சனி, 3 டிசம்பர், 2016

குஷ்பூவின் நிஜங்கள் நிகழ்ச்சி மனதை புண்படுத்துகிறதா?

தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ‘அரச சபையை நடத்துவது போல குஷ்புவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர். தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும்’ எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, சன் டி.வியில் ‘நிஜங்கள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில், குடும்ப விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல், சினிமா இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியும் அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது.  இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீப்ரியா ‘தம்பதிகளுக்கிடையே பிரச்னை வந்தால் அதைத் தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. கிரிமினல் குற்றங்களை கையாள தனித்தனி சட்டப் பிரிவுகள் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்னைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இதை தயவு செய்து நிறுத்தலாமே? நாம் கைப்பிடி அளவு கற்று வைத்திருக்கும் கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போமே?. இது போன்ற பிரச்னைகளை தீர்த்து வைக்க நாம் நீதிபதிகள் அல்ல என்பதை உணருங்கள்’ எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
“ தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்யுமாறு மனித உரிமை ஆணையத்தில் முறையிட இருக்கிறோம். அவர்களால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்” எனக் கொந்தளிக்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், “ இதுபோன்ற நிகழ்ச்சிகள் பிரச்னைகளைத் தீர்ப்பது போலத் தெரியவில்லை. பிரச்னைகளை மேலும் மேலும் பூதாகரமாக்கும் வேலைகளையே செய்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில், யாரிடம் தவறு இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், வேதனையோடு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை மிகவும் கஷ்டப்படுத்துகின்றனர். இது நாகரிகம் கிடையாது. குடும்ப நல நீதிமன்றங்களில் எதற்கு சமசர மையங்களை வைத்திருக்கிறார்கள்? தொலைக்காட்சிகளில் நாள்தோறும் ஒளிபரப்ப, இது ஒன்றும் நாடகம் கிடையாது. ஒரு குடும்பத்தின் கண்ணியம் காக்கப்படாமல் தொடர் போல் நடத்துவது சரிதானா? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது ஆரோக்கியமான சமூகத்துக்கு வழியமைக்காது. சில படங்களில் நடித்துவிட்டால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏதோ அரச சபையை நடத்துவதுபோல் மற்றவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.
‘ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என்னைப் பொருத்தவரைக்கும்  சாதாரணமான நிகழ்ச்சி கிடையாது. இங்கே பேசப்படுகின்ற ஒவ்வொன்றும் உண்மைதான். நான் பேசுகின்ற, செய்கின்ற விஷயங்களையும் உண்மையா நேசித்து செய்கிறேன். நிகழ்ச்சியை வெளியில இருந்து பார்க்கும்போது அது குடும்ப பிரச்னை போன்று தெரியலாம். ஆனால், பல நேரங்களில் அது சமுதாயப் பிரச்னையாகத்தான் இருக்கும். பொதுவாக, கணவன், மனைவி சண்டை என்றால் ஒதுங்கிப் போவோம். அதுவே வன்முறையாக மாறினால் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம் எனச் சட்டம் சொல்கிறது’ என விளக்கம் கொடுத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
‘நிஜங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை குஷ்புவிடம் பேசினோம். “ எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார்.   ஆ.விஜனயந்த். விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக