ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மடங்களும் சாமியார்களும் கருப்பு பணத்தை கமிஷனுக்கு மாற்றி கொடுக்கிறார்கள்


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து பழைய ரூபாய் 500,1000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இதனால் கமிஷனுக்கு கருப்புப் பணம் மாற்றி தரப்படும் தொழில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் 50% கமிஷனுக்கு பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும், சாமியார் மடங்களிலும் மாற்றி தரப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது டெல்லியின் காஷியாபாத்தில் உள்ள வைஷ்ணவி கோயில் பெண் சாமியார் ராதே மாதாவி பிரபலமானவர். கருப்புப் பணம் வைத்திருப்பவர்போல் நடித்து ஒரு பத்திரிகையாளர், ராதே மாதாவியிடம் பணம் மாற்றும் முறை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது, “வங்கி அதிகாரி ஒருவர் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு 50% கமிஷன் எடுத்துக் கொண்டு புது ரூபாய் நோட்டை உங்கள் வீடு தேடி வந்து வழங்குவார்.
இல்லையென்றால் வெளிநாட்டு ஹவாலா பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம். துபாய், கனடா, இங்கிலாந்து போன்ற எந்த நாட்டிலிருந்தும் பணத்தை வாங்கி கொள்ளலாம்” என்று ராதே மாதாவி கூறியுள்ளார்.
ராதே மாதாவிக்கு கருப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்த வங்கி அதிகாரி உத்திரப்பிரதேச மாநிலத்தின் அரசு காரில் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் 125க்கு ஒரு அமெரிக்க டாலர் என கருப்புப் பணம் மாற்றப்படுகிறது. இதேபோல் மதுராவில் உள்ள பிருந்தாவன் பிகாரி கோயிலில் 35% கமிஷனுக்கு கருப்புப் பணம் மாற்றப்படுகிறது. அந்த கோயிலின் நிர்வாகிகள் இதைப்பற்றி கூறுகையில், “நீங்கள் எவ்வளவு கருப்புப் பணத்தை கொடுத்தாலும் கவலையில்லை. நாங்கள் அதை கணக்கில் வரும்படி செய்துவிடுவோம். ரூபாய் ஒரு கோடி கருப்புப் பணம் கொடுத்தால் உடனடியாக ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான ரொக்கத்தை புதிய நோட்டுகளாக வாங்கிக் கொள்ளலாம்” என்றார்
டெல்லியில் உள்ள சித்த பீட கல்கா மடத்தின் தலைமை சாமியார் சுதா பரத்வாஜ் கூறுகையில், “பொதுவாக நீங்கள் கொடுக்கும் கருப்புப் பணத்துக்கு 40% புதிய நோட்டுகள் வழங்கப்படும். மீதி 60% கோயில் நிர்வாகத்துக்கு சேர்க்கப்படும்” என்று கூறினார்.
நொய்டாவில் உள்ள சாய் கோயிலில் 40% சதவிகித கமிஷனுக்கு மாற்றித் தரப்படுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய இந்த மாதம் மட்டுமே அவகாசம் இருப்பதால் சாமியார்களிடம் கருப்புப் பணத்தை மாற்ற பண முதலைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுத்துறை வங்கி அதிகாரிகளும், அரசு அதிகாரிகளுமே இக்குற்றத்துக்கு துணை போவதால் கருப்புப் பணத்தை மாற்றித் தரும் சாமியார்களிடம் அரசின் நடவடிக்கை பாயுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக