சனி, 17 டிசம்பர், 2016

ஸ்டாலின் கண்டனம் .. வைகோ மீது அரசியல் நாகரீகம் இன்றி நடந்து கொண்ட தொண்டர்கள் மீது

கருணாநிதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்த வைகோ மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு வந்த போது திமுக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோ வாகனம் மீது கல் வீசியும், செருப்பை வீசியும் திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமலேயே வைகோ திரும்பி சென்றார்.
திமுகவினரின் இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்தாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல. கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். .முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக