சனி, 10 டிசம்பர், 2016

பழ.கருப்பையா : சசிகலாவுக்கு வழக்கினால் சீர்குலைவு ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தை பெருமளவு தவிடு பொடியாக்கிவிடும்

பழ.கருப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ: ஒரு வலிய தலைவர் இயற்கை எய்திவிட்ட நிலையில், அந்தக் கட்சியினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுவது மிகவும் இயற்கையானதுதான். அந்த ஆர்வத்திலேதான், இந்த நாட்டினுடைய தலைமை அமைச்சர் தன்னுடைய அரிய நேரத்தை ஒதுக்கி, ஒருவழியில் ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரிவிக்க வந்தார் என்று சொன்னாலும்கூட, இன்னொருபக்கம் அவர் மீன் பிடிக்க வந்தவர்தான்.
ஆகவே, இந்த அரசு அந்த வலையில் சிக்கிக்கொண்டு இருக்கிறதா, இல்லையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சசிகலாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்ற உச்சநீதிமன்றத்தின் வாள், அது தலையின் மீது தொங்குகிற வாள் மட்டும் இல்லை. அது இந்த அரசாங்கத்தின் மீது தொங்குகிற வாளும்கூட. ஏனென்றால், அவருக்குப் பிறகு இந்தக் கட்சியை ஓரளவுக்குத் தன்னுடைய கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிற அந்தப் பெண்மணிக்கு, இந்த வழக்கினால் ஏதாவது ஒரு சீர்குலைவு ஏற்படுமானால், அது இந்த அரசாங்கத்தை பெருமளவுக்கு தவிடுபொடியாக ஆக்கிவிடும்.

வெளியேற்றப்பட்டவனெல்லாம் எனக்கு இடம் வேண்டும் என்று கேட்பான். உள்ளே இருக்கிறவனையெல்லாம், இவனை வெளியேற்றிவிட்டு அவனுக்கு இடம்கொடுப்பது என்பது அந்த அம்மாவின் பழக்கம். மறுபடியும் இப்படியே ஒரு சுழற்சியில் செய்து கொண்டு இருப்பார். இதை செய்ய இன்றைக்கு முடியாது. உள்ளே இருப்பவனை வெளியேற்றினால் அவன் கலகம் செய்வான். வெளியே இருப்பவனை உள்ளே கொண்டு வராவிட்டாலும் அவன் கலகம் செய்வான்.
ஆகவே, இவர்களுடைய பொழுது முழுவதும் இதற்குதான் சரியாக இருக்குமே தவிர, எல்லோரும் தங்களுடைய சாதியைக்காட்டி பயமுறுத்துவார்கள். இது இந்த நாட்டினுடைய தீமை. அதற்கு இடம்கொடுத்து வளர்ந்து இருக்கிற இந்தக் கட்சிக்கு ஏற்படப் போகிற சீர்குலைவும் அதனாலேதான் ஏற்படும். எளிதாக நாளைக்கே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்று என்னால் கருத முடியவில்லை. ஏனென்றால் அதிகாரத்தில் இருந்தால்தான் நாம் அதற்குரிய பலனை அடைய முடியும் என்று ஒவ்வொருவனும் நினைப்பான்.
ஒரு பத்து காசு நம்முடைய பைக்கு வர வேண்டும் என்றால், அதிகாரத்தில் இருக்க வேண்டும். ஆகவே, என்ன காரணம் கொண்டும் நாம் இந்த ஆட்சியை இழந்துவிட்டால் நாம் எல்லோரும் மறுபடியும் பால் விற்கப் போக வேண்டும். மாடு பிடிக்கப் போக வேண்டும். இதுபோன்ற காரியங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆகவே, அந்த அச்சத்தின் காரணமாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் அவர்கள் இணைந்து இருப்பார்கள். இந்தக் கட்சி ஒருவழியாக நடந்து கொண்டு இருக்கும். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக