வியாழன், 29 டிசம்பர், 2016

பார்ப்பனியத்தை பதற வைக்கும்... பெரியார் இன்றும் என்றும் .... இந்து இந்திய அச்சும் மதமும்

தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.”
பெரியார் அன்றும் இன்றும்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் விடியல் பதிப்பகம் இரண்டு நூல்களை வெளியீட்டிருக்கிறது. கவனத்துக்குள்ளாக்கும் இந்த நூல்களின் கருத்து மற்றும் கண்ணோட்டங்களால் இந்துத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர்களின் சிந்தனைக்கு மலர்ச்சியும், இந்துத்துவ வெறியர்களுக்கு எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.1. பெரியார் : இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) சமுதாயம், மதம், சாதி, பண்பாடு, தேசியம்… என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுதும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக தேர்ந்தேடுக்கபட்ட இத்தலைப்புகள் காலம், இடம், விவரங்களுடன், அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

சமுதாயம் என்ற தலைப்பில் 1926- இல் சென்னிமலையில், கண்ணை மூடி சாமி கும்பிடுபர்களை கண்ணை திறந்து பார்க்க வைக்கிறார் பெரியார்.
” காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்கு கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சாமியைத் தொட்டுத் தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சீரங்கம், சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர் முதலிய முக்கிய ஷேத்திரங்களிலுள்ள சாமிகள் – நாடார்கள் கோவிலுக்குப் போய்க் கும்பிட்டால் – அக் கோவில்களும் சாமிகளும் சாவதில்லை. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள சாமிகள் மாத்திரம் நாடார்கள் கும்பிட்டால் செத்து விடுகின்றன. இப்படி, சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்? பிறகு, பார்ப்பனர்க்கு மாத்திரம் அந்தச் சாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்? “
இந்தச் கருத்தை வெறும் கடவுள் மறுப்பு என்று மட்டும் பார்த்து விட முடியுமா? சாமி யோக்கியதை மூலமாக சாதி யேக்கியதையை கவனத்துக்குள்ளாக்கும் இந்தக் கருத்து இன்றும் தேவைப்படுகிறது.
“பார்ப்பனர் தோழர்களுக்கு” என்னும் தலைப்போ, ” பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.”
– என்பதன் மூலம் வெறுப்பு அரசியலின் விளைநிலம் ஆரியமே என்பது அம்பலமாகிறது. இப்படி பல தலைப்புகளும் படிப்பவரை இன்னும் விவாதிக்க வைக்கும் உயிரோட்டமாக பெரியார் காலம் கடந்தும் நிற்கிறார். இந்தக் கூட்டத்தில் நிற்கவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவாய் என்ற ஆரிய காரிய கட்டளை ஏதும் பெரியாரிடம் இல்லை, உன் அறிவிற்கு சிந்தித்து தேவையானவற்றை எடுத்துக்! என்ற பகுத்தறிவின் அழகை உணர நூலில் பயணியுங்கள்.
( 960 பக்ககள், நல்லதாள், அட்டைக் கட்டுடன் இந்நூல் விலை : ரூ. 300.00 )
2. இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும் – அக்-ஷய முகுல், தமிழில்: அறவணன்.
ராமாயணமும், மகாபாரதமும் நம் சமுகத்தின் மீது காலம் தோறும் நிறுவும் அதிகாரத்தை புரிய வைக்கும் விதமாக ஏற்கனவே வெளிவந்த “இந்திய வரலாற்றில் பகவத்கீதை” (The Role of Bagaved Gita in Indian History – Premnath Bazaz 1975) நூலின் வரிசையில், அந்நூலின் கருதுகோள்கள் பலவற்றை வரலாற்று தரவுகளுடன் உறுதிப்படுத்தும் “இந்து இந்தியா உருவாக்கத்தில் கீதா பிரஸ்” நூலையும் கொண்டு வந்திருக்கிறது விடியல் பதிப்பகம். இந்நூலின் ஆங்கிலப் பதிப்பையும் விரைவில் வெளியீட உள்ளதாக விடியல் பதிப்பகம் அறிவித்துள்ளது. இச்சகம் புரிவதற்வதற்கே அச்சகம் நடத்தும் ஆரியப் பார்ப்பனக் கும்பலின் சிலந்தி வலைப்பின்னலை தரவுகளுவுடன் தருகிறது இந்நூல், இதை தமிழில் வழங்கியதற்காக மொழிபெயர்ப்பாளர், விடியல் பதிப்பக குழுவிற்க்கு நன்றி பாராட்டலாம்.
அச்சும் மதமும்இந்நூலின் தேவை பற்றி நாம் அறிய வேண்டியது,
” ஒரு இந்தியனின் மனக் கட்டமைப்பை உருவாக்கவல்ல வலிமையைப் பெற்றிருக்கும் புராண, இதிகாசங்களை, குறிப்பாக பகவத்கீதையை, படிப்பறிவு மறுக்கப்பட்ட , பகுத்தறிவு உருவாக்கப் படாத மக்களிடம் பலவடிவங்களில் திணித்து அவனது சிந்தனையை பாழ்படுத்தி, ‘இந்து இந்தியா’ என்னும் கட்டமைப்பை செயற்கையாக உருவாக்கியதில் கீதா பிரஸ் முதன்மையானது. இந்துத்துவ மார்வாடி கும்பலின் நோக்கம் – அவர்களுக்கான கட்டமைப்பு, அதிகார வர்க்கம், பொருளியல் சுரண்டல் ஆகியவற்றை நிறுவி பராமரிப்பது மற்றும் தொடர்ந்து விரிவுபடுத்துவது என்பதே. இக்கூற்று மிகையல்ல என்பதை கடந்த காலம் முதல் தற்கால மோடி காலம் வரை உள்ள சம்பவங்களைக் கண்காணித்தாலே போதும், உண்மை விளங்கும்.
இந்து இந்தியா முதலில் பண்பாட்டுத் தளங்களில் தான் எதிர்ப்பின்றி நிறுவப்படுகிறது. பின் பொருளியல் துறையில் பரவ ஆங்கிலேயர்களும், அவர்களின் வணிக, அரசியல் நோக்கங்களும் காரணமாகின்றன. பண்பாட்டின் ஒரு கூறான மொழியைப் பொருத்த வரை இந்தி பரவலாக்கப் படுகிறது,
கீதை பதிப்பகத்தின் நிறுவனர் போத்தார் அடிப்படையில் துணி வியாபாரி. ஆனால் அவர் இறுதி வரை இந்தியா முழுவதும் ‘இந்து இந்தியா’ என்னும் நூலை குறுக்கும் நெடுக்குமாக நெய்த பலருடன் இணைந்து செயல்பட்டு நெசவு செய்த துணியே அவரின் ஆகச் சிறந்த வணிகம். ஊடும் பாவுமாக ஓடுபவர்களில் பெரும் பாலோனோர் பார்ப்பன பனியாக்களே. பெரியாரின் தமிழ்நாட்டில் அத்துணி கிழிந்தே உள்ளது. பெரியாரின் சுயமரியாதை கருத்துகள் போத்தாரின் நூலை விடக் கடினமான நூலில் விரவியுள்ளது. RSS, BJP, VHP. என்னும் விசச் சிலந்திகள் தங்களது, வலையைப் பின்ன கடும் முயற்சி மேற்கொள்ளும். திருவள்ளுவரையும் அம்பேத்கரையும் விழுங்கும். பெரியார் மட்டுமே இப்பணியில் நமக்கான ஊசியும் நூலும்.
ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியருக்கு உரிய பணியை தனது கடுமையான உழைப்பின் மூலம் செயல்படுத்தியுள்ள ஆசிரியர் அக் ஷய முகுல் இந்தியாவின் ஊடகத்துறையினருக்கான முன் மாதிரி. அவரின் கடின உழைப்பும், அறிவும் பல நூற்றாண்டுகளுக்கு சமூகத்தை விழித்தெழவைக்கும். அவரின் ஒவ்வொரு பதிவும் காலம் பல கடந்தும் சமூகத்தின் விடுதலைக்கு பயன் தரும் அர்த்தம் உடையவை. “( நூலின் பதிப்புரையிலிருந்து)
( 720 பக்கங்கள், நூலின் விலை : ரூ.650.00 )
-துரை. சண்முகம்.
நூல் வெளியீடு:
விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.
பேச : 0422 – 2576772.
நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக