செவ்வாய், 20 டிசம்பர், 2016

கலைஞர் கருணாநிதிக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் ஆலோசனை

திமுக தலைவர் கலைஞர்  கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அவர் உடல்நலம் சீரான நிலையை எட்டிவிட்டது என்றும் உயிர்வேதியியல் அளவைகள் வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாக மருத்துவமனை உறுதி செய்த பிறகு, கடந்த 7ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இதனிடையே, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்த கலைஞர்க்கு சளித்தொல்லையால் சுவாசப்பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு, சிகிச்சை மேற்கொண்டனர்.
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் நேரிலும் தொலைபேசியிலும் கலைஞர் உடல் நிலை குறித்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர்.
கலைஞர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால், அவரை நேரில் சந்திக்க எல்லோருக்கும் அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரை, தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் அழைத்துச் சென்றார் ஸ்டாலின். நான் சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி வந்திருக்கிறேன் என்று ராகுல் சொன்னதும் கண்விழித்துப் பார்த்து, மெதுவாகக் கண்களை அசைத்தார் கலைஞர். இதைக் கண்டதும் அங்கிருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் வியந்தனர்.
அதேபோல், நேற்று முன் தினம்(18/12/2016) பேராசிரியர் அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்து கலைஞரை சந்தித்து, நான் அன்பழகன் வந்திருக்கிறேன் என்றதும் கண்விழித்து பற்றுதலோடு புன்னகைத்தார் கலைஞர். அதையும் பார்த்து வியந்தபடியே மருத்துவர்கள், இப்படி, கலைஞர் சிலசில நேரங்களில் மட்டும் கண்விழித்துப் பார்ப்பதும் பேச முயன்று அமைதியாவதுமாக இருப்பது குறித்து ஆலோசித்தனர்.
இந்நிலையில்தான், மருத்துவர்கள் குழு கலைஞர்க்கு நினைவாற்றல், மூளையின் உத்தரவு சரியான நிலையில் உடலின் அனைத்துப்பகுதிகளுக்கும் தடையின்றி செல்கிறாதா என்பதை அறிய சி.டி ஸ்கேனும் எடுத்துப் பார்த்தனர். சி.டி. ஸ்கேன் ரிசல்ட் நார்மல் என்று அறிந்ததும், மூளையின் கட்டளைப்படிதான் உடலின் அனைத்து உறுப்புகளோடு நினைவும் செயல்படும். ஒரு சில நேரங்களில் மட்டும் மூளையின் உத்தரவை பிரதிபலிக்கும் அவரது உடல்நிலை தொடர்ச்சியாக அவ்வாறு செயல்பட என்னவிதமான சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனை மருத்துவர்களிடையே எழுந்தது.
மனிதனின் மூளைப்பகுதிதான் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமைச்செயலகம். மூளையில் நினைவாற்றலை தேக்கி வைத்திருக்கும் ஞாபக சக்தி உள்ள பகுதிதான், செரிப்ரல் கார்டெக்ஸ் என்றும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு உத்தரவிடும் பகுதியை பிரிமிடல் ட்ராக்ட் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். மூளையில் ஏதேனும் பாதிப்போ ரத்த உறைவோ இருந்தாலும் மூளையின் செயல்கள் இயங்குவதில் சுணக்கம் ஏற்படும்.
ஆனால், கலைஞர்க்கு எடுத்த சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட் ரிசல்ட் நார்மல் என்ற நிலையில், ராகுல் காந்தி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்தபோது மட்டும் கண்மலர்ந்து புன்முறுவல் செய்த கலைஞர் தொடர்ந்து அவ்வாறே இயல்புநிலையில் இருக்க, என்ன சிகிச்சையை அடுத்து தொடரலாம் என்று காவேரி சிறப்பு மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவர்களோடு ஆலோசித்து வருகிறார்கள்.
இஞ்ஜக்‌ஷன் மூலம் மருந்து செலுத்தி, சிகிச்சையை மேற்கொள்ளலாமா, அவ்வாறு இஞ்ஜக்‌ஷன் செலுத்தினால், கலைஞர் உடல் ஏற்றுக்கொள்ளுமா… என்ன செய்யலாம்… அவரது இயல்புநிலை தொடர புதிய சிகிச்சையை எவ்வாறு கொடுக்கலாம்… என்பது குறித்து சிறப்பு மருத்துவக் குழு சிந்தித்து வருகிறது  மின்னம்பலம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக