வெள்ளி, 30 டிசம்பர், 2016

எங்கே ஜெயலலிதாவின் கருப்பு பூனைகள் ? 11 கேள்விகள் ... ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு ..

ஜெயலலிதா ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அதுபற்றி என்.எஸ்.ஜி படையினருக்குத் தகவல் சொல்லப்பட்டதா?
2. அவ்வாறு சொல்லியிருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக என்.எஸ்.ஜி படையினர் சென்றார்களா?
3. மருத்துவமனைக்கு என்.எஸ்.ஜி போயிருந்தால் அந்தப் படையின் உயர் அதிகாரி, ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்பட்டாரா?
4. அதுபோன்று என்.எஸ்.ஜி படை உயர் அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு என்ன அறிக்கை அனுப்பினார்?
5. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தவிர, 75 நாட்கள் என்எஸ்ஜி அனுப்பிய தினசரி அறிக்கை என்ன? 75 நாட்களுமே காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் ஜெ-வை பார்க்க அனுமதிக்கப்பட்டார்களா?
6. அப்படிப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றால், ஜெ-வின் உடல்நிலை அறிக்கை பற்றி, என்.எஸ்.ஜி-க்கு இதுபோலதான் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று தகவல் கொடுத்தது யார் ?
7. ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல் அறிக்கை அனுப்பப்பட்டதா?
8. என்.எஸ்.ஜி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது?
9. இவை அனைத்தும் முறைப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்.எஸ்.ஜி ஏமாற்றப்பட்டதா?

10. அறிக்கை அனுப்பி இருந்தும் அதனை, உள்துறை அமைச்சகம் மறைத்து விட்டதா ?
11. ஜெயலலிதா போன்ற வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய என்.எஸ்.ஜி அதில் இருந்து தவறி விட்டதா? அல்லது உள்துறை அமைச்சகம் தவறு செய்துள்ளதா ?
பதிலளிக்க வேண்டியது, மத்திய உள்துறை அமைச்சகமே!
என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.வி- என்பது அதன் பொருள். குறிப்பிடுவார்கள்.

N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படையோ, ராணுவமோ செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பயங்கரவாதத் தாக்குதலை எத்தகைய நிலையிலும் முறியடிப்பதே இவர்களின் முக்கியப்பணி. மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது கூட இவர்கள்தான் களமிறங்கி பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி, வீழ்த்தினர். ஒரு குறிப்பிட்ட இடத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து விட்டால், இவர்கள் அங்கே களமிறக்கப்படுவார்கள். பின்னர் கனகச்சிதமாக இவர்கள், காரியத்தை முடிப்பார்கள். அதில் இவர்கள் வல்லவர்கள்.
இந்தப் பணி தவிர, இவர்களில் 515 வீரர்களுக்கு மற்றொரு முக்கியப் பணியும் அளிக்கப்பட்டது. அதாவது கொலை மிரட்டல், தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள வி.வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. இவர்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு Z-பிளஸ் பாதுகாப்பு என்று பெயர்.
பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும் ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப்பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.

இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே,  என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின், தற்போது கருணாநிதிக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படடுகிறது.
ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒருகுழு பாதுப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள் ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை தாங்குவார்.
கைகளில் எந்திரத் துப்பாக்கியும், ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்களும், வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பும் மட்டுமே இவர்களின் சொத்து. வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு மட்டுமே இவர்கள் இலக்கு.
இவர்கள் பாதுகாக்கும் அந்த வி.வி.ஐ.பி-க்களை P.P. என்று அழைப்பார்கள். Protected Person அதாவது பாதுகாக்கப்பட்ட மனிதர் என்பது அதன் அர்த்தம். அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, P.P 27 என்று அழைக்கப்பட்டார்.
என்.எஸ்.ஜி யைப் பொறுத்தவரை ஒரு வி.வி.ஐ.பி அவரது வீட்டில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.
ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள்,  பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.
ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் இருப்பிடத்திற்கு வந்த பிறகு உள்ளுர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் வி.வி.ஐ.பி-யை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகரும்.
ஒருவேளை அந்த வி.வி.ஐ.பி வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரோடு மெய்க்காவலர்கள் தவிர, ஒரு தலைமை என்.எஸ்.ஜி ரேஞ்சரும் உடனிருப்பார். வி.வி.ஐ.பி-யின் உயிரைப் பாதுகாக்க, இவர்களுக்கு எந்த சட்ட விதிமுறைகளும் தடையாக இருக்காது. அதே சமயம், முதல்வர் அலுவலகம், சட்டசபை ஆகியவற்றினுள் இவர்கள் வி.வி.ஐ.பி-க்களுடன் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சட்டசபை என்பது மக்கள் பிரதிநிதிகள் அரங்கம் என்பதால் அங்கு சபைக்காவலர்களைத் தவிர, வேறு எவரும் நுழையக்கூடாது.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதிக்கும், இசட் பிளஸ் பாதுகாப்பு உண்டு. ஒருமுறை உத்தரபிரதேச சட்டசபையில் அவர் இருந்தபோது கடும் அமளி காரணமாக, சட்டசபைக் கதவுகள் இழுத்து மூடப்பட்டு விட்டன. முதல்வரின் மெய்க் காவலர்களாலேயே ஒன்றும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டபோது, வெளியே நின்று இருந்த என்.எஸ்.ஜி கருப்புப் பூனை கமாண்டோக்களுக்குத் தகவல் பறந்தது. சட்டசபைக் கதவுகளை எட்டி உதைத்து திறந்துகொண்டு மாயாவதியைச் சூழ்ந்து கொண்டு, அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து பாதுகாப்பாய் வெளியே கொண்டு வந்தார்கள் என்.எஸ்.ஜி படையினர். அந்த அளவுக்கு, தாங்கள் பாதுகாக்கும் வி.வி.ஐ.பி-க்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எந்த ரேஞ்சுக்கும் இவர்கள் இறங்கலாம் என்பதுதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு.
தங்கள் பாதுகாப்பில் உள்ள வி.வி.ஐ.பி-க்களின் நகர்வுகள் பற்றியும் அவர்களின் உடல்நிலை உட்பட அனைத்து விவரங்களையும் தினசரி காலை ஆறு மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. அதன்படி ஒவ்வொரு வி.வி.ஐ.பி பற்றிய விவரங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு தினசரி காலை மற்றும் மாலை தெரிவிக்கப்படும். என்.எஸ்.ஜி பாதுகாப்பில் உள்ள  எந்த வி.வி.ஐ.பி-யும், அவர்களுக்குத் தெரியாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை மிகமிக அவசரமாக செல்லவேண்டி இருந்தாலும்கூட, அவர் வெளியே புறப்பட்டு விட்டார் என்ற தகவலும் எங்கே செல்கிறார் என்ற தகவலும் என்.எஸ்.ஜி-க்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அந்த வி.வி.ஐ.பி அந்த இடத்திற்குச் செல்வதுற்குள் என்.எஸ்.ஜி அங்கே சென்று பாதுகாப்பை டேக் ஓவர் செய்து கொள்வார்கள். ஒருவேளை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அந்த வி.வி.ஐ.பி அனுமதிக்கப்பட்டால், என்.எஸ்.ஜி குழுவின் உதவி ஆணையர், வி.வி.ஐ.பி-யைப் பார்த்து (அவர் ஐசியூவில் இருந்தாலும்கூட) தங்கள் தலைமை வாயிலாக, உள்துறை அமைச்சகத்திற்கு காலை மற்றும் மாலை ஆறு மணிக்கு வி.வி.ஐ.பி-யின் உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

கண்களால் பார்க்காமல் என்.எஸ்.ஜி அறிக்கை அனுப்ப மாட்டார்கள். ஒரு வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்புக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஆறு கோடியில் இருந்து பத்து கோடி வரை மத்திய அரசு செலவிடுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகள், தமிழ் தீவிரவாதக் குழுவினர், வீரப்பன் குழுவினர் எனப் பல்வேறு வகைகளில் கொலை மிரட்டல் இருந்ததாகவும், இரண்டு முறை லாரி ஏற்றிக் கொலை முயற்சி நடைபெற்ற காரணத்தினாலும் ஜெ,-வுக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கோரப்பட்டு, அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.அன்றிலிருந்து ஜெயலலிதா இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலும் என்.எஸ்.ஜி கமாண்டோ கருப்புப் பூனைப் படையினர் ஜெயலலிதாவைக் கண்போல பாதுகாத்து வந்தனர்.

vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக