வியாழன், 12 ஜனவரி, 2017

தினகரனுக்கு 28 கோடி அபராதம்... ஜெயா உருவாக்கிய மிடாஸ் கும்பலுக்கு ஆப்பு வருகிறது?

விகடன் :தினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு!ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்குப் பிறகான வெற்றிடத்தில், மீண்டும் வெளிச்சத்துக்கு வர மன்னார்குடி குடும்பத்தில் பலரும் முயற்சிக்கின்றனர். அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலில் அரசியலுக்கு வந்த டி.டி.வி.தினகரன் இதில் முக்கியமானவர். ‘சசிகலாவுக்குப் பதிலாக முதல்வர் பதவியில் அமரப்போகிறவர்’ என மன்னார்குடி குடும்பத்திலேயே சிலரால் முன்னிறுத்தப்பட்ட தினகரன் மீது சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. ‘அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு அமலாக்கத் துறையினர் விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு தந்திருக்கிறது.


1991 - 96 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது, 96-ம் ஆண்டுக்குப் பிறகு ரக ரகமாக வழக்குகள் பாய்ந்தன. அப்போது ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசித்த சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன், தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீதும் பல வழக்குகள். கால வெள்ளத்தில் சில வழக்குகள் வலுவிழந்தன; ஆனால், சில வழக்குகள் மட்டும் நிரந்தரத் தலைவலியாக மாறின. சொத்துக் குவிப்பு வழக்கு, ஃபெரா சட்டத்தின் கீழ் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்ட வழக்கு போன்றவை இதற்கு உதாரணம். 1991-96 காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர், ஜெயலலிதாவின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களைக் கவனித்துக்கொண்டனர். அவர்களால், ஜெ.ஜெ. டி.வி ஒப்பந்தம், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்தது, வெளிநாட்டில் வாழும் இந்தியர் மூலம் ஹவாலா பணம் கைமாறி வந்து இங்கு  சொத்துகள் வாங்கியது, வெளிநாட்டு கார்கள் வாங்கியது என பல வழக்குகள் பாய்ந்தன. அவற்றால் ஏற்பட்ட கெட்ட பெயர், ஜெயலலிதாவின் தலையில் வந்து விடிந்தது.

 இப்படித் தொடரப்பட்ட வழக்குகளில், ஜெ.ஜெ. டி.வியோடு சேர்ந்து சசிகலா, பாஸ்கரன், திவாகரன் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், ஃபெரா சட்டத்தின் கீழ் தனித்தனியாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் கடந்த மே மாதம் எழும்பூர் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது. ஆனால், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் மட்டும் தப்பவில்லை.

தினகரன் ஒரு காலத்தில் கார்டனின் செல்லப்பிள்ளையாக இருந்தார். இவர் 1995-96-ம் ஆண்டுகளில் அங்கீகாரம் பெறாத முகவர் மூலம் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலரை பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் இருக்கும் ‘டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தார். பார்க்லே வங்கி மூலமாக தினகரன் இந்த முதலீட்டைச் செய்தாா். இதுகுறித்து, அயல்நாடு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அவர்மீது மத்திய அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் தினகரன் சில விளக்கங்களைக் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு, 62 லட்சத்து 61 ஆயிரத்து 313 மதிப்புள்ள அமெரிக்க டாலர் தொகையை மட்டும் கணக்கில் கொண்டு விசாரணை நடைபெற்றது.

இதில், தினகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து, கடந்த 1998-ம் ஆண்டு, அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தினகரன், இதை எதிர்த்து ஃபெரா மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம், அபராதத் தொகையை 28 கோடியாக குறைத்து 2000-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால், தினகரன் அதையும் செலுத்த மறுத்தார். இந்த நேரத்தில் மத்திய அமலாக்கத் துறை, தினகரனை திவாலானவர் என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த மறுத்ததுடன், அதை ரத்து செய்யக்கோரி, தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

16 ஆண்டுகள் கழித்து, இந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

‘தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்பதால் இந்திய சட்டங்களால் என்னை தண்டிக்க முடியாது’ என தினகரன் வாதிட்டு இருந்தார். ஆனால், “தான் இந்தியக் குடிமகன் இல்லை; வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று அவர் கூறியுள்ளதை ஏற்கமுடியாது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையின்போதும் ‘தான் வெளிநாட்டில் வசிக்கிறேன்’ என்று கூறியவர், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதில் தோல்வியடைந்தபோது, உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அப்படிச் செய்தபோது, தான் இந்தியக் குடிமகன் என்று கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனவே, அமலாக்கப் பிரிவு  விசாரணையில் நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை” என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

‘ஃபெரா மேல்முறையீட்டு வாரியம் சாட்சியங்களை சரியாகப் பார்க்காமல், தன் அதிகார வரம்பை மீறி செயல்பட்டது’ என்பது தினகரனின் வாதம். ஆனால், ‘வலுவான ஆதாரங்களைப் பார்த்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், தினகரன் 1994 ஜூலையில் சிங்கப்பூரில் நடந்த டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறியிருந்தார். உண்மையில் அந்த நேரத்தில் அவர் இந்தியாவில்தான் இருந்தார். இப்படி பல விஷயங்களை வைத்தே தீர்ப்பு தரப்பட்டுள்ளது’ என்கிறது தீர்ப்பு.

 ‘‘மனுதாரர் தனக்கு அமலாக்கப் பிரிவு விசாரணையின்போது சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது தவறானது. ஆவணங்களைப் பார்க்கும்போது அவருக்கு பல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இது தவிர காளன் என்ற அதிகாரி உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என்று மனுதாரர் ஒரு புகார் கூறியுள்ளார். காளன் என்ற இந்த அதிகாரி புலன் விசாரணை அதிகாரி. எனவே, இவருக்கும் ஃபெரா மேல்முறையீட்டு ஆணைய விசாரணைக்கும் தொடர்பு இல்லை. டிப்பர் கம்பெனிதான் வெளிநாட்டு வங்கியில் பணம் முதலீடு செய்தது என்று மனுதாரர் கூறியதை ஏற்க முடியாது. இந்த கம்பெனியை மனுதாரர்தான் நிர்வகித்துள்ளார். எனவே, அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீதுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தீர்ப்பளித்து, டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தினகரன் தரப்பில் பேசியபோது, ‘‘96 காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கலுக்காக போடப்பட்ட வழக்கு அது. அப்போது மாநிலத்தில் தி.மு.க அரசும், மத்தியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரமும் இருந்தனர். அவர்கள் எங்களைப் பழிவாங்க வேண்டுமென்று இப்படிப்பட்ட பொய்யான வழக்குகளைப் போட்டனர். தினகரன் இந்தியக் குடிமகன். ஆனால், வெளிநாட்டுக் குடியுரிமையும் அந்தக் காலகட்டத்தில் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டால், அந்தப் பரிமாற்றம் முறைகேடானது அல்ல. அதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அதனால், விரைவில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய உள்ளோம்” என்றனர்.

சசிகலா குடும்பம் சந்திக்காத வழக்குகளா?;- ஜோ.ஸ்டாலின்
படம்:சு.குமரேசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக