வியாழன், 8 டிசம்பர், 2016

மோடியின் ராஜகுரு சோ ராமசாமி- மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
chovinavu.com சோ ராமசாமி 7.12.2016 புதன் கிழமையன்று அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சோ-வைப் போன்றே நகைச்சுவை நாடகத்தால் பிரபலமான எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்த போது  “நம்முடைய ராஜகுரு எப்படி இருக்கிறார்?” என்று சோ ராமசாமியைக் கேட்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும்? மோடியின் ராஜகுரு சோ ராமசாமி (ஸ்ரீ நிவாச அய்யர் ) பார்ப்பனியத்தின் விதிப்படி தேவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் குபேரனுக்கு குஜராத்தில்தான் ஆலயமே உள்ளதாம். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே இந்த ஆலயம்தான் என்று ஏதோ ஒரு சாதா ஜோசியர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அந்த குபேர ஆலயத்தில் குபேரனுக்கு விக்கிரகம் இல்லையாம். பாதாளம் வரை பாயும் பணத்திற்கு தனிச்சிறப்பாக எதற்கு ஒரு அடையாளம் என்று குபேரன் பெருந்தன்மையாக தவிர்த்திருக்கலாம்.

இந்திய மன்னர்களைப் பொறுத்தவரை குபேர குரு, ராஜகுரு இருவருமே தேவைப்பட்டனர். ஆள்பவர்களின் செல்வப் பெருக்கிற்கு குபேர குருவும், ஆளப்படுபவர்களின் பக்தி விசுவாத்திற்கு ராஜ குருவும் தேவைப்பட்டனர். ராஜபக்தி, விசுவாசம், அடிமைத்தனம் அனைத்தும் மக்களிடம் வேர்விட்டு செழிக்கச் செய்வதே ராஜ குருக்களின் பணி.
அத்தகைய மக்கள் பக்திதான் பட்டாபிஷேகத்தன்று குருவின் தண்டத்திலிருந்து கிரீடம் வழியாக ராஜாவின் தலையில் அமர்ந்து கொண்டு பாதுகாப்பளிக்கிறது.
இன்றைக்கு கருப்புப் பூனை அதிரடிப்படையின் தயவிலேயே சிறு-குறு-பெரு அரசர்கள் பாதுகாப்பை உணர்ந்தாலும், ராஜ குருக்களின் இடம் அரசவையிலிருந்து, ஊடகம், அதிகார வர்க்கம், மேட்டுகுடியினர் என்று கிளைபரப்பிவிட்டது. ஜெயாவின் இறுதிச் ஊர்வலத்தை திருவில்லிபுத்தூர் கும்பாபிஷேகம் போன்று இருநாட்களும் இடைவெளியில்லாமல் மனமுருகிப் பேசிய  பாண்டே அதற்கோர் சான்று.
பாண்டேக்களின் காலத்தில் சோ ராமசாமியின் குருப் பாத்திரம் கொஞ்சம் இத்துப் போயிருந்தது உண்மைதான். மேலும் சோ-வின் தமிழக அரசியல் பாத்திரமென்பது அவாள்களின் நலன்களுக்கான தரகர் பாத்திரமாகவே நசுங்கியிருந்தது. செம்பு நசுங்கினாலும் அதையே பல்வேறு தருணங்களில் பஞ்சாயத்துக்களுக்கு அழைத்து வந்தனர்.
அப்பல்லோ அறை எண்ணில் அம்மா இருந்தபோது அவரது மர்ம உலகில் முன்னணி பாத்திரமாற்றிய சோ-வும் சிகிச்சைக்காக வந்தார். அம்மா போன அடுத்த நாளில் அவரும் போய்விட்டார். இல்லையேல் இன்று மன்னார்குடி மாஃபியாவுக்கு போட்டியாக மயிலாப்பூர் மாஃபியாவின் அணித்தலைவராக அவர் மோடியின் பொருட்டு களமிறங்கியிருப்பார். பரவாயில்லை சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, ஜெயேந்திர சரஸ்வதி மட்டுமல்ல, தினமணி வைத்தி, பத்ரி சேஷாத்ரி போன்ற நவயுக ராஜ குருக்களும், சமஸ் போன்ற கருப்பு ராஜ குருக்களும் அப்பணியை ஓரளவிற்கேனும் செய்வர்.
Vijayakanth-and-Tamilnadu-cm-jayalalitha-party-(11)
ராஜபக்தி, விசுவாசம், அடிமைத்தனம் அனைத்தும் மக்களிடம் வேர்விட்டு செழிக்கச் செய்வதே ராஜ குருக்களின் பணி.
சோ-வின் பாத்திரத்தை எப்படி வரையறுப்பது? அவரது நாடகம், பத்திரிகை, தரகர் வேலை அனைத்திலும் பார்ப்பனியத்தின் நலனே பிரதானமாயிருந்தது. அதற்காக அவர் பொய்யுரைப்பதைக் கூட குற்ற உணர்வின்றி செய்தார்.
பத்திரிகையாளர் ஞாநியும், காலஞ்சென்ற சின்னக்குத்தூசியும் சங்கர மட ஜெயந்திரனை நேர்காணல் செய்தபோது சங்கர்சாரி ஒரு விசயத்தை கூறியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு முந்தைய துக்ளக் இதழில் சோ – தி.க வீரமணி  நேர்காணல் வந்திருந்தது. அதில் சோ ஆவேசமாக பல பார்ப்பனியக் கேள்விகளைக் கேட்கிறார். “ராமசாமிக்கு இன்னின்ன கேள்வி கேக்கணும்னு” தான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்று ஞாநியிடம் பொய்யுரைக்கிறார் ஜெயேந்திரர். இதைப் பதிவு செய்து ஞாநி உடனே சோவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். இருவரும் குடும்ப நண்பர் என்பதால் ஞாநி சொல்வது உண்மை என்பதை சோ அங்கீகரிக்கிறார். எனினும் அடுத்து வந்த துக்ளக்கில் ஜெயேந்திரர் அப்படி கூறியிருக்கமாட்டார், ஞாநி பொய் சொல்வதாக எழுதிவிட்டார். காரணம் என்ன?
இந்தச் செய்தியை கேட்டபோது சங்கராச்சாரி அப்படி பொய் சொன்னதை மறுக்காத சோ என்ன இருந்தாலும் சங்கரமடத்தின் கௌரவம்தான் முக்கியமானது, அது ஜெயேந்திரனது பொய்யை விட முக்கியமானது என்றிருக்கிறார். அதன்படி சங்கராச்சாரியின் பொய்யை ஞாநி-சின்னக்குத்தூசியின் பொய்யாக மாற்றிவிட்டார்.
இந்த நேரத்தில் ஏன் அவர் குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லை? அதுதான் பார்ப்பனிய நலன். ஒரு பார்ப்பன ராஜகுருவின் தலையாயத் தகுதியே இதுதான். சாவதற்கு முந்தைய துக்ளக்கில் கூட அவர் அப்படித்தான் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்கிறார்.
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் ஒன்றை அவர் நடத்துகிறார். அதில் தி.க.வின் அருள்மொழி கலந்து கொண்டு எடுத்த எடுப்பிலேயே “உங்கள் பத்திரிக்கையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எழுதிவிட்ட பிறகு எதற்கு விவாதம்” என்று கேட்கிறார். கிரிக்கெட்டின் ரசிகரான சோ இந்த கிளீன் போல்டை ஒத்துக் கொண்டாலும் நாம் விவாதிப்பதற்காக ஒரு எபிசோடை கொடுத்திருக்கிறார்கள், அந்த 20 நிமிடங்களில் ஏதாவது பேசியாக வேண்டும், பேசுங்கள்” என்று சமாளித்திருக்கிறார். இதுதான் சோ.
எனினும் இப்படி பார்ப்பனியத்தின் பிதாமகராக நெஞ்சார பொய்யுரைத்தாலும் அவரது ‘துணிவு, நேர்மை, நகைச்சுவை’ காரணமாக அனேகமானோர் பாராட்டி நினைவு கூர்கின்றனர். செத்தோரை சிறுமைப்படுத்தக் கூடாது என்று வாழ்பவர்களை வதைக்கும் ஒரு பிரபலமான ‘தத்துவப்படி’ இந்தக் கருத்து “ஆல் பர்ப்பஸ் அங்கிள் மற்றும் ஆண்டிக்களின்’ வாய்களால் அடிக்கடி பிதுக்கப்படுகிறது. மற்றபடி இந்த தத்துவத்திற்க்கென்று குறிப்பான விளக்கமோ, பொருளோ, வாதமோ இல்லை. இந்த முன்வைப்பே இப்போது பேசாதே, அப்போது பேசியிருந்தாலும் செத்த பிறகு பேசாதே என்று கண்காணிப்பதுதான்.
முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக்
இறுதியில் சோ-விடம் மிச்சமிருப்பது நகைச்சுவை மட்டுமே. உண்மையில் அது நகைச்சுவைதானா? அதற்கு சோ-வின் வரலாற்றுக் காலத்தோடு பயணிப்போம்.
சென்னை மயிலாப்பூர், தமிழக ராஜகுருக்களின் தலைநகரம். பாரதியோ இல்லை ஆழ்வார்பேட்டை ஆண்டவனோ, போயஸ் தோட்டத்து பெருந்தலைகளோ, ஊடக குழுமங்களின் அதிபர்களோ அனைவரும் சங்கமித்திருக்கும் புண்ணிய பூமி. இங்கே 1934-ம் ஆண்டில் பிறக்கும் சோ அறிவியல் பட்டதாரி ஆகி, கிரிக்கெட் ஆடி பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பெற்றார். பல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக பணியாற்றியிருக்கிறார்.
இன்றைக்கும் நமது மக்களுக்கு நீதிமன்றம் என்றால் அது அன்னிய பாஷையில், வெள்ளைத் தோல் மனிதர்கள், காக்கிச் சட்டை காவலர்களுடன் அதிகாரம் செலுத்தும் ஒரு தூரப்பிரதேசம். அந்தப் பிரதேசத்தின் விதிகள், முறைகள், வழிகள், ஆட்டங்கள் எதுவும் நமக்கும் தெரியாது. காலனியாதிக்கத்தின் காலத்தில் உருவாகியிருந்த சமூக மாற்றத்தின் மேல் மட்ட இடங்களில் பணியாற்றுவதற்காக அல்லது ‘வளர்ச்சிக்காக’ நிலங்களைத் துறந்து சென்னைக்கு படையெடுத்தனர் அக்கிரகார கிராமங்களிலிருந்த பாரம்பரிய பார்ப்பனர்கள்.
அரசு அதிகார வர்க்கம், போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பத்திரிகை – நாடகம் – சினிமா போன்ற துறைகளில் அன்றைக்கு இவர்களே பிள்ளையார் சுழி போட்டு ஆக்கிரமித்தனர். அக்கிரகாரத்தின் சோம்பிப் போயிருந்த திரேதாயுக அறிவு நவயுக கலிகாலத்தின் வாய்ப்புக்களால் உப்பத் துவங்கியிருந்தது.
கிராமங்களில் பார்ப்பன புராண புரட்டுக்களால் உழைக்கும் மக்களை விட அறிவிலும், சாமர்த்தியத்திலும் மேலானவர்களாக நம்பியவர்களை பாரிமுனை நீதிமன்ற வளாகம் இன்னும் ஒரு மடங்கு தூக்கி விட்டது. மக்களோடு இணைந்து பணியாற்றி உருவாகும் சமூக அறிவிற்கும், மக்களை அரசியல் அமைப்பால் ஆளும் அதிகாரத்திலிருந்து உருவாகும் அறிவிற்கும் பாரிய வேறுபாடு உண்டு.  முன்னது அவர்களின் சிரமங்களை உணர்ந்து மாற்றுவதை நோக்கி பயணிக்கும். பின்னது அவர்களின் கட்டுப்படுதலை ஆராய்ந்து இன்னும் என்ன அதிகம் கட்டுப்பாடு கொண்டு வரலாம் என்று யோசிக்கும்.
su-samy-cho-samy
சு.சாமியுடன் சோ சாமி
இந்த பார்வைதான் காங்கிரசு, மவுண்டு ரோடு மகா விஷ்ணு போன்ற ஊடக முதலாளிகள், காஞ்சி மடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் செயல்பாட்டை அன்றைக்கும் தீர்மானித்தது. இத்தகைய மயிலாப்பூர் அழகியலில் உருவான இளம் வயது சோ எப்படி இருந்திருப்பார் என்பதை முதிய வயது சோ மூலம் கண்டுபிடிக்கலாம். இந்தப் பின்னணியில் சோ நாடகம், திரைப்படத்துறையில் நுழைகிறார். இவை அந்தப் பார்வையை இன்னும் மலிவான முறை அவதாரமாக்குகிறது.
தருமபுரியில் 2000-ம் ஆண்டுகளின் மே நாள் ஒன்றில் கலந்து கொண்டு ஓசூருக்குச் சென்றோம். அங்கே விவசாயிகள் விடுதலை முன்னணியின் தொடர்பில் இருந்த சில பரிசல் தொழிலாளிகளைச் சந்தித்தோம். அவர்களில் ஒருவர், தான் அமைப்பின் தொடர்பில் வருவதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தனது சூழலில் பேசியதாகவும், இப்போதுதான் கேட்கப்படும் ஒரு சில கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலளிப்பதாகவும் சுருங்கச் சொன்னால் சகஜமாக பேசுவதையே இப்போதுதான் கற்றுக் கொண்டேன் என்றார்.
காலச்சுவடு நடத்திய தமிழ் இனி 2000-ம் கருத்தரங்கில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சனும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நமது தமிழ் மக்கள் பேசிய வார்த்தைகளே சில பத்து எண்ணிக்கைக்குள் முடிந்து விடும் என்றார். பார்ப்பனியத்தால் கல்வி பறிக்கப்பட்ட நமது சமூகத்தின் நிலை இப்போதே இப்படித்தான் எனும் போது மயிலாப்பூர் மாட வீதிகளில் சோ வலம் வந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதை விரிக்கத் தேவையில்லை.
அவ்வாறாக பேசா மந்தைகளாக நம் மக்கள் இருக்கும் போது இவர்கள் பேசுவதெல்லாம் வியப்புரியதாகவும், அறிவுக்குரியதாகவும் கருதப்படுவதில் வியப்பென்ன?
பகீரதனின் “தேன்மொழி” நாடகத்தில் சோ எனும் பாத்திரத்தில் நடித்த ராமசாமிக்கு அதுவும் இயற்பெயருடன் சேருகிறது. பிறகு அவரே நாடகம் எழுதி இயக்குகிறார். “முகமது பின் துக்ளக்” நாடகம் பிரபலமாகிறது. விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்” எனும் நாடக கம்பெனியை 1954-ம் ஆண்டில் துவங்குகிறார். பிறகு திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார்.
ntr-mgr-cho
திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் அ.தி.மு.கவின் ஆஸ்தான வித்வானாகவும் மாறினார்.  எம்.ஜி.ஆரின் அருகில் அமர்ந்திருக்கிறார் சோ. படம் நன்றி: விகடன்
அவரது நாடங்களில் அரசியல் நகைச்சுவை இருப்பதாக பாராட்டப்படுகிறார். சபா நாடகங்களில் சென்டிமெண்டும், நகைச்சுவையும் இருக்கும் போது சோவின் அரசியல் நகைச்சுவை ஒரு புதிய அடையாளமாக தோன்றுகிறது. அப்போது அதற்கு போட்டியாக இருந்த எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை மக்களின் ஆதரவோடு இருந்தது என்றால் சோ போன்றவர்களின் காமடி ஆளும் வர்க்கங்களின் தயவில் பிறந்தது.
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காமடி எனும் வார்த்தை வெறுமனே தோற்றப்பிழைகளையோ இல்லை வார்த்தை சேர்க்கைகளையோ வைத்து உருவாக்கப்படும் நகைச்சுவையை குறிக்கிறது. அத்துடன் அதிகாரத்தின் பீடத்தில் இருந்து கொண்டு அப்பாவிகளாக வாழும் மக்களுக்கு உபதேசிக்கும் பார்வை சேரும் போது பழைய கள்ளே என்றாலும் புதிய மொந்தை என்று ரசிக்கப்படுகிறது.
கோவில்களிலும், மண்டபங்களிலும் கதாகலாட்சேபம், மற்றும்  புராண உரைகள் என்று மக்களின் ஓய்வு பொழுதுபோக்கை தீர்மானித்தவர்கள், பின்னர் தொழில்நுட்பம் – முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக நாடகம், சினிமாவை பயன்படுத்துகிறார்கள். சோ-வின் காலத்தில் எளிய மக்களின் குரலை பொது அரங்கிற்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். காலனியாதிக்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே வேத கால பண்பாட்டின் பெருமைகளை பேசித்தீர்த்த பார்ப்பன ஆதிக்க சாதியினர், திராவிட இயக்கம் வளர்ந்த போது கலிகாலத்தின் வருகை குறித்த துக்கத்தை பேச்சிலும், மூச்சிலும், இடைவிடாது வெளிப்படுத்தினர்.
அழிந்து வரும் நிலவுடமைச் சமூகத்தின் மேல் தட்டில்தான் பார்ப்பனர்களும் மற்ற பிற “உயர்” சாதியினர் வருகின்றனர். திராவிட இயக்கம், பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்ணுரிமை, நாத்திகம், அறிவியல் பார்வை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, தமிழ் மொழி உரிமை அனைத்தும் பொது அரங்கிற்கு வரும் போது அரசியல் அரங்கில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோர் அதை எதிர்கொண்டனர். கலைத்துறையில் சோ உள்ளிட்ட பலர் அதை எதிர் கொண்டனர்.
நிலவுடைமை சமூகத்தின் பணக்கார மாந்தரின் சோகத்திற்காக சிவாஜி கணேசனது படங்கள் கண்ணீர் விடுத்தன. அதையே மாற்றிப் போட்டு ஏழை மக்களின் அறியாமையென காமடியாக்கினார் சோ முதலானோர். அதாவது இந்த அப்பாவிகளின் நலன் பேசிய திராவிட இயக்க அரசியலுக்கு அவர் வில்லனாகினார். சோவின் திராவிட இயக்க வெறுப்பு, ஆணாதிக்கம், ஆர்.எஸ்.எஸ் அபிமானம், பார்ப்பனிய பக்தி அனைத்துமே அவரது நேர்மை, துணவின் இலக்கணமாக மடைமாற்றப்படுகிறது. சாகும் வரை ஹிட்லரோ இல்லை முசோலினியோ கூட தத்தமது கொள்கைகளில் உறுதியாகத்தான் இருந்தனர். ஆனால் அதற்காக மேற்குலகில் அவர்கள் பாராட்டப்படுவதில்லை.
cho-with-jaya1
ஜெயா ஆசிபெற்ற ஒரே ராஜகுரு
இந்த நகைச்சுவையில் அரசியலை எடுத்து விட்டால் அது எஸ்.வி.சேகர் – விசு வகையறாக்களின் பிளேடு வகைப்பட்ட சபா நாடக காமடி மட்டுமே. எஸ்.வி.சேகரது நாடகத்திற்கு வரும் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். நாடகத்தில் “மாப்பிள்ளை எப்படி இருப்பார்?” என்று ஒரு வசனம் வந்தால் சேகர் டைமிங்காக  “என்னை என்ன தமிழ்நாடு போலீஸ் மாதிரி தொந்தி கணபதின்னு நினைச்சீங்களா, நான் சிக்ஸ்பேக் ஆர்னால்டு” என்பார். முதல் வரிசை அதிகாரிகளும் கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். இதையே சோவாக இருந்தால் “மாப்பிள்ளைக்கு என்ன, காலையில மந்திரி வீடு, மாலையில கலெக்டர் வீடுன்னு” பிசியா இருக்கார் என்பார்.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எஸ்.வி.சேகர், சென்ற 2015 ஆண்டின் மழை வெள்ள நாட்களில் மளிகைக் கடை அண்ணாச்சிகள் நெருக்கடியை பயன்படுத்தி பொருட்களை பதுக்கினர், அவர்கள்தான் இன்று மோடியின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்று இரக்கமே இல்லாமல் கொடூரமாக எழுதினார். இதில் அண்ணாச்சிகள் யாரும் பதுக்கவில்லை என்பதோடு இன்று பழைய நோட்டுக்களை வாங்கியோ இல்லை கடன் சொல்லியோ மக்களுக்கு சேவை செய்கின்றனர். இதுதான் எஸ்.வி.சேகர் எனும் மயிலாப்பூர் மாஃபியாவின் நகைச்சுவைத் தரம். அதுதான் சோவின் அரசியல் தரம்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
ஜெயாவின் முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் முழு தமிழகத்தையும் கொள்ளையடித்த போது பின்னாளில் மூப்பானரை பிரிந்து வரச் செய்து த.மா.கா ஆரம்பித்து, தி.மு.கவோடு கூட்டணி வைக்க சோ-வே காரணம் என்கிறார்கள். அன்றைக்கு சோ-வோ இல்லை சூப்பர் ஸ்டாரோ இல்லையென்றாலும் ஜெயாவிற்கு செருப்படி கிடைத்தே இருக்கும். பின்னாளில் இரண்டு மூன்று முறைகள் ஜெயா தனது உடன்பிறவாச் சகோதரியை விரட்டிய போதுதான் முந்தைய முரண்பாடுக்கு காரணம் மன்னார்குடி என்ற உண்மை தெரியவந்தது.
பாஜக கூட்டத்தில்
பாஜக கூட்டத்தில் ராஜகுரு
பின்னாட்களில் அவர் தனது ‘நடுநிலை’ முக்காட்டை தூற எறிந்துவிட்டு அம்மணமாக அ.தி.மு.கவை ஆதரித்தார். அதன்பொருட்டே பா.ஜ.கவையோ காங்கிரசையோ ஆதரித்தார். பிறகு சசிகலா திரும்பிய பிறகு அவரது மயிலாப்பூர் மாஃபியா பழைய இடத்தை பெறவில்லை என்றாலும் ஜெயாவை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குன்ஹாவை விமரிசித்ததாக இருக்கட்டும், நேர்மையான ஆச்சார்யாவை திட்டியதாக இருக்கட்டும், அனைத்தும் ஒளிவு மறைவின்றி நடந்தன.
மோடியின் மூலம் இந்தியாவிலும், தமிழகத்திலும் பார்ப்பனியம் மீண்டு வரும் என்ற கனவோடுதான் 2014 தேர்தலில் முன்கூட்டியே மோடியை ஆதரித்தார். துக்ளக் ஆண்டு விழா கூட்டத்திலும் பேச வைத்தார். வைகோ, ரஜினி, விஜயகாந்த, இறந்து போன மூப்பனார், அனைவரும் இந்த செயல்தந்திர நோக்கிலேயே சோவோடு பேசினர், உறவாடினர், இன்று மரியாதையும் செய்கின்றனர். தற்போது இவரால் அர்ச்சிக்கப்பட்ட தி.மு.கவும் சரி, இவரது இந்துத்துவப் பார்வை குறிவைக்கும் தலித் மக்களின் கட்சி என்றழைக்கப்படும் வி.சி.கவும் சோ புகழ் புராணம் பாடுகின்றன. ராஜ குருவின் பவர் அத்தகையதாம்.
சசிகலா கும்பலை மீண்டும் தலையெடுக்க கூடாது என்பதற்காக அவர் மிடாசின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். மிடாஸ் என்பது தமிழக மக்களை மொட்டையடித்து சுருட்டப்பட்ட ஒரு சொத்து. அதன் சீமைச்சாராயம் தமிழக மக்களை குடிகாரர்களாகக் கொல்கிறது என்றால் அதன் உரிமையாளர் தமிழக மக்களுக்கு குடியுரிமையே இல்லையென்பதாக ஒடுக்கியபவர். இப்படித் திருட்டுச் சொத்தின் பாதுகாவலராக அறியப்பட்ட சோவின் அடையாளம் என்ன?
மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக