வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஜனநாயகக் கொலை: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!


minnambalam.com : ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கிவைத்திருக்கும் நிலையில், கருப்புப் பணத்துக்கு 50 சதவிகித வரியும், வருமான வரித் துறையினரால் கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணத்துக்கு 85 சதவிகித வரியும் விதிக்க வகைசெய்யும் வருமான வரி திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், இச்சட்டத்தை கண்டித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாடி, திமுக, தேசிய காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 16 கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு ஒன்றை அளித்தனர். ஐக்கிய ஜனதாதளம் சார்பில் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் வழங்கிய மனுவில், ‘மத்திய அரசின் இச்செயலானது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். வருமான வரித்துறை மசோதா நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி எந்த விவாதமுமின்றி நடைபெற்றுள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். ஆனால் ’இது முக்கியமான மசோதா. அதனால் ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்க நேரமில்லை’ என்று விவாதத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இது, சட்டத்தில் அனுமதிக்கத்தக்கது அல்ல. இது, ஜனாதிபதியின் அதிகாரத்தையும் மீறும் செயலாகும். ஆகவே, அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில் தாங்கள் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தாமாக முன்வந்து தெரிவிக்கப்படும் கணக்கில் வராத கருப்புப் பணம் மீதான வரி விதிப்பு தொடர்பான, வருமான வரித்துறை வரி விதிப்பு சட்ட மசோதா மக்களவையில் எந்த விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், நாடாளுமன்ற விதிகளையும் பொருட்படுத்தாமல், குரல் வாக்கெடுப்பில் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். நாட்டு மக்களின் குரல் நாடாளுமன்றத்திலேயே நசுக்கப்படுகிறது. எனவே, இதில் குடியரசுத் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக