வெள்ளி, 23 டிசம்பர், 2016

மதுசூதனன் : மத்தியரசு தமிழக அரசை உள்நோக்கத்துடன் குறிவைத்து தாக்குகிறது

தமிழக அரசையும், ஆளும் கட்சியையும் குறிவைத்து தமிழகத்தில் நடத்தப்படும் சோதனைகள். ஒரே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும், அரசியல் கருத்துகளையும் உருவாக்கியிருக்கிறது.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மணல் குவாரி மற்றும் ஒப்பந்தப்பணி தொழில் செய்து வந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி நுற்றுக்கணக்கான கோடி ரூபாய்களையும், கிலோ கணக்கில் தங்க நகைகளையும் அள்ளிச் சென்றனர். அதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரிடம் அவருக்கு மிகநெருக்கமானத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, ராமமோகன் ராவ் வீட்டிலும், அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம், சித்தூர், பெங்களூர் உட்பட 14 இடங்களில் நேற்று முன்தினம் (21/12/2016) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
அதையடுத்து, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்றதற்கு பாஜகவே காரணம் என்றும், மத்திய அரசின் கொள்கைகளை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக பாஜக அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது, இந்த வருமானவரித்துறையின் சோதனைக்குப் பின்னால் மிகப்பெரும் உள்நோக்கம் உள்ளது. தமிழக முதலமைச்சர் அம்மா புரட்சித்தலைவி இறந்த சில நாட்களிலேயே பாஜக அரசு துரோகம் செய்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் இல்லை என்று உறுதியாகவும் கூற முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.அதிமுக செய்தி தொடர்பாளர் தீரன் கூறுகையில், இந்த செயல் பாஜகவின் திட்டமிட்ட சதியாகும். நாடாளுமன்றத்தில் அதிமுகவிற்கு 49 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவு தேவை என்பதற்காக பாஜக அரசு அதிமுகவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த சோதனையை நடத்தி மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதுபோல் உள்ளது .
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களுக்கு அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் நலனை கணக்கில் கொண்டும்தான் பாஜக அரசுக்கு முதல்வர் அம்மா எச்சரிக்கையாக ஆதரவு கொடுத்து வந்தார். தலைமைச் செயலாளர் மற்றும் பிற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது எங்களை மிரட்டுவதாக உள்ளது என்று அவர் கூறினார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவிற்கு எதிரான ஓட்டுகளையும், அதிமுகவின் ஓட்டுகளையும் கைப்பற்றும் நோக்கில் பாஜக அரசு இந்த தந்திரத்தை கையாள்கிறது. ஆனால் இந்த செயல் அவர்களுக்கு எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது பாஜகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கையைப் பொறுத்தே அமையவுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக