திங்கள், 12 டிசம்பர், 2016

தமிழக அரசை அச்சுறுத்தும் மத்திய அரசு: திருமாவளவன்

மத்திய அரசு தமிழக அரசை அச்சுறுத்தித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தமிழகத்தில் ஜாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் ஒரு சதவிகிதம்கூட நடைமுறைப்படுத்தவில்லை. தனிப்பட்ட விரோதங்களால் மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தற்போது மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? என்பதை அ.தி.மு.க. அடையாளம் காட்டியுள்ளது. ஆனால் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் யார்? என்பது தற்போது விவாதப் பொருளாகிவிட்டது. இது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
அ.தி.மு.க. அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகும். இந்த அரசு 5 ஆண்டு காலத்துக்கும் தொடரவேண்டும். அரசுக்கு எதிரான சதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்காது. மத்திய அரசு அ.தி.மு.க. மீது உள்ள வழக்குகளை காரணம் காட்டி, அவர்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. எனவே மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. காவிரி மேலாண்மை திட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும். அத்துடன் தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ராமநத்தம் அருகே கொரக்கைவாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாமல் சிலர் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  minnambalam,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக