புதன், 2 நவம்பர், 2016

தி.நகரில் தனியாக இருந்த மூதாட்டி சாந்தி கொலை .. கொள்ளை

சமீபகாலமாக வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்தே பெரும்பாலான கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை தி.நகரில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள ஒரு வீட்டில் சாந்தி (65) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே, அவர் தனியாக வசித்து வந்தார். அவர் வீட்டில் பணிபுரியும் பணியாட்களும், பணியை முடித்துவிட்டு சென்று விடுவார்கள். மேலும், அவர் தனிமையில் இருந்த காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அவரது அப்பாவின் பென்ஷன் வந்து கொண்டிருந்தது. மன அழுத்தம் காரணமாக அவர் வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் பால்காரர் பால் பாக்கெட் போட வந்துள்ளார். ஆனால், அந்த பாலை வாங்க சாந்தி வெளியே வரவில்லை. ஆனால், வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த பால்காரர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சாந்தி, கொலை செய்யப்பட்டு இறந்திருந்தார். அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கொலை சம்பவம் பற்றி விசாரணை செய்தனர்.
அவர் வீட்டில் தனியாக இருந்ததால், வீட்டுக்குள் நுழைந்த குற்றவாளிகள், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை நகைகளை கொள்ளையடிக்க நடந்ததாக தெரியவில்லை. ஏனெனில் அவர், நகை மற்றும் பணம் என அனைத்தையும் வங்கி லாக்கரில் வைத்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார்? சொத்து பிரச்னை ஏதும் பின்னணியில் உள்ளதா? என்பது தெரியவில்லை.
சாந்தியின் வீட்டுக்கு எதிரில் உள்ள நிறுவனத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதிலிருந்து தகவல் கிடைக்கலாம் என போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். முதியோர்களுக்கு எதிராக இந்தியாவில், மொத்தமாக 20,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், குறிப்பாக, சென்னையில் கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் சொத்துக்காக, தனித்து வாழும் பணக்காரர்களை கொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், போலீஸார் இதற்கு சரியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக