வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஆணாதிக்க சமுகத்தில் ஜெயாவின் காலில் ஆண்கள் விழுவதை பெண்கள் ரசித்திருக்கிறார்கள். எதிரி வீட்டு பெண்களும் கூடவே ..

ஜெயலலிதாவைப் பற்றி பாராட்டுகளாகவும் விமர்சனங்களாகவும் ஆயிரம் எழுதலாம். ஒரு விஷயத்தில் மட்டும் தமிழகமே உடன்படுகிறது என்பதை என் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் முதல் நூற்றுக்கணக்கான முகநூல் குறிப்புகள் வரை பார்க்கிறேன்.
தமிழ்நாட்டுப் பெண்களின் சார்பாக – மூன்றரை கோடி பெண்களின் சார்பாக – எல்லா ஆண்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை அவர் நடத்திக்காட்டியிருக்கிறார். அவரது யுத்தம் உளவியல் ரீதியில் தமிழகப் பெண்களை ஆட்கொண்டிருக்கிறது.
அவரது வேறு எந்த சாதனை, வேதனைகளைவிட இந்த ஒன்று தமிழகப் பெண்களின் மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது.
இத்தனைக்கும் ஜெவின் பல செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்.
ஆனால், டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வந்து தன்னை தன் கண்வன் அடிக்கும்போது ஊத்திக்குடுத்த ஆத்தா என்று வசைபாடுகிற பெண்கள், ஏன் ஜெவை தங்களது பிரதிநிதியாகத்தான் பார்க்கிறார்கள்? அவரது சர்வாதிகார நடவடிக்கையால் தங்கள் அரசு ஊழியர் பதவியை தற்காலிகமாக இழந்தபோது அவரை கரித்துக்கொட்டிய பெண் அரசு ஊழியர்கள், இப்போது ஜெவை போல வருமா என்கிறார்கள். கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் முழுக்க பெண்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை யாரேனும் ஆய்வு செய்துபாருங்கள்.
தமிழ் சமூகத்தில் பெண்களின் மீது தாக்கம் செலுத்தியதில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற இரு ஆளுமைகளும் இருவேறுவிதமாக தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எம்ஜிஆர் பெண்களை ஆட்கொண்டார். ஜெயலலிதா அதே பெண்களை விடுவித்தார்.
அதிமுகவின் பலமே, ஜெயலலிதாவின் வெற்றி ரகசியமே தமிழகப் பெண்கள் மீது அவர் கொண்டிருந்த தாக்கம்தான்.
ஆழமாக பார்த்தால் ஜெவின் பாசிசத்தை, சர்வாதிகாரத்தை அவர்கள் ரசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் அவரது காலில் விழும்போது அதை ரசித்திருக்கிறார்கள். அவர் தனது ஆண் எதிரிகளை தோற்கடித்தபோது அதை ரசித்திருக்கிறார்கள்.
ஜெவின் ஆளுமையைப் பற்றியும் தாக்கங்களையும் பற்றியும் பெண்ணியப் பார்வைகளில் ஆய்வுகள் செய்யப்படவேண்டும். இவ்வளவு பழம்போக்குச் சமூகம் ஜெ.-சசி உறவை ஏற்றுக்கொண்டதையும்கூட அப்போதுதான் நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.
ஆழி செந்தில்நாதன், ஊடகவியாளர்; பதிப்பாளர். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக