ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சசிகலா தன் கணவர் நடராஜனை முதல்வராக்க முயற்சி எடுத்தார்.. ஆனால் .

jayalalitha-rare-photo-pics20 savukkuonline.com : ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன.  இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா பொருத்தமானவரா என்றால் பொருத்தமானவரே.     ஆண்களின் உலகமான சினிமா மற்றும் அரசியலில், அனைத்து தரப்பினரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறி, வென்று காட்டியவர். பராசக்தி திரைப்படத்தின் வசனத்தைப் போல “நெருப்பாற்றில் நீந்தியவர்” என்றால் அது மிகையில்லை ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது தொடர்ந்த எதிர்ப்புகளாலேயே நடைபெற்றுள்ளது.  தொடக்க காலத்தில், எம்ஜிஆர் ப்ரூகளின் மருத்துவமனையிலிருந்த போது ஆர்.எம். வீரப்பன் கோஷ்டியால் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார்.  பின்னாளில் அவர் அரசியலை விட்டே ஒதுங்கலாம் என்று நினைத்தபோது, எம்.நடராஜன் வீட்டில் நடந்த ஒரு சோதனையில் அவரது சட்டப்பேரவை ராஜினாமா கடிதத்தை திமுக கைப்பற்றி சபாநாயகரிடம் அளித்தது.    அப்போது புதிய வேகத்தோடு அரசியலில் இறங்கினார் ஜெயலலிதா.  ஒரு வேளை திமுக அந்த கடிதத்தை பொது வெளியில் வெளியிடாமல் இருந்திருந்தால், ஜெயலலிதா அரசியலை விட்டே ஒதுங்கியிருப்பாரோ என்னவோ.
  அதே போல 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், ஜெயலலிதா அரசியலை விட்டு விலகி அவுட்லுக் போன்ற ஒரு ஆங்கில வார இதழை தொடங்க ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார்.     அந்த சமயத்தில்தான், திமுக அரசு அவரை கைது செய்து 27 நாட்கள் சிறையில் அடைத்தது.
என்னை 27 நாட்கள் சிறையில் அடைத்த இந்த கருணாநிதியை சும்மா விட மாட்டேன் என்று சூளுரைத்தவர், எடுத்த பல்வேறு தந்திரோபாயமான நடவடிக்கைகளால் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் எழுந்தேன் என்பதை உலகிற்கு பறைசாற்றினார்.   தன்னை கருணாநிதி சிறையில் அடைத்தார் என்பதை சற்றும் மறவாமல், 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார்.    அது பெரிய பூகம்பத்தை கிளப்பி ஆட்சியே ஆட்டம் காணும் வகையில் மாறியதும், அதன் மீதான மேல் நடவடிக்கைகளை கை விட்டார்.
இது போல நெருக்கடியான சமயங்களில் எல்லாம் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்து பல்வேறு சோதனைகளை நேரடியாக எதிர் கொண்டுள்ளார். அவரது துணிச்சலே அவருக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தது. அரசியலில் முதிர்ச்சி பெற்ற கருணாநிதி கூட எந்தத் தேர்தலையும் தனியாக சந்திக்க திராணியற்ற ஒரு நிலையில், பாராளுமன்றத் தேர்தல், மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தனித்துப் போட்டி என்று முடிவெடுத்து, அதில் பிரம்மாண்டமான வெற்றியைக் கண்டதற்கு காரணம், அவரது துணிச்சல் மற்றும், தமிழக மக்கள் குறித்த புரிதல்.
எம்.ஜி.ஆர் என்ற ஆசான் என்று அவர் வெளிப்படையாக பேசி வந்தாலும், எம்ஜிஆரால் அவருடைய வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களையே அனுபவித்து வந்திருக்கிறார் என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரியும்.    திரைப்படத் துறையில் உள்ள ஆண்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மீதான கோபமே அவரை எல்லா ஆண்களையும் காலில் விழ வைத்து ரசிக்க வைத்தது.   மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஜெயலலிதா எம்ஜிஆர் காலத்தில் எப்படி நடத்தப்பட்டார் என்பது தெரியும்.    இது போன்ற பல்வேறு சம்பவங்களால் இந்த சமூகத்தின் மீது இருந்த கோபமே, அவரை ஊரே வேடிக்கை பார்க்கும் வகையில் வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்த வைத்தது. ஒரு வகையில் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அவரின் வாழ்க்கை அனுபவங்களே தீர்மானித்தன எனலாம்.
jaya_20
இவை ஒரு புறம் இருந்தாலும், அவரின் மறுபக்கமானது மோசமாகவே இருந்தது.    ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் முதல், பாடகர் கோவன் கைது வரை, ஒரு மிக மோசமான சர்வாதிகாரியாகவே ஜெயலலிதா இருந்து வந்தார்.  ஜனநாயக மரபுகளையும், விதிகளையும் காற்றில் தூக்கிப் போடும் ஒரு நிர்வாகியாகவே இருந்து வந்தார்.   தற்போது ஜெயலலிதா இறந்து விட்டார் என்றதும், இந்த சம்பவங்கள் மறந்துபோய் அவர் புனிதராகி விட முடியாது.     ஜெயலலிதா மோசமான நிர்வாகியாக நடந்து கொண்டதற்கு பல்வேறு காரணங்களை தொடர்ந்து பட்டியலிட முடியும்.  ஏற்கனவே பகிரப்பட்டும் உள்ளது.
தற்போது உடல் நலக் குறைவால் மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலும், அவர் மறைந்ததாக அறிவிக்கப்பட்ட காலம் இரண்டுக்கும் இடையே நடைபெற்றுள்ள மர்ம முடிச்சுகள் என்றுமே அவிழ்க்கப்படாமல் போகலாம்.  ஆனால் அவர் இறந்தது அறிவிக்கப்பட்ட விதம், ஜெயலலிதாவை சுற்றி இருந்தது ஒரு கொள்ளைக் கூட்ட கும்பல் மட்டுமே என்பதை உணர்த்தியது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டாக்டர் சுப்ரமணிய சுவாமியால் “மன்னார்குடி மாபியா” என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட சசிகலா கும்பலால், ஜெயலலிதா பெற்றதை விட இழந்ததே அதிகம். 1996ம் ஆண்டு படுதோல்வி அடைந்ததற்கு சசிகலாவே காரணம் என்று வெளிப்படையாக அறிவித்து, சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா.  ஆனால் ஒரு சில மாதங்களிலேயே வீடு திரும்பிய சசிகலாவை, வாசலில் நின்று இனிப்பு வழங்கி வரவேற்றார்.   சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் பேராசை காரணமாக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.  ஆனால் இவற்றையெல்லாம் ஜெயலலிதா பொருட்படுத்தியதாக தெரியவில்லை.  மக்களின் கருத்து பற்றி எவ்விதமான கவலையும் இன்றியே ஜெயலலிதா இருந்தார்.
2011ல் ஆட்சியை பிடித்ததும் மீண்டும் ஒரு முறை சசிகலா வெளியேற்றப்பட்டார்.   இம்முறை சசிகலா மட்டுமல்லாமல், அவரின் உறவினர்கள் பலரும் வெளியேற்றப்பட்டார்கள்.    ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களான ஜெயா டிவி, மிடாஸ் டிஸ்டில்லரீஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், சசிகலாவின் நம்பிக்கையை அப்போது பெற்றிருந்த சோ ராமசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்தார் ஜெயலலிதா.  சசிகலாவின் வெளியேற்றம் குறித்து பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, “இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, “நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்’ என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
capture
ஜெயலலிதா சசிகலாவை இவ்வாறு வெளியேற்றியதை அடுத்து, ஊடகங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டன.  ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை இனி ஜெயலலிதா சேர்த்துக் கொள்ளவே மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.  ஆனால் மார்ச் மாதமே மீண்டும் சசிகலா போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இம்முறை ஊடகங்களில் வெளியான சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தில்,  சசிகலா இவ்வாறு கூறியிருந்தார்.
கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டில் முதன்முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். 
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு – பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.
போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.
the-complete-st127621
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். 
என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்,” என்று சசிகலா கூறியுள்ளார்.
அக்காவுக்கு துரோகம் செய்தவர்களுடன் எனக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை அறிவித்திருந்த அதே சசிகலா, தற்போது தனது பரிவாரங்கள் புடைசூழ ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்துள்ளார்.    ஜெயலலிதா தனது வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்த நபர், சசிகலாவின் கணவர் நடராஜன்.   2011ல் சசிகலா மற்றும் சிலர் வெளியேற்றப்பட்ட போது, நடராஜன் மீது நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளியவர்தான் ஜெயலலிதா.    சசிகலாவின் தம்பி திவாகரனை தொண்ணூறுகளிலேயே வீட்டை விட்டு வெளியேற்றினார் சசிகலா.   அது மட்டுமல்லாமல் ஜனவரி முதல் மார்ச் 2012 வரை, திவாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள்  போடப்பட்டன.   ஒவ்வொரு வழக்கிலும் திவாகரன் ஜாமீன் பெற்று வெளியே வரும் நேரத்தில் அடுத்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இப்படியொரு கடும் கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா திவாகரன் மீது. மற்ற மன்னார்குடி உறுப்பினர்களையும், ஜெயலலிதா 2012 முதல் அருகே சேர்த்ததே கிடையாது.
கைது செய்யப்படுகையில் நடராஜன்
கைது செய்யப்படுகையில் நடராஜன்
தன் கணவரையும், உறவினர்களையும், சிறையில் போட்டது பற்றிக் கூட கவலைப்படாமல் எனக்கு எல்லாமே ஜெயலலிதாதான் எந்று இருந்த சசிகலா, ஒரு வகையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவரை பழிவாங்கும் வகையில் அவர் உடல் அருகே அனைத்து உறவினர்களையும் நிற்க வைத்தாரோ என்று தோன்றியது.
ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றிருந்த திவாகரன், பிரதமர் மோடி வந்தபோது அவருடன் உரையாடும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளார்.  ஜெயலலிதா யாரையெல்லாம் வேண்டாம் என்று அறுவெறுத்து ஒதுக்கினாரோ, அவர்கள்தான் இன்று அதிகார மையத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்பது ஒரு பெரும் முரண்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.    வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று செப்டம்பர் 22ல் தொடங்கிய சிகிச்சை ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களை அடைந்து இறுதியில் மாரடைப்பில் வந்து நின்றது.    ஒரு மாநிலத்தின் முதல்வர் குறித்த சிகிச்சை விபரங்களை 75 நாட்களாக, கொஞ்சமும் கூச்சப்படாமல் அப்போல்லோ  மற்றும் அரசு நிர்வாகங்கள் மறைத்து வந்தன.  கூசாமல் பொய்யுரைத்தன.   தமிழக ஊடகங்கள்,  அவருக்கு என்னதான் நோய் என்பதை புலனாய்வு செய்து கூட எழுதத் தெரியாமல், அப்போல்லோ அறிக்கையை அப்படியே வெளியிட்டு வந்தன.    ஒரு கட்டத்தில் அப்போல்லோ நிர்வாகம், விஷயம் கை மீறிப் போகிறது என்பதை அறிந்துதான் அதன் நிறுவனர் ரெட்டி, வெளிப்படையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சொன்னார்.
cy_cs1uuqaavejc
ஒரு கட்டத்தில் இனிமேல் பொய் சொல்ல முடியாது என்ற நிலை உருவாகியது.     ஜெயலலிதா உடல் நிலை மிகவும் மோசமானதும், அப்போல்லோ நிறுவனர்களில் ஒருவரான ப்ரீத்தா ரெட்டி தனியாக ட்வீட் மூலம் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்.   ஜெயலலிதா ஞாயிறு அன்று இரவே இறந்து விட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதையடுத்தே மிகவும் பரபரப்பானது அப்போல்லோ.
இறந்த ஒரு முதல்வர் குறித்து அறிவிப்பு வெளியிடுவதை விட, ஆட்சி அதிகாரத்தை கையில் வைக்கவே சசிகலா முனைப்பபாக செயல்பட்டுள்ளார். அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, தன் கணவர்  நடராஜனை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்.    இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காகவே வெங்கைய்யா நாயுடு அவசரமாக சென்னை வந்தார். நடராஜனையெல்லாம் முதல்வராக்க முடியாது என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்த பின்னர், வேறு வழியின்றி பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதற்கு சசிகலா சம்மதித்தார்.
ஒரு பிணத்தை மருத்துவமனையில் வைத்துக் கொண்டு, இரவு 1.30 மணிக்கு அனைத்து அமைச்சர்களுக்கும் நன்ளிரவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அடிப்படையில்தான்.   உடன் பிறவா சகோதரி என்று உருகும் சசிகலாதான் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் சூத்ரதாரி.
21jaya3
இது தவிர போயஸ் தோட்ட வீடு உள்ளிட்ட சொத்துகளை அபகரிக்கவும் சசி கும்பல் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எப்போதோ மன்னார்குடி வலையில் கொண்டு வரப்பட்டு விட்டார்.   ஏதோ ஒரு காரணத்தினால், இவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறார்.  ஆனால் அண்ணன் மகள் தீபாவோ, இவர்கள் வார்த்தைக்கு நடனமாடுவதில்லை.  அதனால்தான் அவரை அப்போல்லோ மருத்துவமனை அருகிலோ, உடலடக்கம் செய்யப்பட்ட இடத்திலோ அனுமதி மறுத்தது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று, ஜெயாவின் அண்ணன் மகள் தீபா அவ்விடத்துக்கு சென்றபோது, சென்னை மாநகர இணை ஆணையர் மனோகரன் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டு, யாரோ ஒரு உயர் அதிகாரிகக்கு போனில் பேசியுள்ளார்.   அங்கிருந்து உத்தரவு வந்ததையொட்டி, தீபாவையும் அவர் கணவரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.    தீபாவை மன்னார்குடி கும்பல் அருகிலேயே சேர்க்காமல் இருந்ததற்கான காரணமே, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கு அவர் வரவில்லை என்பதுதான்.  மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், கடந்த ஒரு வாரமாகவே எம்.நடராஜனின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஞ்சலி செலுத்தும் தீபா
அஞ்சலி செலுத்தும் தீபா
தற்போது சசிகலாவின் முன் உள்ள சிக்கல், கட்சியை எப்படி கைப்பற்றுவது என்பதே.   கட்சியை கைப்பற்றினால்தான், மீண்டும் அதிகாரம் செலுத்த முடியும்.  இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை பாதுகாக்க முடியும்.  போயஸ் தோட்ட வீட்டை கைப்பற்ற முடியும்.
அதிகாரம் கையை விட்டு போகக்கூடாது என்பதற்காகவே, அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து 75 நாட்களாக சசிகலா அனைத்து அதிகாரங்களையும் செலுத்திக் கொண்டிருந்தார்.    சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், உளவுத்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சசிகலாவின் தயவினால்தான் பதவிக்கு வந்துள்ளனர்.    ஆகையால் அவர்களின் விசுவாசம் எந்த இடத்தில் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதே போல தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று சசிகலா விரும்புகிறார்.    08.12.2016 அன்று கூட, உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவிடம் உத்தரவு பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    இந்த முயற்சிகளில் சசிகலா வெற்றி பெறுவாரா என்பது ஒரு புறம் இருக்க, பாஜக தமிழகத்தை கொல்லைப்புறம் வழியாக கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உடைத்து சின்னாபின்னப்படுத்தி, குறுக்கு வழியில் ஏதாவது செய்து மாநிலத்தில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.    மேலும், அதிமுகவில் இருக்கும் 50 எம்.பிக்களும், 136 எம்எல்ஏக்களும், வரக்கூடிய குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிப்பர். அப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு மற்றும் அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே மோடி விரும்புவார்.  ஆகையால் தற்போதைக்கு சசிகலா மோடியுடன் சமாதானமாக செல்வதையே விரும்புவார்.    ஆட்சியை கட்டுப்படுத்துவதில் மோடி வெல்வாரா அல்லது சசிகலா வெல்வாரா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
வரக்கூடிய நாட்கள் செய்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக