சனி, 17 டிசம்பர், 2016

இயக்குனர் ஸ்ரீதர் : நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்... காதலிக்க நேரமில்லை .

பஞ்சு அருணாசலம்‘
ஒரு பையனைப் பிடிச்சிருக்கேன் கவிஞரே, ரவிச்சந்திரன்னு பேர். மலேசியாவுல இருந்து வந்திருக்கான். பார்க்க ஸ்டைலா, நல்லா இருக்கான். அப்புறம் ஃப்ளைட்ல போயிட்டு இருந்தப்ப காஞ்சனானு ஒரு பணிப்பெண்... பார்த்தேன், நல்லா இருந்தாங்க. `நடிக்கிறீங்களா?’னு கேட்டேன். `நடிக்கிறேன்’னு சொன்னாங்க. கமிட் பண்ணிட்டேன். லவ்+காமெடி. கலர்ல பண்ணப்போறேன். ‘காதலிக்க நேரமில்லை’ அதான் டைட்டில்’ என்று அவுட்லைன் சொல்லி போட்டோ காட்டியிருக்கிறார்.
மிக இளம் வயதிலேயே புகழ் அடைந்ததால் ஸ்ரீதருக்கு தன்னம்பிக்கை அதிகம். அது அவரின் பேச்சிலேயே எதிரொலிக்கும். அது அகந்தையோ, திமிரோ கிடையாது. ஆனால், சமயங்களில் அது எதிரில் உள்ளவர்களைக் காயப்படுத்திவிடும். அன்றும் அப்படி ஆரம்பித்திருக்கிறார். ‘என்னைத் தவிர இந்த ஷாட்டை வைக்கிறதுக்கு எவன் இருக்கான், ஒரு பயலைச் சொல்லுங்க கவிஞரே’ எனச் சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் ஸ்ரீ, நீ திறமையானவன்...’ என, கவிஞர் பாராட்டியிருக்கிறார். பிறகு, போகப்போக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோபமாக அறையில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதர்.
நாங்கள் உடனே உள்ளே ஓடினோம்.
கவிஞர், சி.வி.ராஜேந்திரனிடம் சொன்னார். ‘சொந்தப் படம். ஏன் புதுமுகங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்குற?’னு கேட்டேன். கோபம் வந்துடுச்சு. ‘நான் நினைச்சா எது வேணும் னாலும் பண்ணுவேன். எனக்கு எவனும் தேவை இல்லை’னான். ‘ஏன் நான்கூட வேணாமா, விஸ்வநாதன்கூட வேணாமா?’னு கேட்டேன். ‘நீங்க ரெண்டு பேரும் பெரிய பக்கபலம்தான். ஆனா, நீங்க இல்லைனாக்கூட என்னால படம் எடுக்க முடியும்’னான். ‘அப்படின்னா நாங்க இல்லாம இந்தப் படத்தை நீ எடுத்துப்பாரேன்’னு நானும் விளையாட்டா சொன்னேன். உடனே அவன், ‘எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதமா பேசுறீங்க... சாரி’னு சொல்லிட்டு விறுவிறுனு எந்திரிச்சுப் போயிட்டான்.’ கவிஞர் அதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவர் காமெடியாகச் சொன்ன விதத்தில் இருந்து புரிந்தது.
ஆனால், ஒரு வாரத்துக்குள் ஷூட்டிங்குக்காக ஸ்ரீதர் பொள்ளாச்சி போனார். ‘நான் வசனப் பகுதிகளை ஷூட் பண்ணிட்டு இருக்கேன். நீ போய் கவிஞர்கிட்ட கதையைச் சொல்லி பாடல்களை ரிக்கார்ட் பண்ணிட்டு வந்துடு’ என, சித்ராலயா கோபுவை அனுப்பியிருந்தார். ‘ஸ்ரீ இல்லை யேப்பா. நான் எழுதி, அதை அவனும் கேட்டாதானப்பா நல்லா இருக்கும். அவனுக்கு இன்னும் கோவம் போகலையா?’ என்றார் கவிஞர். ‘ஒரே ஒரு பாட்டு மட்டும் கண்டிப்பா இந்த சிச்சுவேஷனுக்கு வரணும். மத்ததை உங்க இஷ்டத் துக்கு எழுதச் சொல்லிட்டார்’. அந்தப் படத்தில் கதை, திரைக்கதை டிபார்ட்மென்ட்டில் அதிகமாக வேலைசெய்தது கோபு. காமெடி ஏரியாவில் கில்லாடி.
வெறும் நான்கு நாட்களில் ஏழு பாடல்களை எழுதிக் கொடுத்தார் கவிஞர். அதில் வந்த ‘விஸ்வநாதன் வேலை வேணும்...’ மட்டும்தான் சிச்சுவேஷனுக்கு எழுதியது. மற்ற பாடல்கள் எல்லாம் ‘இந்தப் பாட்டை இங்கே வெச்சுக்கலாம், அதை அங்கே வெச்சுக்கலாம்’ எனக் கவிஞரும் கோபுவும் முடிவு செய்தவை. ரிக்கார்டிங் முடிந்து பொள்ளாச்சிக்கு நானும் கோபுவும் பாடல்களை எடுத்துச் சென்றோம். பாடல்களைக் கேட்டுவிட்டு ஸ்ரீதர் துள்ளிக் குதித்துவிட்டார். ‘படம் சூப்பர் ஹிட். பிச்சிக்கிட்டுப் போயிடும். அந்தாளு ஞானிய்யா. ‘நான் இல்லாம நீ நிக்க முடியுமா?’னு சொன்னான்யா. இப்பதான்யா எனக்குப் புரியுது. இப்ப சொல்றேன். நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்’ ஸ்ரீ தரின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.
கவிஞருக்கு ட்ரங்க் கால் புக்பண்ணி பேசினார் ஸ்ரீதர். ‘நீங்க பொள்ளாச்சிக்குப் புறப்பட்டு வரணும். நாலு நாளாவது என்கூடத் தங்கணும்’ என்றவர், என்னிடம், ‘நீ அவரை அழைச்சிட்டு வரலைனா, இனி என் முகத்துல முழிக்காத’ என காமெடியாகச் சொல்லி அனுப்பினார். நானும் சென்னைக்கு வந்து கவிஞரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்குப் போய் ஸ்ரீதருடன் தங்கிவந்தோம். இப்படிப் பலரும் கவிஞருடன் முரண்படுவதும், பிறகு அன்பு பாராட்டுவதும் சகஜம்.  முகநூல் பதிவு  பிரேம்ராஜ் தங்கவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக