வியாழன், 8 டிசம்பர், 2016

ஒரு ஆணாக மோடியை ஆதரிக்கலாமா ? ஒரு பெண்ணாக ஜெயாவை ஆதரிக்கலாமா?

jaya1ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக கடுமையாகவோ இல்லை கடுமையற்றோ எதிர்க்கும் சிலரும் “ஒரு பெண்ணாக” நான் அவரை ஆதரிக்கிறேன் என்பார்கள். இத்தகைய அபத்தமான வாக்கியத்தின் பொருளை அழகாக கூர்மையாக விமரிசிக்கிறது இப்பதிவு. ஃபேஸ்புக்கில் எழுதியவர்  Valan Antony.அவருக்கு எமது நன்றி!வினவு .காம்.
ஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன், ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ, அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.
இதில் அரசியல் அறியாத பெண்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல என்பது தான் வேதனை.
இங்குள்ள அனைத்து அல்லது பெரும்பாலான பெண்கள் ஜெயலலிதாவை தங்கள் ஆதர்ஷ நாயகியாக, அல்லது தாங்கள் விரும்பும் அவதார மனிதராக, மிகச் சிறந்த தைரியசாலியாக, நிர்வாகியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக முன் நிறுத்துது என்பது அவர்களின் அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்பதையும் தாண்டி,ஜெயலலிதாவின் இத்தனை ஆண்டு அராஜகத்தையும் ஆதரிக்க ஒரே பாலினமாக இருந்தால் போதும் என்ற இவர்களின் அபத்தமான வாதங்கள் கடுப்பை தான் நமக்கு தருகிறது.
ஜெயலலிதாவின் அரசியலை துளி கூட விரும்பாதவன். அவர் பெண் என்பதற்காகவே அவரை வெறுக்கும் அளவுக்கு பாலின வெறுப்போ ஆணாதிக்க சிந்தனையோ கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா ஒரு சாபக்கேடு என்ற கருத்தில் இன்று வரை மாற்றம் இல்லை.
வயதில் சிறியவர்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை கட்டாயம் காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லி அவமரியாதை செய்வது தான் ஆளுமைத் திறனா?


குடும்பம் இல்லாத ஒரு பெண். எவ்வளவு எளிமையாக வாழ்ந்து இருக்கலாம், இந்த அளவுக்கு கடுமையான ஊழல் சிக்கல்களில் மாட்டி, அவஸ்தை படுவது தான் சிறந்த நிர்வாகமா?
காவல்துறையில் எண்ணற்ற போலி என்கவுண்டர்கள், அப்பாவி மக்கள் மீதான அராஜக தாக்குதல்கள், ஏன் இன்னும் சொல்லப் போனால் பார்வை அற்றவர்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்களை காலால் எட்டி உதைத்து வெளியே அனுப்பும் மனிதாபிமானமற்ற காவல்துறையை பாராட்டுவது தான் ஆளுமைத் திறனா?
எத்தனையோ போராட்டங்கள் மதுவுக்கு எதிராக இந்த தமிழ்நாட்டில். ஆனால் அத்தனை போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு அடித்து விரட்டி ஓட விட்டது தான் நல்ல ஆட்சியாளர் என்பதன் அடையாளமா?
அணு உலைக்கு எதிரான மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து, அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கான பொய் வழக்குகளைப் போட்டதோடு, உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட, வழக்குகளை வாபஸ் பெற மாட்டேன் என்று சாமானிய மக்களை இன்று வரை வருத்தி எடுப்பவர் தான் சிறந்த ஆட்சியாளரா?
போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அலட்சியமாய் பேசியதோடு, பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், புலிகளால் உயிருக்கு ஆபத்து என்றும், விடுதலைப் புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக இருந்து, ஒரு விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப் படுத்தியவரும் தான் சிறந்த நிர்வாகியா?
சக தலைவர்களை மிகவும் கொச்சையாக அவர் பேசும் வார்த்தைகள், கேலிகள், ஏளனங்கள், புளி மூட்டை, சக்கர நாற்காலி, போன்ற பேச்சுக்கள் எல்லாம் அகங்காரத்தின் உச்சகட்டம்.
கத்தரி வெயில் கொளுத்தும் மே மாதத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அப்பாவி ஏழை எளிய மக்களை காசு கொடுத்து கூட்டி வந்து மதிய வெயிலில் நிற்க வைத்து, பல பேரின் மரணத்துக்கு காரணமாய் இருந்ததோடு, அந்த மரணங்களை மூடி மறைப்பது தான் சிறந்த நிர்வாகமா?
சென்னை பெருவெள்ளத்தின் போது, பொது மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீதான ஸ்டிக்கர் ஒட்டும் கேவலம் எல்லாம் நிர்வாகத் திறனா?
பாலின பாகுபாட்டைக் கடந்து சாமானிய மக்கள் மன நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள்.
*இப்படி ஜெயலலிதாவின் மோசமான அரசியலை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. ஆனால் அவரது மோசமான அரசியலை பேசுவது இந்த நேரத்தில் பொருத்தமாகவோ, மனிதாபிமானமாகவோ இருக்காது என்பதற்காக தான் அமைதியாக கடந்து செல்கிறோம்.*
*அவரது மோசமான, அபத்தமான அரசியலையும் தாண்டி தான், அவர் மீதான அனுதாபங்கள் இந்த நேரத்தில் இருக்க வேண்டுமே ஒழிய, அதற்காக அவரது தவறுகள் அனைத்தையும் புனிதப் படுத்தும் வேலை உங்களுக்கு தேவை அற்றது.*
அவர் சிறந்த நிர்வாகி, பெரிய மக்கள் சேவகி, மக்களுக்காகவே வாழ்பவர் போன்ற உங்கள் பசப்பு வார்த்தைகளை ஒதுக்கி வையுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள்.
ஒரு சக மனிதனாக அவர் குணம் அடைய நீங்கள் பிரார்த்திப்பது சரி, வருத்தம் தெரிவிப்பது சரி. அதற்காக அவரை ஒரு அன்னைத் தெரசாவாக, அன்னி பெசன்ட் அம்மையாராக, வாழும் மகாத்மாவாக, மனிதருள் மாணிக்கமாக முன்னிறுத்தி, கூலிக்கு மாரடிக்கும் அதிமுக அடிமைகள் போல காட்டிக் கொள்ளாதீர்கள்.
எல்லாவற்றையும் விட, அவர் ஒரு பெண் என்பதாலேயே அவர் ஆகச் சிறந்தவர் என்ற உங்களின் விளங்காத வியாக்கியானத்தை தவிருங்கள்.
மனிதாபிமானம் வேறு, ஒருவரது தவறுகளை முற்றிலும் மறைத்து அவரை புனிதப்படுத்துதல் என்பது வேறு.
____________________
– Valan Antony. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக