புதன், 30 நவம்பர், 2016

இந்தியாவில் இப்போது Govt sponsored கியூ மரணங்கள்.. ஏதாவது ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோல் நடந்திருக்கிறதா?

மோடி செய்தது பொருளாதார ரீதியில் சரியா தவறா என்பதையெல்லாம் கூட விடுங்கள். நான் கேட்பது மிக மிக மிக எளிமையான கேள்விகளை தான்.
அரசின் அவசரக் குடுக்கைத்தன ஆணையினால், ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்ய வக்கற்ற தன்மையினால் 70க்கும் அதிகமான ஏழை/வயதான குடிமக்கள் க்யூவில் மரணித்திருக்கிறார்கள்.
1) அந்த 70 பேரில் அம்பானி குடும்பத்தையோ அதானி குடுபத்தையோ சேர்ந்தவர்கள் யாராவது இருந்திருந்தால் இந்த அரசும், அரசுசார் ஊடகங்களும் இப்படியேதான் அதை பாராமுகமாக எதிர்கொள்ளுமா?
2)இந்தியாவில் இப்போது நடப்பதை போல Govt sponsored மரணங்கள் வேறெதாவது ஜனநாயக நாட்டில் நடந்திருக்கிறதா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தேசபக்தர்களுக்கு பிடிக்காத தேசங்களில் கூட Govt sponsored deaths என்பதை கேள்விப்பட்டதே இல்லையே!! ஹிட்லர் காலத்தில் குளிக்கலாம் வாருங்கள் என யூதர்களை அழைத்துப்போய் விஷவாயுவை ஷவர் வழியாக திறந்துவிடுவார்கள். இங்கே தேசநலன் என்ற பெயரில் கியூவில் நிற்க வைத்து சாகடிக்கிறார்கள்.

3)ஒரு தவறும் இழைக்காமல், பென்சனையும், சேமிப்பையும் எடுக்கச் சென்ற ஏழைகளும், முதியோர்களும் செத்து மடிவதை நாட்டின் முன்னேற்றத்திற்காக என தேசபக்தர்கள் நியாயப்படுத்துவதற்கும், அப்பாவிகளை குண்டு வைத்து கொன்றுவிட்டு புனிதப்போருக்காக என்றும், பெரிய காரணத்திற்காக சிறிய இழப்பு என்றும் தீவிரவாத இயக்கங்கள் நியாப்படுத்துவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? இனி தீவிரவாத இயக்கங்களை குறை சொல்லும் தார்மீக உரிமை அரசுக்கு இருக்கிறதா?
4) விபத்தினால், நோயினால், பயங்கரவாதத்தினால் என வேறுஎந்த வகையிலும் மக்கள் உயிர் விடுவதை என்னால் வருத்தத்துடன் ஏற்க முடிகிறது. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் மரணங்களுக்கு அரசும், அரசின் ஆணையும் காரணமாக அமைவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
5)மனித மரணங்களின் வேடிக்கையே அவை அடுத்தவன் வீட்டில் நிகழும் போது நம்மை பெரிதாக பாதிப்பதில்லை என்பதுதான். அரசின் அடாவடியால், திட்டமிடாமையால் உயிரிழந்த இந்த 70 பேரும் நம்மைப் பொறுத்தவரை ஒரு செய்தி. அதனால்தான் அம்மரணங்களை நம்மால் எளிதாக கடந்துபோய்விட முடிகிறது. அதனால்தான் நம்மில் சிலரால் அரசின் இந்த மடமையை, சாடிச போக்கை மனசாட்சி இல்லாமல் நியாயப்படுத்த முடிகிறது. இந்த 70 பேரில் ஒருவரை உங்கள் அப்பாவாகவோ, அம்மாவாகவோ, சகோதரனாகவோ, தாத்தா-பாட்டியாகவோ கற்பனை செய்து பாருங்கள். இப்படியா ஆதரவளித்துக் கொண்டிருப்பீர்கள்? இன்று மோடிக்கு ஆதரவாக நீட்டிமுழக்கும் எச்.ராஜா வீட்டிலேயோ, எஸ்.வி.சேகர் வீட்டிலேயோ அல்லது அவரது ஆதரவாளர்கள் யாரின் வீட்டிலோ இப்படியோர் மரணம் நிகழ்ந்தால் இப்படியா ஆதரித்து பேசிக் கொண்டிப்பார்கள்? முதல் ஆளாக வெறிகொண்டு எதிர்த்திருப்பார்களா இல்லையா?
6) பணக்காரர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள். ஏழைகளைக் காப்பாற்றத்தான் அரசு. ஆனால் 4% பெரும் பணக்காரர்களை குறிவைத்து தாக்கி பணத்தைக் கைபற்ற வக்கில்லாமல், ஒட்டுமொத்தமாக எல்லோர் மீதும் ஆசிட் மழையை திறந்துவிட்டிருக்கிறது அரசு. அதிலும் டெபிட் கார்டு/க்ரெடி கார்டு, மேலைநாட்டு வாசம் என பாதுகாப்பான கூரைகளில் ஒதுங்கி இருக்கும் 20% மக்கள், கூரைகளின்றி கருகிக்கொண்டிருக்கும் 80% மக்களைப் பார்த்து நாட்டுக்காக பொறுத்துக்கொள் என்கிறார்கள். இதைப் போல ஒரு மனசாட்சியற்ற குடிமக்கள் வேறெந்த நாட்டிலாவது இருப்பார்களா?
7) மக்களே மக்களை ஆளுவதுதான் ஜனநாயகம். அரசர்களின், சர்வாதிகாரிகளின் ஒற்றை ஆள் முடிவுகளால் மனித இனம் பட்ட இன்னல்களில் இருந்தெல்லாம் கற்றுதான் ஜனநாயக ஆட்சிமுறைக்கு மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை மக்கள் எடுக்கமுடியாது என சர்வாதிகாரத்தனமாக ஆணையிடுகிறார் மோடி. நியாயமாக நமக்கு சூடு, சுரணை வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.
70 பேர் இறந்ததற்கு கொஞ்சம் மனிதாபிமானமாவது எட்டிப் பார்த்திருக்க வேண்டும். குஜராத்தையே இலேசில் ஊதிவிட்ட நமக்கு அதுவும் இல்லை.
எனது இந்தப் புலம்பலுக்கும் கூட நாலு பேர் வந்து மோடி ஆதரவு பதில்களைத் தருவார்கள். ஆனால் ஒன்றே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அநியாயம் செய்கின்றவர்கள் வரலாற்றில் தீயவர்களாக பதிவு செய்யப்படுவார்கள். ஆனால் களங்கம் அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள் மீதே அதிகம் படிகிறது.
-டான் அசோக். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக