புதன், 28 டிசம்பர், 2016

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சசிகலா புஷ்பா கணவர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., பொதுச்செயாலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் பொதுக்குழு, சென்னை, வானரகத்தில் வியாழக்கிழமை நடக்க உள்ளது. இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சொல்லி தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், சசிகலாவுக்கு கட்சியின் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக்கோரி, அதிமுக மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட உள்ளார் எனவும், இதற்காக, விண்ணப்பம் வாங்க, அவர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளார் என தகவல் பரவியது. இதையடுத்து, இணை ஆணையர் மனோகரன் தலைமையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


கட்சி தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்து இருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி சசிகலா புஷ்பா வரவில்லை. அவர் சார்பில், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் வந்து இருந்தனர். இதனால், கட்சி அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினர் தாக்கியதில் சசிகலா புஷ்பா கணவர் படுகாயம் அடைந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவரை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவரை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அதிமுக பொதுக்குழு நாளை நடக்க இருக்கும் நிலையில் இன்று மோதல் ஏற்பட்டதால், அதிமுக தலைமை அலுவலத்தில் பதட்டம் காணப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.  nakkeeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக