ஞாயிறு, 11 டிசம்பர், 2016

2011-ம் ப்ளாஷ் பேக் ஜெயலலிதா :‘என்னைக் கொல்ல சதி நடக்கிறது. சொத்துக்களையும் ஆட்சியையும் கைப்பற்றவும் என்னைச் சூழ்ந்திருப்பவர்களே சதி செய்கிறார்கள்

அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று  அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளியே கொண்டுவந்தது வரையில், எல்லாமும் மர்மமாகவே இருந்தன. முதல்நாள் காலையில், மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பங்கேற்ற முதல்வர், அன்று மாலையில் உடல் நலமில்லை என்று அட்மிட் செய்யப் படுகிறார்.
அப்போது, அம்மா எந்த நிலைமையில் இருந்தார்? அங்கே அவருக்கு என்னவிதமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன? மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு 6 மாதங்களுக்கு முன்புவரை வீட்டில் அம்மாவுக்கு எந்த மாதிரியான உணவு வகைகள் கொடுக்கப்பட்டன? அவருக்குத் தெரியாமலேயே ஸ்டீராய்டு மருந்துகள் இன்ஜெக்ட் செய்யப்பட்டனவா? என்பது போன்ற சந்தேகங்கள் என்னைப்போல் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனுக்கும் இருக்கிறது.

2011-ம் வருடம், ‘என்னைக் கொல்ல சதி நடக்கிறது. சொத்துக்களை அபகரிக்கவும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும் என்னைச் சூழ்ந்திருப்பவர்களே சதி செய்கிறார்கள்’ என சொல்லித்தான் சசிகலா நடராஜன் கும்பலை போயஸ் கார்டனை விட்டே அம்மா விரட்டியடித்தார். ஆனால், ஐந்து வருடங்கள் கழித்து இப்போது அரங்கேறிவரும் நிகழ்வுகள் அம்மாவின் அன்றைய சந்தேகத்தைத்தான் ஊர்ஜிதப்படுத்துகின்றன.’’

‘‘ஆளுநர் கண்காணிப்பை மீறி எந்த மாதிரியான சதிச் செயல்களை செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?’’
‘‘ஆளுநரே அப்போலோவின் இரண்டாவது தளம் வரை மட்டும்தானே போனார். சிகிச்சையில் இருந்ததாகச் சொல்லப்படும் அம்மாவை நேரடியாகப் பார்த்தாரா? மருத்துவர்களைப் பார்த்ததாகத்தானே செய்திகள் வந்தன. ‘அம்மா பேசுகிறார், பேப்பர் படிக்கிறார், சாப்பிடுகிறார்’ என்றெல்லாம் இவர்கள் தானே பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று, 4-ம் தேதி இரவு இதயத்தில் சிக்கல் எனச்சொல்லி ஒரேயடியாகக் கதையை முடித்துவிட்டார்கள். அவருடைய அண்ணன் மகள் தீபாவைக்கூட மருத்துவமனைக்குள் ஏன் அனுமதிக்கவில்லை? ‘எனக்கு கவுன்சிலர் பதவிகூட வேண்டாம். அம்மாவுக்கு சேவை செய்யத்தான் வந்துள்ளேன்’ என்று சொல்லித்தான் மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார் சசிகலா நடராஜன். இப்போது, கட்சியையும், ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆட்டிப்படைக்கும் இடத்துக்குப் போக இந்தக் கும்பல் ஆசைப்படுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கார்டன் பக்கம் தலைகாட்டாத நடராஜன், ‘இனி யார் தடுக்கமுடியும்?’ என்ற தைரியத்தில் ராஜாஜி ஹாலில் பரபரப்பாக நடமாடினாரே. அம்மா உயிரோடு இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?’’

‘‘ஜெயலலிதா தன் துறைகளைக் கவனிக்க பன்னீர்செல்வத்துக்குதான் அதிகாரம் கொடுத்தார். இப்போதும் அவர்தானே முதல்வராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். இதில், சசிகலா நடராஜனின் ஆதிக்கம் எங்கே இருக்கிறது?’’

‘‘அரசியலில், ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி என்பது கட்சியின் தலைமைதான். சக்திமிக்க அந்தக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத்தான் சசிகலா நடராஜன் கும்பல் முயற்சிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்.... அம்மா இறந்துபோன அதிர்ச்சியைத் தாங்காமல், அடிமட்டத் தொண்டர்கள் எல்லோரும் கதறித் துடித்தனர். ஆனால், சசிகலா நடராஜன் கும்பலில் ஒருவருடையை கண்களில் இருந்தாவது, ஒருசொட்டுக் கண்ணீர் கசிந்ததா? அந்த கும்பலில் பலர் சிரித்துக்கொண்டு நின்றதை நேரலையில் மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.  அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என எல்லோரையும் கீழே உட்கார வைத்துவிட்டு இவர்கள் குடும்பத்தினர்தானே சூழ்ந்து நின்றார்கள். இவர்கள் எல்லாம் யார்? கட்சிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இழவு வீட்டில்கூட, யார் உள்ளே வரவேண்டும், யாரெல்லாம் வரக்கூடாது என்று லிஸ்ட் போட்டுக் கொடுத்து வாசலிலேயே தடுத்து நிறுத்தியது எல்லாம் எதற்காக?

கார்டனுக்குள் வந்த சாதாரணப் பெண்தான் சசிகலா நடராஜன். கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் அவருக்கு என்ன தெரியும்? அதைக் கைப்பற்ற அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கவும் திட்டமிட்டு வேலை செய்துவருகிறார்கள். முதல்வர் வாழ்ந்து மறைந்த ‘வேதா இல்லம்’ புனிதமானது. அதை  நினைவு இல்லம் ஆக்க வேண்டும். ஜெயா டி.வி. உள்ளிட்ட அம்மாவின் சொத்துக்களை அரசுடைமை ஆக்கவேண்டும் அல்லது கட்சிக்கு சொந்தமாக்க வேண்டும்.’’

‘‘சசிகலா நடராஜன் தலைமை குறித்து இதுவரையிலும் கட்சிக்குள் யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பாத சூழலில், உங்கள் கருத்து எடுபடுமா?’’

‘‘எல்லோருமே உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நேரடியாக என்னைப்போல் எதிர்க்கப் பயப்படுகிறார்கள். சமயம் வரும்போது நிச்சயம் எதிர்ப்பார்கள். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு சசிகலா நடராஜன் பெயர் முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நானேகூட களத்தில் நிற்பேன்’’ என்று வார்த்தைகளில், அழுத்தமான அச்சாரம் போட்டு முடித்தார் சசிகலா புஷ்பா.

- த.கதிரவன்
படம்:கே.ராஜசேகரன்  விகடன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக