ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பாஜக அமைச்சர் :பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமில்லை... விளக்கெண்ணைக்கு வெளங்கிடுச்சு .. ஆனா பேஷன்ட் புட்டுகிடுசுடா

இந்தியாவில் தற்போது முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு சாத்தியமே இல்லை என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த நடவடிக்கையால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா அரசு, பொதுமக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் புதுச்சேரியில் பணமில்லா பரிவர்தனை நடைமுறைக்கு வந்தாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் இதுவரை பணமில்லா பரிவர்த்னையை ஆதரித்து வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தற்போது அதற்கு எதிராக பேசியிருக்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா மாநிலம் பானாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்தியாவில் தற்போது பணமற்ற பரிவர்த்தனை முழுமையாக சாத்தியம் இல்லை. பணப் பரிமாற்றத்தை சிறிது அளவு குறைக்கவேண்டும் என்றால் டிஜிட்டல் வர்த்தகம் பயன்படும். அவ்வளவுதான்” என்று தெரிவித்தார். தொடக்கத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதரவு தெரிவித்த பாரிக்கர், தனது மாநிலமான கோவாவில் புத்தாண்டில் இருந்து 100 சதவீத பணமற்ற பரிவர்த்தனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது பணமற்ற பரிவர்தனை சாத்தியம் இல்லை என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று மத்திய அரசின் பணமற்ற பரிவர்த்தனை கனவாகவே முடியும் என்று உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதே போல் பணமில்லா பரிவர்த்தனையை சாத்தியமாக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் தலைவரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திர பாபு நாயுடு, “ரூபாய் நோட்டு நடவடிக்கை துயரத்தில் முடிந்துள்ளது. பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடியவில்லை. பணமில்லா பரிவர்த்தனை இங்கே இப்போதைக்கு சாத்தியமில்லை” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோடியின் திட்டம் தோல்வியை நோக்கி நடை போடுகிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக