சனி, 3 டிசம்பர், 2016

கச்சத்தீவு திருவிழா - தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!

minnambalam.com கச்சத்தீவில் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதில், ‘கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் தமிழக மீனவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். வரலாறு
கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன் பிடிப்புக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவுக்கு தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டு போர் முடிவுற்ற பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 8ஆம் தேதி அன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி, ஆலயத்துக்கான கட்டட வேலைகளை அனைத்தையும் நெடுந்தீவு ஆயர் ஜெயரஞ்சன் மேற்பார்வையில் நடைபெறத் தொடங்கியது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக இடிக்க முடிவு செய்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்காமல் தமிழக மீனவர்களின் பங்களிப்பு இல்லாமல் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
டிசம்பர் 7இல் திறப்புவிழா
கச்சத்தீவில் புதிய அந்தோணியார் ஆலயம் கட்டும் பணிகள் நிறைவுற்று டிசம்பர் 7ஆம் தேதி யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் திறந்து வைக்க உள்ளதாக நெடுந்தீவு ஆயர் ஜெயரஞ்சன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் ராமேஸ்வரத்தில் கூறியதாவது,
“ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு பாத்தியப்பட்ட கச்சத்தீவை மத்திய அரசு தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்ததே தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கும், தற்போது தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது.
தற்போது கச்சதீவு அந்தோணியார் திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து மீனவர்கள் பங்கேற்று வரும் சூழலில் மே 8ஆம் தேதி அன்று நடைபெற்ற புதிய ஆலயம் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கும், டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய ஆலயத் திறப்பு விழாவுக்கும் தமிழக மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன்மூலம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தமிழக தலைவர்களின் கோரிக்கைக்கு இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இவை தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக தனது வெளியுறவுத்துறை மூலம் கச்சத்தீவில் திறக்கப்பட உள்ள புதிய அந்தோணியார் விழாவுக்கு தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழகத் தலைமைச் செயலாளர் நேற்று முன்தினம் டிசம்பர் 1ஆம் தேதி மத்திய வெளியுறவுச் செயலகத்துக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து, அனுமதி கேட்டு எழுதிய கடிதத்துக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.
அதில், ‘தற்போது நடைபெறுவது சிறிய விழா மட்டுமே. கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க யாருக்கும் அனுமதியில்லை. எனவே தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது’ என்று தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கையைச் சேர்ந்த பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கச்சத்தீவில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால் தமிழக மீனவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மத்திய அரசின் அனுமதி மறுப்பு தமிழக மீனவர்களின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நசுக்கும் செயல் என்று அகில இந்திய மீனவ நலச்சங்கத்தினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த யதேச்சதிகாரச் செயல் அடக்குமுறையை போல் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக