சனி, 17 டிசம்பர், 2016

சிரியாவில் நொந்து நூடில்சான அமெரிக்க மேலாதிக்கம் .. ரஷ்யாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மத்திய கிழக்கு !


அருண் நெடுஞ்செழியன்thetimestamil.com :அருண் நெடுஞ்செழியன்t; மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள வேட்டைக்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய நாடுகளின் போரானது, சிரியாவின் அலெப்போ வீழ்ச்சியோடு ஒரு சுற்று முடிவுறுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள்-குர்துகள் ஒரு முகாமாகவும் ஆசாத்தின் சிரியா அரசு-ரஷ்யா-ஈரான் மற்றொரு முகாமாகவும் மேற்கொண்ட சிரியாவின் மீதான பாகப்பிரிவனை யுத்தமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவடைந்துள்ளது.
ஏகாதிபத்திய நாடுகளின் வள வேட்டைக்கான இரண்டாம் சுற்றுப் போரானது,கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பிராக்சி போராக அல்லாமல் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான நேரடி யுத்தமாக வெடிக்கிற சூழல் கருக்கொண்டுள்ளது.

அது மத்திய தரைக்கடலில் மிச்சமுள்ள ஈரானை மையமிட்டோ தென் சீனக் கடலை மையமிட்டோ வெடிக்கிற ஆபத்து கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவில் தீவிரம் பெற்றுள்ளது.
1
நாடுகளுக்கு இடையிலான ஏகாதிபத்தியப் போரை நடத்துவது, நாடுகளின் ஏகபோக மூலதன சக்திகள்தான். அவ்வகையில் அமெரிக்காவின் பெரும் ஏகபோக சக்தியான எக்சான் மொபைல், செவ்ரான் எண்ணெய் நிறுவனம்,இங்கிலாந்தின் பிரிட்டிஷ் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சீனாவின் பெட்ரோ சீனா எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையிலான முரண்பாடாகவும், வளைகுடா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தென் கிழக்காசியாவின் எண்ணெய் வள மண்டலத்தின் செல்வாக்கை நிலைப்பெற வைக்கிற ஏகபோக மூலதன விரிவாக்கத்திற்கான ஆதிக்கப் போட்டியாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் அடைந்துள்ளது.
தற்போது,
• சிரியாவின் உள்நாட்டு போர் என்ற பெயரிலான அமெரிக்கா ரஷ்யப் போரில் தற்போது ரஷ்யா-ஈரான்-சிரியா வெற்றி பெற்றுள்ளது,
• அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு அமைச்சராக ஆப்கான் போரை நடத்திய போர் வெறியின் “மேட் டாக்” மேட்டிசை நியமித்துள்ளது
• மற்றொரு அமைச்சராக எக்க்சான் மொபைல் சி ஈ ஓ டில்லேர்சென்னை நியமித்துள்ளது,
• கால் நூற்றாண்டு கால ஒட்டுண்ணித்தன நிதி ஆதிக்க கும்பலின் திறனற்ற மூலதன முதலீட்டின் எழுச்சி மற்றும் வங்கிகளின் கட்டுப்பாடற்ற கடன் செலாவணியின் எழுச்சிப் போக்கானது ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளை திவால் நிலைமைக்கு கொண்டு வந்துள்ள நிலைமை,
• தற்போது,எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் க்கிற்கு வெளியே உள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகள்(ரஷ்யா,மெக்சிகோ,நைஜீரியா போன்ற நாடுகள்)எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது
என தற்போதைய சர்வதேசிய சூழலானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல்-பொருளியல் முரண்பாடாக தீவிரமடைந்துள்ளது.
2
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மாறிவருகிற உலக சூழலை தொகுக்க வேண்டுமென்றால்,
• இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில்,அரசின் தலையீட்டை வற்புறுத்துகிற,கீனிசிய பொருளாதாரப் பாணியிலான சமூக ஜனநயாக சீர்திருத்தவாத கொள்கையானது ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் தொழிலாளர்களுக்குமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமரசத்தை ஏற்படுத்திய போக்கு 80-90 களின் தாராளமய கொள்கையோடு முடிவுக்கு வந்தது,
• இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய சூழல் முதல் 80-90 வரை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிதி மூலதன எழுச்சியானது,கடந்த கால் நூற்றாண்டில் வங்கிகளின் மூலதன ஒன்றுகுவிப்பு மற்றும் அதன் பாகசுர வளர்ச்சியால் தீவிரமடைந்துள்ளது. ஊக வணிகம்,பங்கு வர்த்தக நிதியாதிக்க சூதாட்டம் அதனுடன் ஒட்டிப்பிறந்த குனாம்சமான வங்கிகளின் கடன் செலாவணி முரண்பாடு இந்த கும்பலால் தீவிரப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடிகள் எழுவது,
• கடந்த கால் நூற்றாண்டு கால தாராளமய கட்டத்தில், சீனா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஏகபோக மூலதன கும்பல்கள் எழுச்சி பெற்றுள்ளது,
• உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பொருளியில் செல்வாக்கின் பொற்காலமான 1948-90 ஆண்டு வரையான அரை தசாப்த ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று உலகின் ஒட்டுமொத்த ஏகாதிபத்திய முகாம்களின் முதலாளித்துவ அமைப்பானது 1929 ஆம் ஆண்டுன் நெருக்கடி சூழல் போல, தப்பிக்க வழியற்ற முட்டுச் சந்தில் முட்டி நிற்கிறது.அழுகிப்போன இந்த ஏகாதிபத்திய அமைப்பானது தனது முரண்பாட்டை,முதலாளிய விரிவாக்கத்திற்கான வேட்க்கையை தவிர்க்கவே இயலாத வகையில் போரின் மூலமாகவே தீர்த்துக் கொள்ள முயலும்.
3
இந்த பின்புலத்தில், இந்திய நிலைமையை பேசுவதென்றால்,
• நூறாண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட வங்கிகளின் நிதி மூலதன ஒன்றுகுவிப்பை, திரட்டலை தற்போது செல்லாக் காசின் அறிவிப்பால் இந்திய ஆளும் வர்க்க கும்பல் வங்கிகளில் திரட்டி வருவது,
• மாநிலங்களின் உரிமை பறிப்பு, ஒரே வரிக் கொள்கை என அதிகார பொருளியல் அலகுகளை மையப்படுத்திவருகிற போக்கு,
• 2008 க்கு பிறகான காலத்தில், கட்டுப்பாடற்ற வகையில் இந்திய ஏகபோக கும்பலுக்கு வங்கிகள் கடன் செலவாணியை வழங்கி திணறி வருவது,
• அமெரிக்காவை நம்பிய கணினி சேவைத் துறை ஏற்றுமதி குறைந்தால் நிலைமை படு மோசமாக வீழ்ச்சியடைகிற ஆபத்து
• ஒபெக் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டு அறிவிப்பால், அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக பெட்ரோல் டீசல் விலை இரு மடங்காக அதிகரிக்கிற வாய்ப்புகள், விலைவாசி ஏற்றத்திற்கு இட்டுச் செல்கிற ஆபத்துக்கள்,
• ஒட்டுண்ணிதன நிதி மூலதன முதலீடுகளால்,வேலையற்ற வளர்ச்சியின்(Jobless growth) அதிகரிப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகரங்களில் குவியவுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி கூற இயலாத நிலைமை, கிராமங்களின் தொடர்கிற விவசாயத் தற்கொலைகள்
• கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசின் வசமிருந்து பொருளாதார துறைகளான ரயில்வே, காப்பீடு, தொலை தொடர்பு, மருத்துவம், குடிநீர் விநியோகம், வங்கிகள், பிற பொதுத்துறை நிறுவனங்கள் உள்நாட்டு ஏகபோக கும்பல்கள் மற்றும் பன்னாட்டு ஏகபோக கும்பல்களிடம் கையளிக்கிற போக்குகள் தீவிரம் பெறுகிற ஆபத்து
என உள்நாட்டு நிலைமைகளின் அரசியல்-பொருளியில் முரண்பாடு தீவிரம் அடைந்து வருகிறது.
ஆக,அடுத்தது என்ன?
அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக