வியாழன், 22 டிசம்பர், 2016

தமிழக ஆட்சியை கைப்பற்றுவதற்குதான் ரெயிடுகள் நடத்தபடுகின்றன?

சமீபத்திய ஐ.டி ரெய்டுகள் செய்திகளைப் பார்த்து ‘அடேயப்பா’ என்றும், ’பரவாயில்லையே’ என்றும் குரல்கள் கேட்கின்றன. அதிலும் தமிழகத்தின் தலைமைச் செயலர் மீதே இந்த ரெய்டு பாய்ந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. வங்கியின் முன், ஏ.டி.எம் முன் கால்கடுக்க நின்றதற்கு எதோ பலனிருப்பதாக மக்கள் சமாதானம் கொள்ளவும் செய்யலாம்.
மோடியின் ’உயர் ருபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு’ அறிவிப்பின் மூலம் கருப்புப்பண மீட்பு என்னும் அதிரடி நடவடிக்கை பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதை மறைப்பதற்காகவே இந்த ரெய்டுகள் என்பதை முதலில் நினைவில் கொள்வோம். சேகர் ரெட்டியை பிடித்ததற்கும் ருபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரெய்டு நடத்தியிருந்தால் இரண்டாயிரம் ருபாய் நோட்டுகள் பிடிபட்டதற்கு பதிலாக ஆயிரம், ஐநூறு ருபாய் நோட்டுகள் பிடிபட்டிருக்கும். அவ்வளவுதான்.
அதிலும் இந்த ரெய்டுகள் ‘தேர்ந்தெடுத்து’ நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் அரசியலை ஆட்டுவிப்பதற்காக நடத்தப்பட்ட ரெய்டுகளே இவை. உயர் ருபாய் நோட்டுகள் மதிப்பிழந்த இந்த நேரத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்திய கர்நாடகா ஜனார்த்தன ரெட்டி மீது இந்த ரெய்டு நடத்தவில்லையே?. தன் மகள் கல்யாணத்திற்கு 50 சார்ட்டட் விமானங்களை புக் செய்து பெரும் ஆடம்பரமாய் செலவு செய்கிற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது இந்த ரெய்டு நடத்தப்படவில்லையே?

இப்படி பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், கள்ள வணிகம் நடத்துபவர்கள், பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் எல்லோரையும் உளவுத்துறை மூலம் அறிய முடியும். வருமான வரித்துறை மூலம் மீட்க முடியும்.
அதற்கு ஒட்டுமொத்த நாட்டையும் கிறுக்கு பிடிக்க வைத்திருக்க வேண்டியதில்லை. தங்கள் பணத்தை எடுக்க மக்களையே பிச்சைக்காரர்களைப் போல தெருவில் நிறுத்தியிருக்க வேண்டியதில்லை. சிறு தொழில்களை நசுக்கி இருக்க வேண்டியதில்லை. தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்திருக்க வேண்டியதில்லை.  முகநூல் பதிவு  மாதவா ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக