செவ்வாய், 15 நவம்பர், 2016

சசிகலா புஷ்பா எபிசொட் : முதல்வரை சதியில் இருந்து காப்பாற்றி விட்டேன்!

சிகலா புஷ்பா மீது அடுத்தடுத்த வழக்குகளைத் தொடுத்து நெருக்கடி கொடுத்தாலும், அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு அதிர வைத்துக் கொண்டிருக்கிறார். ' முதல்வரைச் சுற்றியிருந்தவர்களிடம் இருந்து அம்மாவைக் காத்துவிட்டேன்' என அவர் இன்று வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோ வைரலாகியிருக்கிறது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோடு முரண்பட்டதால், மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்த வழக்குகள் தொடரப்பட்டன. பணிப் பெண்கள் தொடர்ந்த வழக்கில், சட்டரீதியாகவே போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஐம்பது நாட்களுக்கும் மேல் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் ஜெயலலிதா. ' முதல்வரைச் சுற்றிலும் மோசடி நடக்கிறது; முதல்வர் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்த உள்ளனர்' என்றெல்லாம் அதிர வைத்தார் சசிகலா புஷ்பா. முதல்வரின் உடல்நிலையைவிடவும், சசிகலா புஷ்பாவை சமாளிப்பதுதான் சசிகலாவுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
அவரை சமாதானப்படுத்த ராஜாத்தி அம்மாள் மூலமாக தூது அனுப்பிய சம்பவமும் நடந்தது. எந்த சமாதானத்தையும் அவர் ஏற்காததால், பணிப் பெண்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சனின் வீட்டைத் தாக்கியதாகவும் சசிகலா புஷ்பா மீது வழக்குப் பாய்ந்தது. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், பா.ஜ.க தலைவர்களை சந்திப்பது, தென்மாவட்ட மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு அமைச்சர்களை சந்தித்துக் கோரிக்கை வைப்பது என டெல்லியில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் வாட்ஸ்அப் உரை ஒன்றை வெளியிட்டார் சசிகலா புஷ்பா எம்.பி. அதில், ' அண்ணா தி.மு.கவின் நிரந்தர பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான அம்மாவின் கட்சிப் பதவிக்கு எதிராக சிலர் சதி செய்ததை, கட்சியின் எம்.பி என்ற முறையில் முறியடித்தேன். தங்களது கனவு தகர்ந்துவிட்டதால் அதிர்ந்து போன அவர்கள் எனக்கு எதிராக பல வகைகளில் சதிவேலை செய்து வருகின்றனர். எத்தகைய நெருப்பாற்றிலும் நீந்தும் சக்தியும் துணிவும் எனக்கு உண்டு. எத்தகைய மிரட்டலுக்கும் சற்றும் அஞ்சாமல், எந்த சதியையும் முறியடிப்பேன். அரசியமைப்புச் சட்டப்படி முதல்வரின் பதவிக்கு எந்தவிதக் களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்து, மக்கள் உணர்வுக்கு மதிப்பும் நட்புக்கு மரியாதையும் காட்டிய பாரதப் பிரதமர் மோடிக்கு தொண்டர்களின் சார்பாக, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வரவிருக்கின்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, நெல்லித் தோப்பு ஆகிய தேர்தல்களில் கழகத்திற்கு வெற்றியைத் தேடித் தருமாறு தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் யார் மீதும் வெறுப்பு காட்டாமல், என்னுடைய மக்கள் பணி துணிவுடன் தொடரும்' என அதிரடியாக பேசியிருக்கிறார்.


மோடிக்கு நன்றியும் தொண்டர்களுக்கு இடைத் தேர்தல் அறிவுரையும் சொல்வதன் மூலம், அடுத்தகட்ட காய் நகர்த்தல்களுக்கு சசிகலா புஷ்பா தயாராகிவிட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  ஆர்.விஜயானந் விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக