வெள்ளி, 27 ஜனவரி, 2017

உபி சட்டசபை தேர்தல் .. காங்கிரஸ் சமாஜவாடி (அகிலேஷ்) கூட்டணி .105 தொகுதிகள் காங்கிரசுக்கு, 298 சமாஜவாதி ...


லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ்,
ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 11-ந் தேதி நடைபெறுகிறது. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் பிளவு உருவானது. இதை ஈடு செய்ய காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இதையடுத்து இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 298 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், 105 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
தொகுதி பங்கீடு ஏற்பட்டாலும் எந்தெந்த தொகுதிகளில் யார்? யார்? போட்டியிடுவது என இரு கட்சிகளிடையே இன்னும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். இருவரையும் உத்தரபிரதேச தேர்தலில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த இரு கட்சிகளின் மாநில தலைவர்கள் முயற்சி எடுத்தனர்.


அதன்படி அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் 29-ந் தேதி லக்னோவில் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். முன்னதாக இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்றும் தெரிகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் இந்த சந்திப்புக்கு பிறகு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும் என இரு கட்சிகளின் நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக