வியாழன், 5 ஜனவரி, 2017

தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu :ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வருகிற பிப்ரவரி 7-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம் இடையே யான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.என்.கான் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 67 சதவீதம் பொய்த்துவிட்டது. இதனால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும். மேலும் காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சி னையை தீர்க்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசு, “கர்நாடகாவிலும் கடுமையான வறட்சி நிலவுவதால் காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது’’என பதிலளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இவ்வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த இடைக் கால உத்தரவின்படி, வருகிற பிப்ரவரி 7-ம் தேதி வரை தமிழ கத்துக்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உடனடியாக உத்தரவிடுவது சாத்தியம் இல்லை.
இது தொடர்பாக கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளின் வாதத்தை கேட்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன் அடிப்படையில் பிப்ரவரி 7-ம் தேதி முதல் இவ்வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும். இவ்வழக்கை உச்ச நீதிமன்றமே தொடர்ச்சியாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும்’’ எனக் கூறி, வழக்கை வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக