திங்கள், 28 நவம்பர், 2016

தோழர்கள் மூர்த்தி ,அஜிதா கொலைகளை விசாரிக்க கேரளா அரசு உத்தரவு

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மனித உரிமை ஆணையம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், கருளாயி வனப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் குப்பு தேவராஜ், அஜிதா என்ற இரண்டு மாவோயிஸ்டுகளைச் சுட்டு கொன்றனர். இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர் அறியப்பட்டனர். மாவோயிஸ்டுகளிடம் நேரடியாக நடந்த துப்பாக்கி சண்டையில் இவர்கள் கொல்லப்பட்டதாக கேரள போலீஸார் கூறினர். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர் கேரள மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி மோகன்குமார், இதுகுறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, இதுகுறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பெரிந்தல்மன்னா சப் கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்காக போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குப்பு தேவராஜ் உடலில் 11 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 4 துப்பாக்கி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அஜிதா உடலில் 7 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான காயங்கள் உள்ளன. அவரது உடலில் 6 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் காணப்பட்டன. மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதில் மர்மம் இருப்பதாக கூறி உடல்களை வாங்க முடியாது என்று அவர்களது உறவினர்கள் கூறி விட்டனர்.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக