வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஆசிரியரின் அனுபவம்! நானும் செத்து செய்தியாகியிருப்பேன்

parvathiy-sriபார்வதி ஸ்ரீ: நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் எல்லாம் இருக்குமிடத்தைக்கூறி அழும் சிறியவளுக்கு சமாதனங்களைச் செய்துவிட்டு என்னிடம் தந்தார்..
“வீட்டு வாடகைக் கொடுக்கனும் டீச்சர். தினமும் வந்து 2000 எடுத்துட்டுப் போறேன். நேத்து இரண்டாவதா நிக்கும்போது பணமில்லாமப் போயிடுச்சி” என்றார்.. வங்கிக்குச் சென்றால் அங்கு அதைவிடக்கூட்டம் எனவும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துச் சென்றும் பணம் எடுக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பாவமாகத்தான் இருந்தது.

இந்நிலையில் பாதி முன்னேறியிருந்தோம்.. ஒரு நல்ல ஆத்மா பணம் இல்லை எனக் கூவிக்கொண்டே வெளியே வர “ச்சை” என புலம்பியபடியே கலைந்தது கூட்டம். டீச்சரும் புலம்பியபடியே கிளம்பினார். எதற்கும் சென்று பார்ப்போம் என உள்ளே சென்ற போது ஒரு பத்துபேர் இயந்தரத்தைச் சுற்றி நின்றிருந்தார்கள்.. அது சூடாகிவிட்டது என்றும் காத்துவரட்டும் நகருங்கப்பா என ஒருவர் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்.. அது நான் அடிக்கடி பணம் எடுக்கும் இயந்திரம். அது ஏற்கனவே 5 முறையாவது அட்டையைச் சொருகினால் தான் காசுதரும்.. இடைவிடாமல் வேலை செய்ததால் களைப்புப் போல..
இதற்கிடையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பி வந்து மறுபடியும் வரிசையில் வந்தனர். நல்லவேளை இதனால் இன்னும் ஒருமணிநேரம் நிற்க வேண்டிய நான் நான்காவதாக நின்றேன். அனைவரும் 5 முறைக்கு மேல் தேய்த்துக்கொண்டே இருந்தனர். இதில் பணம் கிடைக்காதவர்கள் அடுத்தவருக்கு வாய்ப்புவிட்டு தனிவரிசை வேறு. என் முறை வந்தது கிட்டத்தட்ட 5, 6,7 முறை அட்டையைச் செருகியும் ஏற்கவில்லை.. அனைவரிடமும் திட்டு வேறு.. பணம் எடுக்காமல் சென்றாலோ ஊருக்குச் செல்ல முடியாது.. ஒரு முறை புதியவர்கள், அடுத்தமுறை தோல்வியடைந்தவர்கள் என மாற்றி மாற்றி செருக.. எங்கள் வரிசையோ நீண்டுகொண்டே போனது.
பதற்றத்தில் வியர்த்துக் கொட்டுகிறது.. இதில் பணம் வந்தவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாகக் கருதி அவர்கள் ஒவ்வொருவரிடமும் உதவி செய்யக் கேட்டு தோல்வியே மிச்சம். இந்நிலையில் கண்கள் இருண்டு யாராவது தண்ணீர் தர மாட்டார்களா என்ற நிலை… பள்ளி விட்டு நேராகச் சென்றிருந்ததால் எனது உணவுப்பையில் இருந்த தண்ணீர் பொத்தல் கூட நினைவுக்கு வாராத அளவு மனம் இருந்தது..கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.. வங்கியில் தேவையான அளவு பணமிருந்தும் இப்படி எடுக்க முடியாத நிலை.. நாய் கையில் கிடைத்த தெங்கம்பழம் போல..
ஏனோ ஏ டி எம் வரிசையில் நின்று மக்கள் இறந்த செய்திகள் எல்லாம் நினைவுக்கு வந்தன… கடைசியாக ஒருவரிடம் கொஞ்சம் நீங்க என் அட்டையை முயற்சி செய்து பாருங்களேன் என்றேன்.. இல்லையெனில் வீடு செல்வோம் இரவு ஒரு மணிக்கு மேல் வரலாம். என்பது முடிவு..
கிட்டத்தட்ட 4:30 மணிக்கு வந்து நின்று 7:45 ஆகியிருந்தது பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.. யாராவது தேநீராவது விற்றுக்கொண்டு வரமாட்டார்களா எனப் பார்த்தேன்.. கண் தெரியவே இல்லை மயக்கநிலையில் எல்லாம் இருண்டிருந்தது.. நான் இறந்து கொண்டிருக்கிறேனோ என நினைத்தேன்..
நல்ல வேளையாக வாங்க ! வாங்க ! பின் நம்பர் அடிங்க எனக் கூச்சல் கேட்டது.. சரியாக விசைப்பொத்தானை அழுத்தும் போது எனது எண் மறந்து போனது..ஒரு நிமிடம் நிதானித்து எண்ணை அடித்து 2000 அழுத்தி ஒருவழியாக ஒரே ஒரு நோட்டு கிடைத்தது..
வெளியே வந்தேன்; சிறிது நேரம் உட்கார்ந்து நன்றாக மூச்சை இழுத்துவிட்டு தண்ணீர் குடித்தேன்.. இன்று எல்லா நாளிதழ்களிலும் எனது படத்தைப் போட்டு ஏ,டி எம் மில் மற்றுமொரு மரணம் என்ற செய்தியை நீங்கள் பார்ப்பதிலிருந்து தப்பினேன்… வயதானவர்கள், பிணியாளர்கள் இவர்களின் நிலை?
பார்வதி ஸ்ரீ, ஆசிரியர்; தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்  thetimestamil.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக