அமர்வின் தொடக்கத்திலேயே நீதிபதி தாகூர், ‘மக்கள் பணத்தை தேடியலைகின்றனர். மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படுவதே பிரச்னையின் தீவிரத்தையும் பரிமாணத்தையும் அறிவுறுத்துவதாக உள்ளது. மக்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர். நாங்கள் அரசுக்காக கதவுகளை அடைக்க முடியாது’ என்று, அரசின் மனுவுக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
மேலும் ‘இந்தப் பிரச்னை அவ்வளவு சாதாரணமல்ல; மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இது மிகுந்த பரிசீலனைக்கு உரியது. மக்கள் பணத்துக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்’ என்று நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்தது.
இதை மறுத்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ‘இது முற்றிலும் தவறு. மக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்’ என்றார். இடைமறித்த உச்சநீதிமன்ற அமர்வு, ‘இல்லை! மக்கள் அல்லல்படுகின்றனர், இதை ஒருவரும் மறுக்க முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவிப்புக்குப் பிறகு 47 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவே’ என்றார். இதற்கு தலைமை வழக்கறிஞர், ‘மக்கள்மீது அக்கறை இல்லையெனில் நாங்கள் மணிக்கொருதரம், நாளுக்கொருதரம் அறிவிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருப்போமா? மக்கள் கூட்டத்தின் அளவு குறைந்துகொண்டுதான் இருக்கிறது’ என்றார். இதற்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், அரசிடம் போதுமான பணம் இல்லையா என்ற தொனியில், ‘ரூ.100 நோட்டுகள் தட்டுப்பாடா? அந்த நோட்டுகள் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்படவில்லையே. ஏன், 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாறு செய்யப்படவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முகுல் பதில் கூறும்போது, ‘ஆம். ரூ.100 நோட்டுகள் போதுமான அளவில் இல்லை. ஏனெனில், நவம்பர் 8 அறிவிப்புக்குமுன்பு தற்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளே மொத்த பணப் புழக்கத்தில் 80 சதவிகிதம் இருந்துவந்தது. பணத் தட்டுப்பாடு இல்லை. நாடு முழுவதும் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் புதிய நோட்டுகளைக் கொண்டுசேர்ப்பதில் பிரச்னை’ என்று கூறினார்.
இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த கேள்வியைத் தொடுத்தனர். ‘பணமாற்று வரம்பை ரூ.4,500லிருந்து ரூ.2000 ஆக குறைக்கப்பட்டது ஏன்? சாமானிய மக்களின் கடினப்பாடுகளை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளபோதும் வரம்பு குறைக்கப்பட்டது எப்படி?’ என்றார்.
இதற்கு முகுல், ‘பெட்ரோல் நிலையங்களில் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமணங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கு குறுக்கிட்ட கபில் சிபல், ‘மெர்சிடஸ் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் நிலையங்களில் கார்டை தேய்க்கலாம், விவசாயிகள் செய்ய முடியாது. நாட்டு மக்கள்தொகையில் பெரும்பாலானோர் மாதமொன்றுக்கு ரூ.10,000க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இது கறுப்புப் பணம் அல்ல. ஒரு குடும்பமே 20 கி.மீ. நடந்துசென்று பஸ்தாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் மாற்றச் செல்கிறது. 23 லட்சம் கோடி நோட்டுகளில் சுமார் 14 லட்சம் கோடி நோட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதி 9 லட்சம் கோடி நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன’ என்றார்.
இதற்கு முகுல், ‘கபில் சிபல் அரசியல் பேசுகிறார். நாங்கள் உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பை பார்த்துள்ளேன்’ என்றார். இதற்கு சற்றே காட்டமாக பதிலளித்த கபில் சிபல், ‘என்னுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நீதிமன்ற அறையிலா நடைபெற்றது? தேவையில்லாமல் அதைப்பற்றி இங்கு ஏன் பேசுகிறீர்கள்?’ என்று வெகுண்டெழுந்தார்.
இதையடுத்து, மத்திய அரசும் கபில் சிபலும் நவம்பர் 25ஆம் தேதியன்று, ரூபாய் நோட்டு நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் உண்மை நிலவரங்களையும் அடிப்படையான கடினப்பாடுகளையும் தரவுகளுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டு விசாரணையை தள்ளிவைத்தார் நீதிபதி தாகூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக