வியாழன், 3 நவம்பர், 2016

சசிகலா புஷ்பா கைதாக வாய்ப்பு இருக்கிறது? தடை உத்தரவு செல்லுபடியாகுமா?

அ .தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா மீது தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் மனு தொடர்பாக நீதிமன்றம் தெளிவுபடுத்தாததால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அவரது வழக்கறிஞர்கள். ' இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கைது நடவடிக்கை பாய்ந்துவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்திலேயே அதிரடியைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதன்பிறகு, சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. இதில், சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் அளித்த பாலியல் தொடர்பான புகார் மிக முக்கியமானது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை எதிர்த்து, நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கினார். இதற்கிடையில், பணிப்பெண்கள் இருவரும் வழக்கை வாபஸ் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் இதனை கடுமையாக எதிர்த்தார். பணிப்பெண்களும் புகாரை வாபஸ் வாங்க வரவில்லை. இதனால், கோபமான சசிகலாவின் ஆதரவாளர்கள் சுகந்தியின் வீட்டைத் தாக்கியதாகவும் வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், 'வழக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக' உத்தரவிட்டார் நீதியரசர். ஆனால், கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உத்தரவிடவில்லை. இதனால், 'அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளும்கட்சி ஏதேனும் கைது நடவடிக்கையில் ஈடுபடுமா' என்ற கேள்வியும் அவரது வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
" பணிப்பெண்கள் தொடர்ந்த வழக்கில் நவம்பர் 2-ம் தேதி (இன்று) வரையில் கைது செய்வதற்கான தடை ஆணை பெற்றிருந்தார் சசிகலா புஷ்பா. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ' இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கை எடுத்துக் கொள்வதாக' தெரிவித்தார் நீதியரசர். ஆனால், கைது செய்வதற்கான தடையை அவர் நீட்டிக்கவில்லை. அதுகுறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தையும் குறிப்பிடவில்லை. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எங்களது வழக்கறிஞர்களும் இதைப் பற்றி நீதியரசரிடம் தெரிவிக்கவில்லை. எனவே, ' கைது செய்வதற்கான தடை நீடிக்கிறது' என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆளும்கட்சி தரப்பில் சசிகலாவை கைது செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு செயல்படும் முடிவில் அரசு இருந்தால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கான பணிகளில் இறங்குவோம்.
சசிகலா புஷ்பாவை வழிக்குக் கொண்டு வருவதற்காகத்தான், அடுத்தடுத்த பொய் வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். வழக்கறிஞர் சுகந்தி வீட்டைத் தாக்கியதாகவும் அவர் மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டது. இப்போதும், 'சசிகலா புஷ்பா அமைதியாக இருக்க வேண்டும்' என்றுதான் முதல்வருக்கு அருகில் உள்ளவர்கள் இயங்குகிறார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர் தீவிரமாக இயங்குகிறார். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரையில், மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது" என்கிறார் அவரது வழக்கறிஞர் ஒருவர்.< />
- ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக