வெள்ளி, 2 டிசம்பர், 2016

கலைஞர் நன்றாக இருக்கும்போதே செயல்தலைவர் அறிவிப்பு தேவையா? கோபாலபுரத்தில் கொந்தளிப்பு.

மருத்துவமனை  நிமிடங்கள்!  - கோபாலபுரத்தில் கொந்தளித்த அழகிரி அப்போலோ மருத்துவமனையைப் போலவே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. ' நோய்த் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் கலைஞர். இன்னும் ஒருவாரம் அவர் சிகிச்சையில் இருப்பார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 25-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைமைக் கழகம், ' வழக்கமாக அவர் உட்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவரைக் காண வருவதைத் தவிர்த்து, பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல் முழுவதும் மீசெல்ஸ் எனப்படும் சிறு கொப்புளங்கள் பரவிவிட்டதால், மிகுந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடலில் ஆட்டோ இம்யூன்(நோய் எதிர்ப்பு குறைபாடு) பாதிப்பும் ஏற்பட்டது.
இதையொட்டி கோபாலபுரத்திலே தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.
"கலைஞரின் உடல்நிலையை அவருடைய மருத்துவர் கோபால்தான் கவனித்து வருவார். மீசெல்ஸ் நோய்க்கான சிகிச்சைக்கு, சிறப்பு தோல் மருத்துவர் இயேசுதாசன் வரவழைக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக படுக்கையில் படுத்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், முதுகுப் பகுதியில் புண் ஏற்பட்டுவிட்டது. மீசெல்ஸ் எனப்படும் கொப்புளங்களால் ஏற்படும் வலி ஒருபுறம் இருந்தாலும், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட புண்களால் இரவு நேரத்தில் அவரால் உறங்க முடியவில்லை. வலியால் சிரமப்பட்டு வந்தார். இதை சரிசெய்வதற்காக அவருடைய படுக்கையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இருப்பினும், நேற்று இரவு அவரால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நள்ளிரவு 2 மணியில் இருந்தே உறக்கமில்லாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்.
ஒருகட்டத்தில், 'புண் ஆறும்வரையில் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பதே நல்லது' என மருத்துவர்கள்  கூறினார். இதன்பின்னர் எந்த யோசனையும் இல்லாமல், காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கலைஞர். அவருடன் பொருளாளர் ஸ்டாலின், துர்கா, செல்வி ஆகியோர் உடன் சென்றனர்" என வேதனையோடு விளக்கினார் அறிவாலய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், " நேற்று மாலை இட்லி சாப்பிட்டுவிட்டு, இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார் கலைஞர். அவரைப் பார்ப்பதற்காக கோபாலபுரத்துக்கு வந்தார் மு.க.அழகிரி. ' கட்சிப் பதவி குறித்து வெளியில் பேசப்படும் சில விஷயங்கள் குறித்து மிகுந்த கோபத்தில் இருந்தார் அழகிரி. ஒருகட்டத்தில், குடும்ப உறவினர்களிடம், ' தலைவர் உடல்நிலை குணமாகி வரும் வரையில் எதைப் பற்றியும் யாரும் பேச வேண்டாம். அவர் நல்லநிலையில் இருக்கும்போதே ஏன் இவ்வாறு செய்தி பரவுகிறது?' எனக் கோபப்பட்டார். அவருடைய கருத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உடன்பட்டனர்" என விவரித்தார்.
" கலைஞருக்கு உடல்நலமில்லாமல் போனதில் இருந்தே, கட்சித் தலைவர் பதவி குறித்து சில விவாதங்கள் நடந்து வந்தன. குறிப்பாக, செயல் தலைவர் பதவியை முன்னிறுத்தியும் சில விஷயங்கள் பேசப்பட்டன. இதனை அழகிரி ஏற்காமல், 'தலைவருக்குப் பிறகான நிலைமையை, பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். ராஜாத்தி அம்மாளும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
உடல்நிலை பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், 'குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்பதைத்தான் தலைவர் விரும்புகிறார். 'நான் நன்றாக இருக்கிறேன்' என்பதைக் காட்டுவதற்காக, மத்திய அரசின் ரூபாய் நோட்டு பிரச்னைக்கு எதிராக தி.மு.க நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவும் தயாராக இருந்தார். ஆனால், அவர் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காததால், பேராசிரியர் அன்பழகனுடன் இருக்கும் படத்தை வெளியிட வைத்தார். அவரை வாட்டும் மீசெல்ஸ் பிரச்னை, அவரது அக்கா சண்முக சுந்தரத்தம்மாளுக்கும் இருந்துள்ளது. உடல்நிலையைவிடவும், குடும்ப உறுப்பினர்களின் அடுத்தடுத்த நெருக்கடிகளும் அவருக்கு சிரமத்தைக் கொடுத்து வந்தது. சிகிச்சை முடிந்து வந்த பிறகு, கட்சி தொடர்பான சில அறிவிப்புகளை அவர் வெளியிடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.  விகடன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக