புதன், 23 நவம்பர், 2016

ஒவ்வொரு முறையும் மத்தியரசு ஏழைகளை மிக மோசமாக ஏமாற்றியுள்ளது…

நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன் என்கிறார் அந்த வங்கி ஊழியர்.
bastar-demonetisation
கிராமப்புற இந்தியாவின் நிலைமை படுமோசமான நிலையை அடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான பணத்தாள்களே கிராமப்புற வங்கிகளுக்குச் சென்றடையும் நிலையில் நிலைமையைச் சமாளிக்க வங்கி ஊழியர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் உள்ள கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போன நிலையில் பணமும் தீர்ந்து போய் மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரியும் வி.எம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இதே போன்ற சூழ்நிலையை தானும் எதிர்கொள்வதை தனது முகநூல் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கிக் கிளைக்குப் பல நாட்களாக பணம் அனுப்பப்படாத சூழலில் இருந்த ரொக்கமும் தீர்ந்து போன நிலையை விளக்கும் அவரது பதிவு நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.
“ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..” என்கிறார் அந்த வங்கி ஊழியர். அவரது முகநூல் பதிவு சுமார் 2500 பேரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.
இதோ அவர் எழுதியது :
ஓ… எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது! நான் ******வங்கியின் கிராமக் கிளையில் பணிபுரிகிறேன். ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..
ஏனெனில் அவர்களது கண்களைப் பார்த்து சில பெரிய நன்மைகளைக் கருதியும் தேச நலன் கருதியும் இந்த நிலையை அனுபவித்தாக வேண்டுமென்றும், இதனால் கருப்புப் பணம் ஒழிந்து போகுமென்றும் என்னால் விளக்க முடியவில்லை.. கருப்புப் பணம் இருக்கிறதோ இல்லையோ.. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்புமுறை அவர்களை மிக மோசமாக ஏமாற்றியுள்ளது…
இங்கே அரசு மருத்துவமனைகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளோ பழைய நோட்டுக்களை வாங்குவதில்லை. நீங்கள் கூச்சலிடுவது புரிகிறது; ஆனால், கொழுத்துப் போன மேட்டுக்குடி புட்டங்களே, உங்கள் அன்புக்குரியவர்கள் என்று வரும் போது அரசு மருத்துவமனைகளை நீங்கள் நம்புவதில்லை தானே! தயவு செய்து கொஞ்சம் நேர்மையாக இருங்கள். தயவு செய்து இந்த மேட்டுக்குடித்தனத்தை விடுங்கள்.
இவை ‘அசௌகரியங்கள்’ அல்ல. இப்போது இது ஒரு குற்றம். இது மனித உரிமை மீறல். மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். வரிசைகளில் காத்திருக்கும் போது இறந்து போயிருக்கிறார்கள். பழைய நோட்டுக்களை வாங்காத மருத்துவமனைகளில் இறந்து போயிருக்கிறார்கள். வங்கிகளில் பணிபுரியும் போது இறந்து போயிருக்கிறார்கள். மிகக் கேவலமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால் நிகழும் மரணங்களை சில பெரிய நன்மைகளைக் காட்டி உங்களால் நியாயப்படுத்த முடியுமா?
எனக்கு மற்றவர்களின் இரத்தக்கரை படிந்த எந்த நன்மையும் தேவையில்லை. ஆமாம், இந்த நன்மை என்பது வருமானச் சமநிலையை அளித்து விடப்போகிறதா? அது முடியுமா? உங்கள் உட்கட்டமைப்புகளே தயாராக இல்லாத நிலையில் எதற்காக இந்த அவசரம்? தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற உங்களது அவசரத்திற்காக மக்கள் இறந்து போயிருக்கிறார்கள்.
கருப்புப் பணத்தால் உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது. இது தான் தேசபக்திக்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கமென்றால், அந்த தேசபக்தியைத் தூக்கி நரகத்தில் போடுங்கள். யாரோ ஒருவருடைய ‘பெரிய நன்மையை’ கருதி மக்களை சாகவிடாது எனது தேசபக்தி..!
மூலக்கட்டுரை :  வினவு,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக