வெள்ளி, 2 டிசம்பர், 2016

மே.வங்காளத்தில் இராணுவத்தினர் குவிப்பு .. மம்தா கடும்கோபம்,, Army at Toll Plazas, Has Emergency Been Imposed, Asks Mamata


கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 2 சுங்கச்சாவடி மற்றும் தலைமை செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும் வரை தலைமை செயலகத்தைவிட்டு வெளியேற மாட்டேன் என்று ேமற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மத்திய அரசு கடந்த 8ம் தேதி திடீரென 500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்பக் பெறக்கோரி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன் என்று சவால்விடுத்தார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள், நேற்று இரவு டெல்லியில் இருந்து மம்தா வந்த விமானம் உடனடியாக தரையிறங்காமல் வானத்திலேயே வட்டமடித்தது. இது தன்னை கொல்ல சதி நடப்பதாக மம்தா கூறியதால்  இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பே முடியாத நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேற்குவங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை 22ல் உள்ள டங்குனி மற்றும் பால்ஷிட் சுங்கச்சாவடிகளில் நேற்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.


அவர்கள் அந்தப் பகுதி வழியாக சென்ற வாகனங்களை தீவிர ஆய்வு செய்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மேற்குவங்க மாநில தலைமை செயலகத்தில் இருந்த மம்தா பானர்ஜி ஆவேசப்பட்டார். இது குறித்து அவர் கூறியதாவது, மேற்குவங்கத்தில் ராணுவ குவிப்பு என்பது நெருக்கடி நிலையை விட ேமாசமானது. ராணுவம் பயிற்சிக்காக மாநிலத்துக்குள் வந்துள்ளது என்றால், அதற்கு முறைப்படி மாநில அரசிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதியான மேற்குவங்க தலைமை செயலகம் நபான்னோ அருகில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேற்கு வங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாநிலத்தில் இருந்து ராணுவம் வெளியேறும் வரை, நான் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன். அதுவரை ஜனநாயகத்தை பாதுகாக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாக கவனிப்பேன். இது குறித்து ஜனாதிபதிக்கு, தலைமை செயலாளர் கடிதம் எழுதுவார். மேலும் இந்த விவகாரத்தில் கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். உண்மை என்ன என்பதை தயவு செய்து மக்களிடம் கூற வேண்டும் என்றார்.

ஆனால், இது குறித்து கிழக்கு பிராந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர், மேற்குவங்க மாநில சுங்கச்சாவடியில் ராணுவத்தினர் வாகனங்களை சோதனை செய்கின்றனர். மற்றொரு சாவடியில் ஏற்கனவே அந்த வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்கள். இது வழக்கமாக நடந்து வரும் நடவடிக்கைதான். இது ராணுவ குவிப்பு அல்ல என்றார். தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக