செவ்வாய், 27 டிசம்பர், 2016

இணைப் பொது செயலர் சசிகலா? கடைசி நேரக் குழப்பத்தில் போயஸ்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகி விட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் சசிகலா. அதற்கு ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன. இதனால், வரும் 29ம் தேதி சென்னையில் கூடும் பொதுக் குழு மூலம், கட்சியின் இணைப் பொதுச் செயலராக சசிகலா இறங்கி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், போயஸ் தோட்டத்தில் கடும் குழப்பம் நிலவுகிறது.>இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பின், முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அவரையே, கட்சியின் பொதுச் செயலராகவும் நியமிக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்பினாலும், அதை, சசிகலா தரப்பு கண்டு கொள்ளவில்லை.இதற்காக, ஒவ்வொரு மாவட்ட செயலரையும் அழைத்து, சின்னம்மா சசிகலாதான், கட்சியின் பொது செயலராக வேண்டும் என்று தீர்மானம் போட்டு வரச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்ட செயலரும் அதே போலவே தீர்மானம் போட்டு வந்து, சசிகலாவிடம் அதை ஒப்படைத்துள்ளனர்.



தீர்மானம்:

அதேபோல, கட்சியின் அனைத்து அணிகள் தரப்பிலும் தீர்மானம் போட வலியுறுத்தப்பட்டு, அதனபடியே, செய்துள்ளனர். அமைச்சர்களில் துவங்கி, அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து, தங்கள் எண்ணத்தை வலியுறுத்த வேண்டும் என, நிர்ப்பந்திக்க, தினந்தோறும், வரிசையாக அக்காட்சிகள் நடக்கின்றன.


சமாதானம்:

சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த ராஜ கண்ணப்பன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி போன்ற மூத்தத் தலைவர்களையும் அழைத்து சமாதானம் பேசி, அவர்களும் சசிகலா தலைமையை ஆதரிப்பது போல நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால், சசிகலாவை கட்சியின் பொதுச் செயலர் ஆக்குவதற்கு, சசிகலா புஷ்பா போன்ற கட்சி உறுப்பினர்கள் சிலர் தடையாக உள்ளனர். 2011ல் ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காட்டப்பட்டு, போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின், அவர், 2012 ஏப்ரலில்தான், கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.


வழக்கு:

கட்சியின் அடிப்படை விதிகளின் படி, ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவர் மீண்டும் சேர்ந்தால், சேர்ந்ததில் இருந்து ஐந்து ஆண்டுகாலம், அவர் கட்சியின் எந்த நிர்வாகப் பொறுப்பிற்கும் போட்டியிட முடியாது. இந்த விதியின் அடிப்படையில், சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக தடை விதிப்பதோடு, பொதுக்குழுவில் அவர், பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சசிகலா புஷ்பா.


பொதுச் செயலர் தேர்வு:

வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இது தொடர்பாக, தேர்த கமிஷன் வரையில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோடு, சசிகலா தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை விதிகளைப் பின்பற்றித் தான், கட்சியின் பொதுச் செயலர் தேர்வுக்கான தேர்தல் நடக்கும்; முறைப்படி எல்லாமே செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்துள்ளார். இதனால், அடிப்படை சட்டவிதிகளை மீறி, சசிகலா உடனடியாக அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


புதிய பொறுப்பு:

இந்நிலையில், பொதுக் குழுவின் ஒப்புதலோடு இரண்டு விஷயங்களில் ஒன்றை செய்யலாம் என சசிகலா முடிவெடுத்துள்ளார். கட்சியில் இணைப் பொதுச் செயலர் என்ற புதிய பொறுப்பை ஏற்படுத்தி, அதில் தன்னை நியமித்துக் கொள்வது. அல்லது, கட்சியை வழி நடத்த மூத்த தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமிப்பது. அக்குழு, கட்சியை தற்காலிகமாக வழி நடத்திச் செல்லும். பின், மார்ச் - ஏப்ரலில் மீண்டும் பொதுக் குழுவைக் கூட்டி, அதன் மூலம் சட்டச் சிக்கல் எதுவும் இல்லாமல், தன்னை பொதுச் செயலராக நியமித்துக் கொள்வது என்பது சசிகலாவின் தற்போதைய திட்டம்.


சஸ்பென்ஸ் :

ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் சசிகலா அமரவில்லை என்றால், மீண்டும் அந்த வாய்ப்பை அடைவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டும் என்று, சசிகலா உறவுகள், சசிகலாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால், இணைப் பொதுச் செயலர் அறிவிப்பில்தான், சசிகலா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால், வரும் ஜன.2ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சசிகலா, அ.தி.மு.க.,வின் இணைப் பொது செயலராக பொறுப்பேற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எது நடக்கப் போகிறது என்பது கடைசி வரை சஸ்பென்சாகவே இருக்கும் போல தெரிகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக