருக்கலாம். ஆனால் அதற்கான எதிர்வினையை பாருங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக