வியாழன், 1 டிசம்பர், 2016

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான கூட்டை உடைக்கும் கூலியாக கோபாலசாமி செயல்படுகிறார்?

‘மக்கள் நலக்கூட்டணி கலகலத்துக்கொண்டு இருக்கிறது. வைகோ மீது மற்ற மூன்று கட்சித் தலைவர்களும் கடுப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காவிரிப் பிரச்னை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில் இருந்தே வைகோவின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்போதே, அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினரோடு வைகோ முரண்பட்டார். அதன்பிறகு, இடைத் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு மாறுபட்டார். அதன்பிறகு, விஜயகாந்தை விமர்சிப்பதிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களோடு வைகோ முற்றிலும் மாறுபட்டு நின்றார். அந்த முரண்பாடுகள் எல்லாம் பூசி மெழுகியதுபோல் இருந்தன. ஆனால், இப்போது கறுப்புப் பண விவகாரத்தில், ‘என் வழி தனி வழி’ என்ற ரீதியில் வைகோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.”‘‘தி.மு.க.வுடன் திருமாவளவன் போய்விடுவார் என்று வைகோ நினைக்கிறாராம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு போய்விடுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில்
அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அமையும் என்று நினைக்கிறாராம் வைகோ. அதில் இணையவே அவர் திட்டமிட்டுச் செயல்படுகிறாராம். கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் விமர்சனங்களே இல்லாமல் அவர் மோடியை ஆதரிப்பதற்கும் அதுதான் காரணமாம். இந்த நேரத்தில் பி.ஜே.பி-க்கும் வைகோவின் தயவு இப்போது தேவைப்படுகிறது.!”
‘‘வைகோ-வின் தயவு பி.ஜே.பி-க்குத் தேவைப்படுகிறதா?”

‘‘ஆம். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தபிறகு, அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. அதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி சார்பில், தமிழகத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளிடமும் ரகசியமாகப் பேசி உள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பி.ஜே.பி கேட்டதாகச் சொல்லப்படுகிறது.   தி.மு.க   ஒப்புக்கொள்ளவில்லை. ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தங்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டை ரூபாய் நோட்டு விவகாரத்தில் தெரிவித்துவிட்டனர். ஆனால், வைகோ ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கை நல்லது என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு வைத்திருந்தார். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பி.ஜே.பி வைகோவிடம் பேச வேண்டிய விதத்தில் பேசியது. அதன்பிறகுதான், எல்லோரும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை, பொதுமக்களை கடும் சிரமத்தில் வைத்திருக்கும் ஒரு திட்டத்தை வைகோ பிரமாதம் என்ற ரீதியில் ஆதரித்து அறிக்கை கொடுப்பதும் பேட்டி அளிப்பதுமாக இருக்கிறார்.”

‘‘ம்!”

‘‘நளினி சுயசரிதைப் புத்தகம் வெளியீட்டு விழாவில், இடதுசாரிகள், அ.தி.மு.க, தி.மு.க தவிர மற்றக் கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டன. காங்கிரஸ் கட்சி சார்பில், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி சீமான், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களோடு வைகோவும் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அந்த விழாவில் வேல்முருகன் ஒரு பரபரப்பைக் கிளப்பினார்.”

‘‘என்ன பரபரப்பு?”

‘‘வேல்முருகன், ‘தமிழக நலன், தமிழர் உரிமை போன்ற பிரச்னைகளில் நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். வைகோ சீமானுடன் கைகோக்க வேண்டும். திருமாவளவன் மருத்துவர் ராமதாஸோடு  சேர வேண்டும். நானும் எங்கள் அய்யா மருத்துவர் ராமதாஸோடு சேர்ந்து செயல்படத் தயாராக உள்ளேன்’ என்றார்.”

‘‘அட, ஆச்சரியமாக இருக்கிறதே!”

‘‘ஆம். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய திருமாவளவன், ‘இன நலன்தான் முக்கியம் என்று வந்தால், நான் யாரோடும் கைகோப்பேன். அதற்கு இந்தத் திருமாவளவன் என்றும் தயங்கியதில்லை. அதனால்தான், பலரும் எதிர்த்தபோதும்கூட சில கட்டங்களில் நான் மருத்துவர் ராமதாஸோடு சேர்ந்து செயல்பட்டேன். இனி அப்படி ஒரு தேவை ஏற்பட்டாலும், மருத்துவர் ராமதாஸோடு நான் சேர்ந்து செயல்படத் தயங்கமாட்டேன்.  மருத்துவர் ராமதாஸ் மட்டுமல்ல, இனநலனுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து செயல்படத் தயாராகவே இருக்கிறேன்’ என்றார். சீமானும் இதே கருத்தைத்தான் வலியுறுத்திப் பேசினார். ஆனால், வைகோ மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்டுப் பேசி இருக்கிறார்”

‘‘வைகோ என்ன சொன்னார்?”

‘‘வைகோ பேசியபோது, ‘தமிழனுக்கு வீரம் அதிகம்; கோபமும் அதிகம்; அதுபோல ஈகோவும் அதிகம். அதனால், தமிழர்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து செயல்படமாட்டார்கள். சேரர்-சோழர்-பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே இதுதான் தொன்றுதொட்டு வரும் பழக்கம். அதனால், இப்போதும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை’ என்றார். இங்கு இப்படிப் பேசிய பிறகுதான், ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய பி.ஜே.பி அரசையும், பிரதமர் மோடியையும் வானளாவப் புகழ்ந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது மக்கள் நலக்கூட்டணியின் நான்கு கட்சிகளும் தனித்தனிப் பாதைக்கு போவது தெளிவாகத் தெரிகிறது” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை எதிர்க்கும் அகில இந்திய கட்சிகள் டெல்லியில்  ஆர்ப்பாட்டம் நடத்தின அல்லவா? அதில் அ.தி.மு.க சார்பில், எம்.பி. நவநீத கிருஷ்ணன் கலந்துகொண்டதை கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இந்தக் காட்சிகளை பி.ஜே.பி மேலிடம் ரசிக்கவில்லையாம். அ.தி.மு.க தரப்பிடம் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர்,  ‘நீங்கள் எங்களுக்கு எதிராக அரசியல் நடத்துகிறீர்களா? நிலைமைகள் புரியாமல் விளையாடுகிறீர்களா?’ என்றாராம். ஆட்டம் கண்டுவிட்டதாம் அ.தி.மு.க தரப்பு” என்றபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன்,  மீ.நிவேதன்  விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக