புதன், 21 டிசம்பர், 2016

ராம்மோகன் ராவ் நாளை கைது செய்யப்படலாம் ?

அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலக அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவரும் நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டு, கைதாகலாம் என்றும் தெரிய வருகிறது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்மோகன் ராவ், 1985ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்ற இவர், பொருளாதாரம் மற்றும் கணக்கியலில் முதுகலை பட்டங்களைப் பெற்றவர். தமிழக அரசில் சமூக நலத்துறை, தொழில் துறை என பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றிய இவர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.
பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜுன் 8ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராம்மோகன் ராவ் நியமிக்கப்பட்டார்.

இவரது பதவிக்காலம், வரும் 2௦17ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் 2௦ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்துக்கு துணை இராணுவப் படையுடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ராம்மோகன் ராவின் அறையில் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் சிக்கினாலோ, ராம்மோகன் ராவ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்தாலோ அவர்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவர்மீது ஊழல் குற்றம் இருப்பது உறுதிப்படுத்தப்படுமானால், பதவிக் காலம் முடிவடைய ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில் அவரது பதவி இப்போதே பறிக்கப்பட்டு, கைதும் செய்யப்படலாம் எனத் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக