சனி, 3 டிசம்பர், 2016

ரூ.1150 கோடி - அமைச்சர் இடப்பாடி பழனிசாமி... சம்பந்தி இராமலிங்கம் கட்டுமான காண்ட்ராக்ட் ..

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனத்தில், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் ரூ.1150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடக அரசு அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 5 கோடி புதிய நோட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனத்தில், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் ரூ.1150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதையடுத்து, இந்த வழக்கில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்குமா என்று, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கட்டுமான நிறுவனம்
கடந்த நவம்பர் 29ஆம் தேதி முதல்வர் சித்தராமய்யாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஸ் அதிகாரி மோகன் சக்ரவர்த்தி உட்பட, 2 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக அரசு சாலை மேம்பாட்டுத் துறையின் முதன்மைத் திட்ட அலுவலரின் பெங்களூரு வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் அவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினர்.
உறவுமுறை
பெங்களூருவில் தற்போது மிகப்பெரும் மேம்பால கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் கட்டுமான நிறுவனம், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனமாகும். அதாவது, கட்டுமானப் பணி நிறுவனத்தின் உரிமையாளர் எடப்பாடி பழனிசாமியின் மகனுக்கு சகலை முறை. அதாவது, அமைச்சர் மகனின் மனைவியுடைய சகோதரியின் கணவர். அந்தவகையில், இந்த நிறுவனத்தின் தலைமையிடம் ஈரோட்டில் இருக்கிறது.
போனது புகார்

இராமலிங்கம் கட்டுமான நிறுவனத்துக்கு கட்டுமானப் பொருட்களை சப்ளை செய்தவர்களும், அந்நிறுவனத்தின் சப்-காண்ட்ராக்டர்களும் தங்களுக்குக் கொடுக்கவேண்டிய கோடிக்கணக்கான பில் தொகையை கொடுக்காமல் இந்த நிறுவனம் இழுத்தடிப்பு செய்துவருவதாக, ஏற்கனவே பெங்களூரு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறையினருக்கும் புகார் தெரிவித்திருந்தனர்.
மாறியது ரூ.1150 கோடி
அதையடுத்து, பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள், பதுக்கிவைக்கப்பட்ட ரூ. 4.7 கோடி ரொக்கப் பணம் எங்கிருந்து மாற்றப்பட்டு வந்தது என்று விசாரணை செய்தபோது அவை, ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் மூலமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ஈரோட்டுக்கு வந்து நேரில் விசாரணை செய்தபோது அதில், ரூ.1150 கோடி பணமானது மொத்தம் 27 வங்கிகளின்மூலம் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டதையறிந்து வருமான வரித் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பெங்களூருவில், கட்டுமானப் பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கும், சப் காண்ட்ராக்டர்களுக்கும் சரியாக பணம் கொடுக்காத இந்நிறுவனத்துக்கு எப்படி, இந்தளவு பணம் உள்ளது என்று வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் குதித்தனர்.
எடப்பாடி பழனிசாமி சிக்குவாரா?
இந்நிலையில், இந்த கட்டுமான நிறுவனத்துக்கும் தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அமைச்சரின் பணம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்குமோ என்று, வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி முக்கியமானவர்களில் ஒருவர். நேற்றிலிருந்து அமைச்சர் கவலையுடன் யாருடனும் அதிகம் பேசாமல் அதிர்ந்துபோயுள்ளாராம்.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக