திங்கள், 9 ஜனவரி, 2017

போலீஸ் திடீர் சோதனை - ஒரே இரவில் 1,513 பேர் கைது!

மின்னம்பலம் : சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தினம் தினம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றால், குற்றச் செயல்கள் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் என கருத்து நிலவி வந்தது. ஆனால், அவர் ஆட்சியில் இருந்தபோதும் சென்னை மாநகரில் ஒரேநாளில் பல கொலைகள் மிக சர்வசாதரணமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த அதிரடி சோதனையில் சுமார் 1513 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இரவு சோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின்படி, போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்தின் அடிப்படையில்,1463 பேரும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 41 பேரும் பழைய குற்றவாளிகள் 6 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் என மொத்தம் 1,513 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இதைத் தவிர்த்து, புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிய 83 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒருநாளில் நடத்தப்படும் திடீர் சோதனைகள் மூலம் குற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தொடர் சோதனைகள், காவலர்களுக்கு சோதனை வாகனங்கள் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் மூலமே குற்றச்செயலகளைக் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் காவலர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக