புதன், 25 ஜனவரி, 2017

போலீஸ் வன்முறை ?.200 வாகனங்கள் சேதம் .. 51 இடங்களில் கல்வீச்சு அடிதடி உதை ... 170 பேர் கைது !


சென்னையில் திங்கட்கிழமையன்று 51 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்தன.
மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பத்தில் நடந்த கலவரத்தில் மீன் மார்க்கெட், குடிசைகள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் கார் ஒன்று எரிக்கப்பட்டது. அரும்பாக்கம், வடபழனி மற்றும் எம்.கே.பி.நகர், வியாசர்பாடி பகுதியிலும் போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு துறை வாகனங்களும் எரிக்கப்பட்டன.  வீடு வீடாக சென்று இளைஞர்களை தேடி கைது செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னையில் கலவரம் நடந்தது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று, மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல்துறையினரே ஆட்டோக்கள், கார்கள் மீது தீ வைப்பது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது, பொதுமக்கள் மீது கல் வீசுவது, மீனவக் குப்பத்துக்குள் புகுந்து அவர்களை அடிப்பது, பெண் போலீஸ் ஒருவர் குடிசைக்கு தீ வைப்பது, பெண்களையும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வது, லத்தி சார்ஜ் செய்தது, பத்திரிகையாளர்களையும் விட்டுவைக்காமல் அடித்தது போன்ற வீடியோ காட்சிகள் ஊடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில், இந்தச் செய்தி நாடு முழுவதும் தீயாகப் பரவியது.

 ஐஸ்அவுஸ் காவல்நிலையம் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து கொளுத்தப்பட்டது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து, மெரினா கடற்கரை மற்றும் உட்புறச் சாலைகளில் மாநில மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்தது. வன்முறையை தடுக்கக் கோரி, தொலைபேசி மூலமாக 1,000க்கும் மேற்பட்டோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், வன்முறை ஏற்பட்டபோது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேற்று நடந்த வன்முறை குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக