வெள்ளி, 30 டிசம்பர், 2016

ராவ் அறையில் சோதனை ஏன்? கோட்டையில் ஒரு அறையில் இரண்டு மொபைல் விவகாரம்

சென்னை, கோட்டையில் உள்ள, ராமமோகன ராவ் அறையில், சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீட்டில், நாங்கள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு சார்பில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரையும், அவரது நண்பர்களையும், சி.பி.ஐ., கைது செய்தது. ரெட்டியின் வடநாட்டு நண்பர்களும், அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். அதனால், தன் வீட்டுக்கு, சி.பி.ஐ., அல்லது அமலாக்கப் பிரிவு போன்ற, கைது செய்யும் அதிகாரம் படைத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள் வரலாம் என, ராவ் எதிர்பார்த்து இருக்கிறார்.
அதனால் தான், 'நான், வேறு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணைக்காக வருவர் என எதிர்பார்த்தேன்' என, எங்களிடம் கூறினார். பெரும்பாலும், சோதனையிடச் செல்லும் இடங்களில், மொபைல் போன்களை, 'ஆப்' செய்யும்படி சொல்லி விடுவோம். ஆனால், ராவ், தலைமைச் செயலர் நிலையில் இருந்ததால், பேச அனுமதித்தோம். அப்போது அவர், தனி உதவியாளரை அழைத்து, கோட்டையில் உள்ள அறையில், இரு மொபைல் போன்கள் இருப்பதாகவும், அதை, டிரைவரிடம் எடுத்து கொடுக்கும்படியும் கூறினார். அதன் பிறகே, கோட்டையில் சோதனை நடத்த, வாரன்ட் தயார் செய்தோம். அந்த மொபைல் போன்களை, அவர் வீட்டுக்கு கொண்டு வருவதில்லை; சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் - தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக